Monday, April 1, 2024

குட்டிப் பாப்பாவுக்கு ஒரு கதை

கூடி வாழ்ந்தபடி
கூட்டமாய்ப் பறந்து திரியும்
குருவிகளை பறவைகளைப்
பார்த்திருப்பீர்கள்.
அவர்கள் நம் பார்வையில்
ஒன்றுபோல் காணப்படுவதில்
ஒரு பொருளுண்டு
ஒரு கதையுண்டு.

வெகுகாலத்திற்கு முன்பு
அவர்களிடையே அரசர்கள் இருந்தார்கள்
செல்வர்கள் இருந்தார்கள் ஏழைகள் இருந்தார்கள்
தீரர்கள் இருந்தார்கள் சாமான்யர்கள் இருந்தார்கள்
பெரியவர்கள் இருந்தார்கள் சிறியவர்கள் இருந்தார்கள்
வேறுபாடுகள் இருந்தன ஒற்றுமைகள் இருந்தன
சான்றோர்கள் இருந்தனர் துன்பமும் இருந்தது.

துயரை முடிவுக்குக் கொண்டுவர அறிந்த
சான்றோர் ஒருவர் தோன்றினார்.
முழுமையான, புனிதமான ஒரு மனிதர்.
அந்நாள் தொட்டு
ஒவ்வொரு புனிதராய்த்
தோன்றிக் கொண்டே இருந்தார்கள்.

ஓர் ஒற்றை ஆலமரம் மட்டுமேயாய்
இருந்த இடம் திடீரென்று
ஒர் பெருங்காடாக மாறிவிட்டது.

ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியெங்குமொரு பச்சைக் கம்பளமே
விரிந்து விட்டது.

வானத்தை நோக்கி
வேர் விரித்தாற் போன்று
அத்தனை இலைகளையும்
உதிர்த்து நின்ற ஒர் மரத்தில்
குபீரெனப் பொங்கி எழுந்தன
புதுத் துளிர்கள்.

ஒற்றை விதை ஒன்றில் தோன்றிய
ஒற்றைப் பூமரம்தான்
ஒற்றைப் பூங்கொத்தாக
கொள்ளை கொள்ளையாய்
விதைகள் வீசப்போகும்
கொள்ளை கொள்ளையான பூக்களுடன்.

பூமியெங்குமோர் புன்னகையைக் கொளுத்திற்று
பயிர்கள் எங்கும் அமர்ந்து
பசியாறி எழுந்து பறந்த
படைக் குருவிகள் போல்
நீங்கியதோர் வெக்கையும்
குளுகுளுவென்று எழுந்ததோர் பசுமையும்.

இனி இந்த பூமியில்
எந்த ஒரு கசடும் படியவே முடியாதென
ஒரு பெருவெள்ளம்
கொட்டிப் புரண்டு பாயத் தொடங்கியது
அருவிகளும் ஆறுகளுமாய்.

பளீரிடும் வெண்பட்டுக் கம்பளமாய்
விரிந்த வெயிலில்
சின்னஞ்சிறு புழுக்களும்
இன்பமாய் நெளிந்து ஆடின.

மயில் தோகை போல்
வானில் படர்ந்த மேகங்களிலிருந்து
பொழிவதற்கு முன்
ஒரு மனிதனின் மூளையைப்
பொட்டெனத் தீண்டிவிட்ட
சொட்டுத் துளியினில்தான்
எத்தகைய பேரின்பம்!

அன்றுதான்
வேறுபாடுகளையோ துயர்களையோ அறியாத
இந்த புதுக் குருவிகளும்
தோன்றி விட்டன என்கிறார்கள்.


- ஏஞ்சல் (2019)  கவிதைத் தொகுப்பிலிருந்து.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP