Monday, October 30, 2023

புன்னகையுங்கள்! புன்னகையுங்கள்!

கடவுள் படைத்த இவ்வுலகில்
கடவுளின் ராஜ்ஜியம் இல்லாமலா?
மெய்ம்மையான மதம் ஒன்றில்லாமலா?
புன்னகையுங்கள்! புன்னகையுங்கள்!

கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தைச்
சிதைப்பனவற்றையெல்லாம்
ஏற்காமலிருப்பதுதான்
அழிப்பது காப்பது கட்டுவது என்பதெல்லாம்!

தேவையெல்லாம்
பேரளவானதொரு புரிதலன்றி
வேறென்னவாக இருக்க முடியும்?

உள்ளும் புறமுமாய்
இருப்பதும் இல்லாமலிருப்பதும் எது?

மாற்றி மாற்றிப் போடும் தோசையைக்
கருக விடுகிறோமோ?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்த் தொடரும்
நம் அத்தனை துயர்களுக்கும்
போர்களுக்கும் வாதைகளுக்குமான
காரணங்களை நான் அறிந்துள்ளேன்

தாகம் தீர்க்கும் அமுதமாக
என் அருகே நான் பருக அமர்ந்திருக்கும்
இந்த ஒரு குவளையிலுள்ள தண்ணீர்
துளித் துளிகளால் மட்டுமே கூடிய ஒரு முழுமை அன்றி
ஒருக்காலும் பிறிதொன்றால் பிறந்ததல்ல
என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.

நான் சொல்வது எதையும்
நீங்கள் நம்பினாலும் நம்பாமல் போனாலும்
விளைவது ஒரே ஆபத்துதான்.

நான் “செய்யாதீர்கள்” என்று சொல்லி
நீங்கள் செய்யாமல் போனாலும்
செய்தீர்களேயானாலும்
அது ஆபத்தேதான்!

சொல்வதை உணர்கையில்தான்
இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியமும் கவிதையின் மதமும்!

தேவையெல்லாம்
பேரளவானதொரு புரிதலன்றி
வேறென்னவாக இருக்க முடியும்?

Read more...

Saturday, October 28, 2023

பாதை

கவனியுங்கள்
கிக் கிக் கிக் கீ என்று கிறுக்கிப்
பறந்து கொண்டிருக்கும் இந்த
பட்டு வண்ணத்துப் பூச்சிக்குப்
பாதை எங்கிருக்கிறது?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.


Read more...

Friday, October 27, 2023

அசைந்தாடும் நீரில்

அசைந்தாடும் நீரில்
நெளிந்தாடுகின்றன கட்டடங்கள்
நீரைத் தொடுகையில்
நெகிழாதிருக்கும்
கல்நெஞ்சமும் உண்டோ
இந் நிலவுலகில்?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.


Read more...

Thursday, October 26, 2023

வண்ணத்துப் பூச்சி அது

வண்ணத்துப் பூச்சி அது
வழி தவறியதால்
அலைபாய்ந்து திரிகிறது
என்றாலும்
காதற் புள்ளி வெளிகளிலெல்லாம்தான்
கண்டுபிடித்து விடுகிறதில்லையா,
தான் பிறந்து வளர்ந்து மகிழ்ந்து குலாவிய
காதற் பூந்தோட்டத்தை?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.

Read more...

Wednesday, October 25, 2023

இனி ஒரு விதி செய்வோம்!

பிச்சா பாத்திரம் ஒன்றில் மட்டும்தான்
வந்து நிரம்புகிறது
வறுமையும் போரும் துயர்களுமில்லா
உலகைப் படைக்கும்
ஒரே வழியும் ஒளியும் உண்மையும்
ஆற்றலுமான
ஒரே பெருஞ்செல்வம்!

”தனியொருவனுக்கு உணவில்லையெனில்
செகத்தினை அழித்திடுவோம்” எனும்
கொதிப்பு நிலைகள் கூடித் திரண்டதா அது?
திரளாமற் போகுமோ அது?
”இனி ஒரு விதி…” என்றால்
அது என்ன விதி எனக் கண்டோமா?

