ஒரு காதல் கதை
பூஜாக்குடலை ஏந்தியபடி
பூப் பறித்துக் கொண்டிருந்தது
ஒரு பெரிய பூக்குவியல் ஒன்று
அவைகள் பூஜித்துக் கொண்டுதானே
இருக்கின்றன
அவைகளை ஏன் பறிக்க வேண்டும்
கடவுள் கேட்டாராக்கும்
எனும் பழைய கேள்விகளையெல்லாம் மறந்தவனாய்
ஒன்றும் பேச முடியாதவனாய்
அவன் அவளைப் பார்த்தான்.
என்ன? என தன் முகத்தில்
ஒரு கேள்வியை வரைந்து காட்டினாள் அவள்.
இல்ல, இதைவிட
நல்லதாய் ஒன்று செய்யலாமே என்றான்
பளாரென்று அவன் முகத்திலறைந்ததுபோல்
காதல் பண்ணலாம் என்கிறாயா? என்றது
அழுத்தமான அவள் பார்வைதான்
சற்றே அதிர்ந்தாலும்
ஆமாம் அதேதான் என்பதை
உறுதியாகவே சொல்லின
அவன் இதழ்கள்
அன்று முதல் அவள்
எல்லாப் பூக்களையும் போலவே
இவ்வுலகைப் பூஜிக்கும் ஒரு
பூக்குவியலாக மட்டுமே
ஆகிவிட்டாள்.