உள்ளதுதான் மதம்
உள்ளதுதான் மதம்
நம்மால் உருவாக்கப்படுவதோ
உருவாக்கப்பட்டு
கடைபிடிக்கப்படுவதோ அல்ல
நல்லதுபொல்லதுகள் கொடுமைகள்
போட்டிகள் பொறாமைகள் மெதுவிஷங்கள்
பெருங்கொலைகள் பிரிவுகள் போர்கள் எல்லாம்
நம்மிலிருந்தும் நம்மால் கட்டப்பட்டும்
கடைபிடிக்கப்பட்டும் வருகிற
மதங்களிலிருந்தே பிறக்கின்றன
உள்ளதாம் மதத்திலிருந்து அல்ல
அன்பு என்பதும் அழகு என்பதும்
அறம் என்பதும்
உள்ளதாம் மதத்திலிருந்தே பிறக்கின்றன
நானிலிருந்தும் நம்மால் கட்டப்பட்டும்
கடைப்பிடிக்கப்பட்டும் வருகிற
மதத்திலிருந்தல்ல
அப்படியானால்
ஆலயங்கள் தரும் அமைதி நிம்மதி
ஆசுவாசம் அனைத்தும் பொய் என்கிறாயா?
அன்பா,
யாரும் இதற்குச் சொல்லும்
பதிலை நீ நம்ப வேண்டாம்
நம்புவதும் நம்பாமலிருப்பதும் ஒன்றேதான்
நீயேதான் கண்டுபிடி.
கவிஞன் என்று வந்துவிட்டதனால்
ஒன்று சொல்கிறேன்:
சாத்தான் தன்னைச் சாத்தான் என்றா
சொல்லிக்கொண்டு வருவான்?
கடவுள் என்றுதானே
சொல்லிக்கொண்டு வருவான்?
சாத்தான் வரும் வழிகளும் உலவும் வழிகளும்
சாத்தானுடையது போன்றா இருக்கும்?
கடவுளுடையது போன்றுதானே இருக்கும்?
துயர்களுக்கும் போர்களுக்கும் காரணமான
அன்பில்லாத, மதமில்லாத, ஓர் உலகை
சாத்தான்தானே படைத்திருக்க கூடும்?
நாம் எத்துணை எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
என்பதை அறிந்துகொள்ளும்வரை
உய்வில்லை, இல்லையா அன்பா?