கண்டு விட்டோம் தானே?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.


Read more...

Tuesday, October 24, 2023

Kindleல் கிடைக்கும் தேவதேவனின் தொகுப்புகள்









1) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு ஒன்று
இதில் 1976ல் வெளிவந்த ”குளித்துக் கரையேறாத கோபியர்கள்” மற்றும் 1981ல் வெளிவந்த ”மின்னற்பொழுதே தூரம்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு ஒன்ற வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

2) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு இரண்டு
இதில் 1984ல் வெளிவந்த ”மாற்றப்படாத வீடு” மற்றும் 1990ல் வெளிவந்த ”பூமியை உதறி எழுந்த மேகங்கள்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு இரண்டு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

3) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு மூன்று
இதில் 1991ல் வெளிவந்த ”நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்” மற்றும் 1992ல் வெளிவந்த ”சின்னஞ்சிறிய சோகம்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு மூன்று வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

4) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு நான்கு
இதில் 1994ல் வெளிவந்த ”நட்சத்திர மீன்” மற்றும் 1995ல் வெளிவந்த ”அந்தரத்தில் ஓர் இருக்கை” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு நான்கு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

5) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு ஐந்து
இதில் 1996ல் வெளிவந்த ”நார்சிசஸ் வனம்” மற்றும் 1998ல் வெளிவந்த ”புல்வெளியில் ஒரு கல்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு ஐந்து வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

6) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு ஆறு
இதில் 2000ல் வெளிவந்த ”விண்ணளவு பூமி” மற்றும் 2002ல் வெளிவந்த ”விரும்பியதெல்லாம்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு ஆறு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

7) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு ஏழு
இதில் 2003ல் வெளிவந்த ”விடிந்தும் விடியாப் பொழுது” மற்றும் 2005ல் வெளிவந்த ”விதையும் கனியுமான பாரம்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு ஏழு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

8) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு எட்டு
இதில் 2005ல் வெளிவந்த ”நீல நிலாவெளி” மற்றும் 2007ல் வெளிவந்த ”பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு எட்டு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

9) கவிதை பற்றி
1993ஆம் ஆண்டு காஞ்சனை வெளியிட்ட உரையாடல் நூல் மற்றும் பல்வேறு இதழ்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு
“கவிதை பற்றி” வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

Read more...

Monday, October 23, 2023

இங்கே பாருங்கள்!

கதிர்தொட ஓங்கிய
ஒற்றைக் காலுடன்
நாற்பது கைகளுடன்
நாற்றிசைகளையும்
அளாவிக் கொண்டிருக்கும் இந்தத்
தென்னை மரமும்
போதித்துக் கொண்டுதானே இருக்கிறது?

Read more...

Friday, October 20, 2023

தேவதேவனின் அனைத்துக் கவிதைத் தொகுப்புகளின் பெயர்களும் ஆண்டுகளும்











88) இனி ஒரு விதி செய்வோம் - 2023
87) சுட்டும் விழிச்சுடர்
86) மேஜைத் தடாகத்தில் ஓர் ஒற்றை மலர்
85) மறைந்து கிடக்கும் மாங்கனிகள்
84) ஈரத்தரை எங்கும் வானம்
83) நிலவில் உதித்த கார்முகில்
82) துயர்மலி உலகின் பெருவலி (காவியம்) -2023
81) புறப்பாடு (காவியம்) -2023

