இந்த மனிதனைப் பார்த்திருக்கிறீர்களா?
ரொம்ப ரொம்பத்
தீவிரமான ஒரு மனிதனைச்
சந்திக்க நேர்ந்தது.
நாம் படைத்த பெரும் பெரும்
இலக்கியங்களைக்கூட
பொழுது போக்குகளாகத்தானே
ஆகிக் கிடக்கின்றன என்கிறான்.
இவன் கோளாறுதான் என்ன
உனக்கு என்னதான் வேண்டும்
எனக் கேட்டால்
அதை நீங்கள்தானே
கண்டுபிடிக்க வேண்டும் என்கிறான்.
(அதாவது ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க வேண்டுமாம்)
நீங்கள் இந்த மனிதனைப்
பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லையா?
அவனை நான் பார்த்துவிட்டேன்
அவன் இடத்தையும் அறிவேன்.
(நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் தானே
இருக்க வேண்டும் அவன்?)
மெதுவிஷமும் பற்ற இயலா
அந்தப் புது மனிதன்!
மாற்றப் படாத வீடு என்று
குழப்பங்களையும் போர்களையும்
துயர்களையும் சுட்டுகிறான்
என்ன செய்ய எனத் துவள்கையில்
தோள் தொட்டு
மின்னற் பொழுதே தூரம் என்கிறான்
அய்யோ அய்யோ
நாம் கொளுத்தி வளர்த்துவிட்ட தீயை
நாம் தானே அணைக்க வேண்டும்
அவசர அவசரமான பணிகள்
எத்தனை எத்தனை எனத் தவித்தால்
தீயைத் தீயென
நாம் கண்டு கொண்டால் போதும்
தயாராய்க் காத்து நிற்கின்றது
பூட்டிக் கிடக்கும் பொன்னுலகைத் திறந்துவிட
அருட்பெருஞ்சோதியின்
தனிப்பெரும் கருணை என்கிறான்
குளித்துக் கரையேறாத கோபியர்கள் எனச் செல்லமாய்
மானுட சமுத்திரக் குழந்தைகளை
தன் மாயக் கண்ணாடியில் காட்டுகிறான்