குளித்தல்
அவன், ஆடை களைகையிலும்
குளிக்கையிலும்
புத்தாடை அணிகையிலும்
யாருமில்லாதபடி அறையடைத்தபடி
தனியாகத்தான் செய்கிறான்
அழுக்கேறியவைகளைக்
களைந்து துவைத்துக் காயப்போட்டு
புத்தாடைகளாக்குகிறான்
புதிய ஆடைகளுக்கே அவன்
தன் தலையையும் கைகால்களையும்
அளிக்கிறான்!
அழுக்காடைகளுடன் அலைகையில்
அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது
அல்லது அவனுக்குப் பைத்தியம்பிடித்தே
அழுக்காடைகளுடன் அலைகிறான்
குளித்தல் என்பதன் முழுமுதற் பொருள்
தன்னைத் தூய்மை செய்து
தூய்மையில் திளைத்தல்தான் இல்லையா?
எத்துணை குளிரான பொழுதிலும்
குளித்து முடித்ததும்
நம்மை வந்து தழுவிநிற்கும்
ஒரு புதுக்குளிர்மையை
பாருங்கள், புரியும்!
நமது ஆன்மாவும் உடலும்
வேறு வேறில்லை என்பதும்!