சித்தார்த்த ராத்திரி
ஒவ்வொன்றாய் திரைகளனைத்தையும் விலக்குதலோ
சுற்றிச் சுற்றிச் சேலை களைதல்?
திரைகளனைத்தும் நீங்கி
நிர்வாணம் காணவேண்டிய அரங்கில்
ஒரு பேண்டேஜ் கட்டாய் உன் பிரா!
தரிசனம் தந்த அதிர்ச்சியா?
ஏன் ஏன் என்னவாயிற்று உனக்கு என
என்னை உலுக்குகிறாய் நீ
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறேன்
இல்லை ஏதோ இருக்கிறது…
என்றாலும் நீ
எதுவும் கேட்டுக்கொண்டிருக்கவில்லை
அரவணைத்தன உன் கைகள் என்னை.
அரவணைப்பை துய்க்காது
விலகி ஓடி அழலாமோ இதயம்?
சற்று நேரம் அல்லது 2500 ஆண்டுகள் கழிந்து
மீண்டு திரும்பியவன் காண்கிறேன்;
என் மாம்ச உடம்பின்மீது உன் கரம்
ஒரு சிகிச்சைக் கட்டாய் தழுவியிருப்பதை.
- பூமியை உதறி எழுந்த மேகங்கள்(1990) கவிதை தொகுப்பில் இருந்து