ஒரு விசாரணையும் தெளிவும்
வசுதைவ குடும்பகம் என்பதையோ
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதையோ
கடவுளைத் தந்தை எனக் கொண்ட தேவகுமாரனையோ
என்றைக்கு நாம் அறிந்து கொண்டோம்?
உலகப் பயணம் வாய்த்த போது தெரிந்ததா?
அடுக்கக மாடிக் கட்டடங்கள் எழும்பிய போது தெரிந்ததா?
தொழில்நுட்ப வளர்ச்சியால்
உலகம் ஒரு குட்டி கிராமமாகி விட்டபோது தெரிந்ததா?
எத்தகைய மதங்களாலும் ஞானிகளாலும் மாமனிதர்களாலும்
கடவுள்களாலும் சொற்களாலும் தத்துவங்களாலும்
இயலவில்லை என்பது புரிந்ததா?
இனம் என்பதும் சாதி என்பதும் மதம் என்பதும்
நாடு என்பதும்தான்
மானிடத் துயரின் விஷவேர் என்பது புரிந்ததா?
அமைதியின் பேரின்பக் கஞ்சி குடிப்பதற்கிலார்
அதன் காரணங்கள் யாதெனும் அறியுமிலார்
அய்யகோ அய்யகோ என்று
அலறும் துடிப்பினையுமிழந்து நின்றார்
இந்த நிலை கெட்ட மனிதனை உயிர்ப்பிக்கத்தானே
நீங்காத நெஞ்சப் பொறுப்புடனே
பார்வையில் மட்டுமே பிறக்கும்
பாதையினைத் தெரிந்து கொண்டவர்களாய்
பார்க்கத் தொடங்கியிருக்கிறோம், நாம்?