80) குழந்தை பார்த்த குறைநிலா -அச்சில்
79) இப்போதும் எப்போதும் காணக் கிடைக்காததென்ன -அச்சில்
78) காண்பதும் காணாததும் -2024
77) நடைமண்டலம் -2024
76) மெதுவிஷமும் பற்ற இயலாப் புதுமனிதன் -2024
75) வேணுவனம் - 2024
74) விண்மாடம் - 2024
73) ஒளிகுன்றாது உதிர்ந்த மலர்கள் -அச்சில்
72) மலரும் நன்மைகள் -அச்சில்
71) இந்தக் காற்று வெளியிடையே -அச்சில்
70) பார்வை நடத்தும் பாதை -அச்சில்
69) வானப் பெருவெளி -அச்சில்
68) வெயில்மலர்க் குளிர்தலம் -அச்சில்
67) பிறிதொரு பசி -அச்சில்
66) அருட்பெருஞ்சோதி -அச்சில்
65) கண்கள் மட்டுமே தொடும் வானம் -அச்சில்
64) தனிப்பெருங்கருணை -அச்சில்
63) ஒளியில் உயிர்த்த விழிகள் -அச்சில்
62) பாடல் விழையும் மோன இசை -அச்சில்
61) உலகடங்கு (காவியம்) -அச்சில்

60) ஆகும் என்றெழுந்த ஆல் -அச்சில்
59) ஒளிரும் ஓவிய நிலா -அச்சில்
58) நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் -2022
57) மழைக்காற்றில் ஆடும் மலர்கள் -2022
56) சூரியகாந்தி வயல் -2022
55) வெண்கொக்கும் ஆம்பல் மலர்களும் -2022
54) பரிதி துடைக்கும் பனித்திரை -2022
53) கடவுளின் ராஜ்ஜியம் -2022
52) அந்திஇருள் (இருள் எப்போதுமே அந்தி தான்) -2022
51) எதுவாகவும் இல்லாதது -2022
50) நீர்க்குடத்தின் அலமறல்கள் -2022
49) இலைகள் கூடி இசைக்கும் காற்று -2022
48) ஈரம் மட்டுமே எங்கும் உள்ளது -2022
47) பார்த்து நட -2022
46) விண்ணளவாய் விரியும் வட்டம் -2022
45) காணுங்கால் -2022
44) காற்றினிலே வரும் கீதம் -2022
43) காயமும் தழும்பும் -அச்சில்
42) மேகங்கள் நடமாடும் வானம் -2022
41) அமுதவெளி -2022

40) மகாநதியில் மிதக்கும் தோணி -2022
39) யாம் பெற்ற இன்பம் -2022
38) தன்னியல்பின் தாரகை -2022
37) உதிராத மத்தாப்புகள் கோடி -2021
36) எல்லாம் ஒரு கணம் முன்புதான் -2020
35) மலர் தேடும் மலர் -2020
34) பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை -2020
33) மகாநதி -2019
32) அமுதநதி -2019
31) ஏஞ்சல் -2019
30) பக்கத்தில்தான் இருக்கிறது வீடு -2019
29) புரியாது கழித்த பொய் நாட்களெல்லாம் -2018
28) ஆம்பல் குளம் -2018
27) சித்தார்த்த ராத்திரி -2018
26) அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது -2016
25) நுனிக்கொம்பர் நாரைகள் -2016
24) கண்விழித்தபோது -2016
23) ஹே.மா! (அதிஉச்சம்) -2014
22) பேர்யாழ் -2014
21) பள்ளத்திலுள்ள வீடு -2013

20) மெய்வழிச்சாலை -2012
19) இரவெல்லாம் விழித்திருந்த நிலா -2012
18) மார்கழி -2008
17) விண்வரையும் தூரிகைகள் -2007
16) பறவைகள் காலூன்றிநிற்கும் பாறைகள் -2007
15) நீல நிலாவெளி -2007
14) விதையும் கனியுமான பாரம் -2005
13) விடிந்தும் விடியாப் பொழுது -2003
12) விரும்பியதெல்லாம் -2002
11) விண்ணளவு பூமி -2000
10) புல்வெளியில் ஒரு கல் -1998
9) நார்சிசஸ் வனம் -1996
8) அந்தரத்திலே ஓர் இருக்கை -1995
7) நட்சத்திர மீன் -1994
6) சின்னஞ்சிறிய சோகம் -1992
5) நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் -1991
4) பூமியை உதறியெழுந்த மேகங்கள் -1990
3) மாற்றப்படாத வீடு -1984
2) மின்னற்பொழுதே தூரம் -1981
1) குளித்துக் கரையேறாத கோபியர்கள் -1976

Read more...

