இளைப்பாறுதலும் ஒளியும்
துயரப்படுவோரை நோக்கி
”என் அருகில் வாருங்கள்
நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருகிறேன்” என்றீரே
அய்யா, இவ்வுலகில் ஏராளம்பேர்
நீங்கள் சொல்லும் இளைப்பாறலை நாடாது
மூடத்தனங்களின் கீழ்
இளைப்பாறிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?
இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
அவர்களை வெளியே இழுத்து வந்து
முதலில் இந்த உலக துயர்களுக்குள்ளேயல்லவா
நாம் அவர்களை தள்ள வேண்டியிருக்கிறது?
அய்யா, இப்போதும் இவ்வுலகில் ஏராளம்பேர்
உங்கள் அருகில் வந்தமர்ந்து உங்களை துதித்தபடி
அதே மூடர்கள் போன்றுதானே
இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்?
இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
நீங்கள் அவர்களைத்
தங்களுக்கு உள்ளேயே இழுத்து வந்து
நீங்கள் இருக்கும் மெய்யான இடத்தையல்லவா
சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது?
தான் அழிந்த போது கற்றுக்கொண்ட
மெய்ம்மையை ஒவ்வொருவனும்
தான் இல்லாமல்தானே பரப்புகிறான்?
இருளை அழித்த ஒளி
அதைப்பற்றியா பேசிக்கொண்டிருக்கிறது?
பேசினாலும்
பெருமை சிறுமையுடனா பேச முடியும்?
இருள் என்றிருந்தது தான்தான் என்பதை
அறிந்துதானே ஒளியானது?
ஒளி என்பதும் தன்னை உணர்கையிலெல்லாம்
தன்னை அழித்துக்கொண்டே இருப்பதாலல்லவா
அது ஒளியாகவும் பேரொளியாகவும் உள்ளது?