இந்த அமைதியை
கொல்கத்தா பக்கம் கட்டிஹார் என்ற
சிறு நகரத்திலிருந்தது அவர்கள் இல்லம்.
சாலை ஒலிகளும் பள்ளிக்கூட ஓசைகளும்
ஒளிரும் அழகிய இடம்.
இந்த பெங்களூரு உபவனத்து
அடுக்ககக் கூட்டு வீடுகளின் அமைதியைத்
தாங்கமுடியவில்லை அவருக்கு.
அவன் சொன்னான்:
இந்த அமைதியைக்கொண்டு
என்னவெல்லாம் செய்யலாம் என
மேலும் அவன் விவரித்தான்.
அவர் சொன்னார்:
நான் என் ஓய்வுநேரம் ஒன்றில்
பஜனை பாட்டு வகுப்புக்கு
போகிறேன் என்றார்.
நல்லதுதான். எந்தப் பாட்டு என்றாலும்
இந்த அமைதியை விரட்டுவதற்காக அன்றி
இந்த அமைதியிலிருந்து
இந்த அமைதியை விளம்புவதற்காகவே
அது பிறந்திருந்தால்
அது எத்துணை நன்றாக இருக்கும்?
விடைபெறும்போது அவன் முகம்
அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்க
அவர் அதைக் கவனித்தாரா இல்லையா
என்று தெரியவில்லை…