உதிர் இலை

காற்றின் பூ மஞ்சத்தில் புரளும்
வண்ணத்துப் பூச்சியாய்
சிறகடித்துக் கொண்டு இறங்குகிறது
மரத்திலிருந்து ஒர் உதிர் இலை.
கற்றரையோ புற்றரையோ
மண்தரையோ
உயிர்ப்புடனும்
மாறா இனிமையுடனும்தான்
வந்தமர்கிறது அது
மரணத்தையும் வாழ்வையும் நன்கறிந்த
துயரங்களற்ற ஜீவன்!

Read more...

Wednesday, October 18, 2023

கவிதையின் மதம் சொல்கிறது காண்!

மனிதர்கள் எளிமையானவர்களாக
மாறியாக வேண்டும்
கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய
இதுவே ஓரே வழி என்கிறது
கவிதையின் மதம்!

எந்த ஏழை பணக்காரர்களாலும்
இயலாது அது
செல்வந்தனாகவே துடித்துக்கொண்டு
செல்வந்தன்களிடமே
ஏக்கத்துடன் பல்லிளித்துக்கொண்டு
வாழும் எந்த ஏழையாலும் இயலாது
கடவுளின் ராஜ்ஜியம்!

குற்றவுணர்ச்சியும் தாழ்மையுமின்றி
சவுகரியமாக வாழ்ந்துகொண்டு
அறமென்றும் கொடையென்றும்
இப் பாழுலகையே கட்டிக் காத்துக்கொண்டிருக்கும்
எந்த அதிகாரத் தந்திரங்களாலும் இயலாது
கடவுளின் ராஜ்ஜியம்!

அந்தஸ்து, அதிகாரம், செல்வாக்கு, புகழ் இவைகள்
மானுட அருவருப்புகள் என்பதை
ஆழ்ந்துணர இயலாமற் போன தெப்படி?

தாழ்மை உணர்வொன்றே
மனிதம் எனும் மாண்புணராது
அடிமைகளாயும் ஆண்டான்களாயும்
ஆனவர்கள்…

கடவுளாகவும் கடவுளைக் காண்பவர்களாகவும் அன்றி
அடிமைகளாகவும் ஆண்டான்களாகவும்
ஆனவர்கள்…

எத்தகைய மூட மனிதர்கள் நாம்?
தன்னை அறியும் அறிவில்லாத மனிதன்
தான் தனது எனும் கொடுவிஷத்தினாலே
(பாழ்படுத்தும் இயற்கைதான் கொஞ்சமோ?)
தொடரும் பேராசைப் பேரழிவுகளாலும்
பெருங்குழப்பத் துயர்களாலுமே
அன்பும் அறமும் அழகுமற்ற
இப் பாழுலகு படைக்கப்பட்டிருக்கிறது
நம்மால்தான் என்பதை உணராதவர்கள்…

அறிவியல் தொழில்நுட்பங்களால்
தம் புலன்களையும்
இத் துயருலகச் செல்வங்களையும் மட்டுமே
பெருக்கிக் கொண்டு
தம் வறுமை நோய் நாடிச்
செயல்பட அறியாதவர்கள்…

காலமற்ற பெருவெளியில்
கவிதையின் மதம் உலாவும்.
அருட் பெருஞ்சோதியின்
தனிப் பெருங் கருணையினால் மட்டுமே
மாதிரிச் செயல்முறைப் பாடம் போல்
கொடுத்துக் கொடுத்துக் காட்டப்படும்
எதையுமே கண்டுகொள்ளத் தெரியாதவர்களால்…

மலருமோ கடவுளின் ராஜ்ஜியம்?





கவிதை  உருவாகியது: 18 அக்டோபர் 2023

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP