அவன் குரல்
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் கட்சிக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் மதத்திற்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் அமைப்புக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
ஒரு பக்கம் அத்துணை பெரியதாய்
ஒரு சத்சங்கத்தையே அவன் நண்பர்கள்
வளர்த்த போதிலும்
சாதி எனும் சாத்தானைக் கண்டு கொள்ளாமல்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலோடே
கடவுளின் ராஜ்ஜியத்தை எழுப்ப முடியாதது கண்டான்
தீமையின் விஷவேரைக் கண்டுகொண்டா-
னவன் குரலைக் கேட்டு இருக்கிறீர்களா?
எல்லாவற்றையும் மறுப்பவன்
எந்த ஒரு வழியும்
இல்லை என்று மட்டும் சொல்லி விடாமல்
ஒரு வழி இருக்கிறது என்றவன் சொல்வதை
நாம் கவனிக்கலாமல்லவா?
ஒரே வழி அதனை
நாம் கவனிக்காதமைதானோ
போரும் துயரும் அறமின்மையுமே
தொடர்ந்து வரும்
இந்த உலகைப் படைத்திருக்கிறது?
ஒரு கணம் போதுமே என்கிறானே
தீதிலாதோர் தேவருலகைப் படைத்து விட?
கணந்தோறும் எரிந்து கொண்டே
ஒளிர்ந்து கொண்டுமிருக்கும்
அழியாச்சுடர் அல்லவா அது?