பறத்தல்
தன் சிறகுகளை மேகங்களாய்
வானத்தில் எறிந்துவிட்டது பறவை
உடலை மலையாகவும்
கால்களை மரங்களாகவும்
மண்ணில் ஊன்றிவிட்டது
இதுவும் பறத்தல்தானே என்றது.
Read more...
Poet Devadevan
பாதத்திலொரு முள்தைத்து
பாதையெல்லாம் முள்ளாய்க் குத்துகிறது
வழியை அடைக்கிறது வலி
வலியினுள்ளா
வழியினுள்ளா
வாத்தியம் ஒன்று இசைக்கிறது!
தர்மம் வேறு
மதம் வேறு
(தர்மம் - நம்மால் உருவாக்கப்படாததும்
மதம்- நம்மால் உருவாக்கப்பட்டதும் ஆம்)
இல்லையா?
தர்மத்தின் முன்னொட்டாக
மதத்தின் பேரைச் சேர்க்கிறது
சாத்தான்!
பாவம்
அவனும்
தன்னைத்தானே
அறிந்து கொள்ளாத
அறிவிலிதானே?
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் கட்சிக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் மதத்திற்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் அமைப்புக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
ஒரு பக்கம் அத்துணை பெரியதாய்
ஒரு சத்சங்கத்தையே அவன் நண்பர்கள்
வளர்த்த போதிலும்
சாதி எனும் சாத்தானைக் கண்டு கொள்ளாமல்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலோடே
கடவுளின் ராஜ்ஜியத்தை எழுப்ப முடியாதது கண்டான்
தீமையின் விஷவேரைக் கண்டுகொண்டா-
னவன் குரலைக் கேட்டு இருக்கிறீர்களா?
எல்லாவற்றையும் மறுப்பவன்
எந்த ஒரு வழியும்
இல்லை என்று மட்டும் சொல்லி விடாமல்
ஒரு வழி இருக்கிறது என்றவன் சொல்வதை
நாம் கவனிக்கலாமல்லவா?
ஒரே வழி அதனை
நாம் கவனிக்காதமைதானோ
போரும் துயரும் அறமின்மையுமே
தொடர்ந்து வரும்
இந்த உலகைப் படைத்திருக்கிறது?
ஒரு கணம் போதுமே என்கிறானே
தீதிலாதோர் தேவருலகைப் படைத்து விட?
கணந்தோறும் எரிந்து கொண்டே
ஒளிர்ந்து கொண்டுமிருக்கும்
அழியாச்சுடர் அல்லவா அது?
மேரா நாம் இஸ்க்
தேரா நாம் இஸ்க்
என் பெயர் அன்பு
எங்கள் பெயர் அன்பு எனப்
பாடலின் இசைப் பெருக்கம்
இப்பேரண்டமெங்கும் விரிந்துவிடுமாறு
ஒலித்தது பாடல் அவன் பாடியது
ஆனால் அந்தப் பாவி பாடாத வேளையில்
கூட்டத்தில்
ஓர் இடம் பிடிப்பதற்காக
அப்புறம்
கூட்டத்தில்
தானே ஒசத்தியானவன் எனும்
ஒர் பேர் பெறுவதற்காக
அப்புறம்
தான் பேர் பெற இயலாமற் போனாலும்
தன் குழு, தன் இனம், தன் சாதிக்காரனுக்காக …
மெது விஷத்தால்
தன்னையும் உலகையும்
போராலும் துயராலும்
கொன்று கொண்டிருக்கிறான் மனிதன்
பேர் புகழ் பணம் தரத் தொடங்கிவிடும்
எந்தச் செயலானால் என்ன
எந்தக் கலையானால் என்ன
கவிதையேயானாலும் என்ன
ஒசத்தியான மனிதனுக்கு
பயிற்சியினால் ஆகாதது என்ன?
பயிற்சியைத் தாண்டி ஒன்று உண்டா?
அன்பாவது, அறமாவது –
அழகு பற்றியெல்லாம் எவனுக்குத் தெரியும்?
உருவமில்லாத இந்த மெய்ப்பொருள்களை
யார் அறிவார்?
யாரால் ஏய்த்துவிட முடியாது?
கச்சிதமாக தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி
சுடாமலா போகும்?
வர விடுவோமா பிற குலத்தோரை
எத்தனைக் கால பாரம்பரியம் நம்முடையது?
நாம் தீட்டும் பொய்களாலும் இழி சித்திரங்களாலும்
கண்களும் காதுகளும் இயலாதவன் போன்ற நம் நடிப்பாலும்
நாம் செய்யும் கொலைகளை விடப்
பிறிதொரு ஆக்கச் செயல் உண்டோ?
பயப்படாதீர்கள், அன்பர்களே
கவிதையின் ஆரம்ப வரிகளுக்குச் செல்லுங்கள்
குற்றத்தின் வேர் கண்டுவிட்டால் போதும்
மின்னற்பொழுதே தூரம்
இதோ கண் முன்னே தான் இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியம்!
தேவதேவன் கவிதைகள் தன்னை கவர்ந்துள்ளது பற்றிய வே.ஸ்ரீநிவாச கோபாலனின் கேள்விக்கு ஜெயமோகனின் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
”சிலுவைப் பிரயாணம்" கவிதை இங்கே
கேள்விகளோடு வந்து நிற்கும்போது
உரையாடுகின்றன இந்த மலைகள்!
கேள்விகள் இல்லாதபோதுதான்
எத்துணை அமைதியாக!
இரைச்சல்களோடு வந்து நிற்கும்போதும்
எத்துணை துல்லியமாக எதிரொலித்தபடி!
கூடி வாழ்ந்தபடி
கூட்டமாய்ப் பறந்து திரியும்
குருவிகளை பறவைகளைப்
பார்த்திருப்பீர்கள்.
அவர்கள் நம் பார்வையில்
ஒன்றுபோல் காணப்படுவதில்
ஒரு பொருளுண்டு
ஒரு கதையுண்டு.
வெகுகாலத்திற்கு முன்பு
அவர்களிடையே அரசர்கள் இருந்தார்கள்
செல்வர்கள் இருந்தார்கள் ஏழைகள் இருந்தார்கள்
தீரர்கள் இருந்தார்கள் சாமான்யர்கள் இருந்தார்கள்
பெரியவர்கள் இருந்தார்கள் சிறியவர்கள் இருந்தார்கள்
வேறுபாடுகள் இருந்தன ஒற்றுமைகள் இருந்தன
சான்றோர்கள் இருந்தனர் துன்பமும் இருந்தது.
துயரை முடிவுக்குக் கொண்டுவர அறிந்த
சான்றோர் ஒருவர் தோன்றினார்.
முழுமையான, புனிதமான ஒரு மனிதர்.
அந்நாள் தொட்டு
ஒவ்வொரு புனிதராய்த்
தோன்றிக் கொண்டே இருந்தார்கள்.
ஓர் ஒற்றை ஆலமரம் மட்டுமேயாய்
இருந்த இடம் திடீரென்று
ஒர் பெருங்காடாக மாறிவிட்டது.
ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியெங்குமொரு பச்சைக் கம்பளமே
விரிந்து விட்டது.
வானத்தை நோக்கி
வேர் விரித்தாற் போன்று
அத்தனை இலைகளையும்
உதிர்த்து நின்ற ஒர் மரத்தில்
குபீரெனப் பொங்கி எழுந்தன
புதுத் துளிர்கள்.
ஒற்றை விதை ஒன்றில் தோன்றிய
ஒற்றைப் பூமரம்தான்
ஒற்றைப் பூங்கொத்தாக
கொள்ளை கொள்ளையாய்
விதைகள் வீசப்போகும்
கொள்ளை கொள்ளையான பூக்களுடன்.
பூமியெங்குமோர் புன்னகையைக் கொளுத்திற்று
பயிர்கள் எங்கும் அமர்ந்து
பசியாறி எழுந்து பறந்த
படைக் குருவிகள் போல்
நீங்கியதோர் வெக்கையும்
குளுகுளுவென்று எழுந்ததோர் பசுமையும்.
இனி இந்த பூமியில்
எந்த ஒரு கசடும் படியவே முடியாதென
ஒரு பெருவெள்ளம்
கொட்டிப் புரண்டு பாயத் தொடங்கியது
அருவிகளும் ஆறுகளுமாய்.
பளீரிடும் வெண்பட்டுக் கம்பளமாய்
விரிந்த வெயிலில்
சின்னஞ்சிறு புழுக்களும்
இன்பமாய் நெளிந்து ஆடின.
மயில் தோகை போல்
வானில் படர்ந்த மேகங்களிலிருந்து
பொழிவதற்கு முன்
ஒரு மனிதனின் மூளையைப்
பொட்டெனத் தீண்டிவிட்ட
சொட்டுத் துளியினில்தான்
எத்தகைய பேரின்பம்!
அன்றுதான்
வேறுபாடுகளையோ துயர்களையோ அறியாத
இந்த புதுக் குருவிகளும்
தோன்றி விட்டன என்கிறார்கள்.
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP