பாடுகள்
கூட்டத்தில்
ஓர் இடம் பிடிப்பதற்காக
அப்புறம்
கூட்டத்தில்
தானே ஒசத்தியானவன் எனும்
ஒர் பேர் பெறுவதற்காக
அப்புறம்
தான் பேர் பெற இயலாமற் போனாலும்
தன் குழு, தன் இனம், தன் சாதிக்காரனுக்காக …
மெது விஷத்தால்
தன்னையும் உலகையும்
போராலும் துயராலும்
கொன்று கொண்டிருக்கிறான் மனிதன்
பேர் புகழ் பணம் தரத் தொடங்கிவிடும்
எந்தச் செயலானால் என்ன
எந்தக் கலையானால் என்ன
கவிதையேயானாலும் என்ன
ஒசத்தியான மனிதனுக்கு
பயிற்சியினால் ஆகாதது என்ன?
பயிற்சியைத் தாண்டி ஒன்று உண்டா?
அன்பாவது, அறமாவது –
அழகு பற்றியெல்லாம் எவனுக்குத் தெரியும்?
உருவமில்லாத இந்த மெய்ப்பொருள்களை
யார் அறிவார்?
யாரால் ஏய்த்துவிட முடியாது?
கச்சிதமாக தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி
சுடாமலா போகும்?
வர விடுவோமா பிற குலத்தோரை
எத்தனைக் கால பாரம்பரியம் நம்முடையது?
நாம் தீட்டும் பொய்களாலும் இழி சித்திரங்களாலும்
கண்களும் காதுகளும் இயலாதவன் போன்ற நம் நடிப்பாலும்
நாம் செய்யும் கொலைகளை விடப்
பிறிதொரு ஆக்கச் செயல் உண்டோ?
பயப்படாதீர்கள், அன்பர்களே
கவிதையின் ஆரம்ப வரிகளுக்குச் செல்லுங்கள்
குற்றத்தின் வேர் கண்டுவிட்டால் போதும்
மின்னற்பொழுதே தூரம்
இதோ கண் முன்னே தான் இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியம்!
-இனி ஒரு விதி செய்வோம்(2023) தொகுப்பிலிருந்து
இந்நூல் சீர்மை பதிப்பகத்தில் கிடைக்கும்