Sunday, August 7, 2011

காதலின் இலட்சியம்

ஊரார் கண்ணுக்குச் சற்று ஒதுக்குப்புறமாய் அமைந்த
என் வீட்டு எதிர்ச்சுவர் மரநிழலிருளில் சற்றே மறைந்தபடி
நண்பகலிலிருந்தே அந்த இளம் ஜோடி நிற்கிறது
வெயில் சாய்ந்து மாலை மங்கி அந்தியும் இருண்டு
தெருவிளக்கும் எரியத் தொடங்கிவிட்டது
“கால்களும் நோகாதோ, என் கண்மணிகாள்!
நேரத்தோடே வீடுபோய்ச் சேரவும் வேண்டாமோ?“

கால காலங்கள் தாண்டி
நிலைத்து நிற்க விழையுமொரு வேட்கையோ
அவர்களை இன்னும் பேசிக்கொண்டே நிற்கவைப்பது?
மறைய விரும்பாத ஓர் ஓவியம் போல் அவர்கள் நிற்பதை
என் ஜன்னல் வழியே பார்த்தபடியே இருக்கிறேன்

திடீரென்று அவ்விடத்தில் அவர்களைக் காணாதது கண்டு
பதைத்துப் போனேன்
எவ்வாறு எப்போது அவர்கள் விடைபெற்றுப் பிரிந்தார்கள்?
தனிமை கொண்டு இனி
எவ்வாறு இந்த இரவை அவர்கள் கழிப்பார்கள்?
என்னைப் போலவேயா, கண்துஞ்சாது?
நாளையும் நண்பகலில் இவ்விடத்தில்
அவர்கள் சந்திப்பார்களில்லையா?
“ஆம், நிச்சயமாக“- என என்னுள் தோன்றும்
இந்த எண்ணத்தைத் தோற்றுவிப்பது யார்? எது?
ஏதொன்றைச் சாதிப்பதற்காக இந்த இளம் ஜோடி
என் முன்னே அவ்விடத்தில் திரும்பத் திரும்ப வந்து நின்று
தவிர்க்க இயலாத் துயருடன் பிரிந்துகொண்டேயிருக்கிறது

காண்பார் நெஞ்சில்
அழியாத ஓவியமொன்றைத் தீட்டிவிடுவதுதானோ
காதலின் இலட்சியம்?

Saturday, August 6, 2011

பெண்ணும் பெருக்குமாறும்

அவன் பார்வையின் அழுக்கை உணர்ந்தபடியே
பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தாள் அவள்

வக்கரித்த பார்வை வீசிக்கொண்டிருக்கும்
அவன் நெஞ்சிலேயே
திரும்பத் திரும்ப
முடிவற்ற கண்ணீருடன்
கோலமிட்டுக்கொண்டிருக்கிறாள்

திட்டமொன்றின்படியேதான் இயங்குவது போன்ற
தீர்க்கமும் தீரமும் அவள் உடலெங்கும் ஒளிரக் கண்டேன்
எப்போதும் அவளை நான் அப்படித்தான் பார்க்கிறேன்
அவளே என் அன்பும், நானே அவளுமல்லவா

அக்கறையாய்க் கைநீட்டி ஒரு பூவைப் பறித்து
அவள் சூடிக்கொண்டதன் பொருளை நான் அறிவேன்

கருப்பு வளைகள் குலுங்க
பெருக்குமாற்றைத் தட்டிச் சுருதி சேர்த்துக்கொண்டவள்
குனிந்து வளைந்து
தன் மீதும் தன் பணிகள் மீதும்
வீழ்ந்துகொண்டேயிருக்கும் வக்கிரப் பார்வைகளை
இடுப்பொடியும் வேதனையுடனும்
இயம்பவியலாத் துயருடனும்
பின்வாங்காத் தீரத்துடனும்
இடையறாது பெருக்கிக்கொண்டேயிருக்கிறாள்
(சமயங்களில் சீற்றம் கொண்டு சாத்தியமையும்
இதனுள்ளேதான் அடக்கம்)

Friday, August 5, 2011

உன்னைப் பற்றிய ஒரு பெரும் புரிதலை...

கேள் பெண்ணே!
நான் என் தாயிடமிருந்தும் பெறவில்லை;
என் பிரிய சகோதரிகளிடமிருந்தும் இல்லை;
காதலென நெருங்கியவர்களிடமிருந்தும் இல்லை;
தோழிகளெனத் துணை நின்றவர்களிடமிருந்தும் இல்லை;
மனைவியிடமிருந்தும்கூட இல்லை;
பெண்ணியவாதங்கள் என்றால்
அது நேரனுபவம் இல்லையே அம்மா;
பெண்ணியவாதிகள் தம் கூற்று மற்றும் என் அறிவு என்றால்
அதில் ஆறாத புண்ணின் வலியே
அநேகமானதை மறைத்து நிற்கின்றது

என் கண் பார்க்க ஒரு ஆளாய் வளர்ந்துகொண்டிருக்கும்
நான் பெற்ற என் அருமை மகளிடமிருந்தல்லவா
அந்தப் பெறுபேற்றினை அடைந்தேன் நான்!

Thursday, August 4, 2011

வைகறைப் புல்

1.
அழுதுஅழுது
தன் துக்கங்களையெல்லாம்
ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால்
உதயமாகிறது
அப் புல்லின் முன் பரிதி

2.
பரிதியின் தாகவெறி முன்
எத்தனை தன்னம்பிக்கையோடு
துளி நீட்டி நிற்கிறது அச்சிறு புல்!
எத்தனை அன்போடு வாங்கிப் பருகுகிறது
பரிதியும்!

3.
புல்லும் பெருமிதத்துடன்
நிமிர்ந்து நிற்கிறது
வானின் வைரக்கல் அன்பு
அதனைக் குளிர்வித்ததால்

4.
பரிதி உதித்தவுடன்தான் தெரிந்தது
இரவோடு இரவாக
வானம் தனக்கு வழங்கியிருந்த
அரும்பொருள் என்னவென்று
அடைந்த பேருவகையில்
அப்பொருளை அது பரிதிக்கே
கொடுத்திழந்து மேலும் களித்தது

Wednesday, August 3, 2011

ஓரு குண்டூசியின் நுனிகொண்டு...

திருட்டுத்தனமாய் அவளுடல் தீண்டப்படுகையில்
பரவாயில்லை என் மன்னித்து
அதை அவனுக்கும் அவளுக்குமான அந்தரங்கமாகவே
எடுத்துக் கொள்கிறது காதல்

ஒரு குண்டூசியையோ கொண்டையூசியையோ கொண்டு
அவனை ஆழமாகத் தொட்டு
அது தன்னை வெளிப்படுகையிலும்தான்
எத்தனை கூர்மை! நிதானம்!

Tuesday, August 2, 2011

ஆடும் அவற்றின் செவியறியும்

துயர் அடைந்து நின்ற இவ்வெளியைத்
திடீரென்று
காற்றும் மரங்களும் இணைந்து எழுந்து
வேகவேகமாய்ப் பெருக்கித்
தூய்மை செய்யமுயல்பவை போல்
அசைகின்றன

கபம்போல் நெஞ்சடைத்திருந்த
துக்கமெல்லாம் எங்கே?
என்ன ஓர் ஆசுவாசம்!
காதல் கொண்டவன்போல்
என்ன ஓர் ஆனந்தம்! நிறைவு!

இப்போது மரங்கள்-
நடம் புரிந்துகொண்டிருக்கின்றன

இப்போது நானும் கேட்கிறேன்,
ஆடும் அவற்றின் செவியறியும்
அந்த இசையினை

Monday, August 1, 2011

மாமலையும் திருமுழுக்காட்டும்

மலைமீது வழிந்து இறங்கிய திருமுழுக்காய்
வயலும் வாய்க்கால் வெளியுமாய்
பரவி விரிந்திருந்த அம்ருத பூமி!

அழகிய அவ்வூர் சென்று தலை சாய்த்தபோது
மறுநாட் காலை
அம்மலை நோக்கி நீண்டதொரு காலைநடை போகத்
திட்டமிட்டே கண்ணயர்ந்தோம்
நடப்பதும் நடை எண்ணி தலை சாய்ப்பதுமான
பயணமன்றோ நம் வாழ்வு

இருவரும் ஒரேவேளை விழித்துக் கொள்ளாததால்
அலுத்துத் துயில்பவரை எழுப்புவதா என்று
ஒருவர் மற்றவரை மாறி மாறிப் பார்த்ததில்
தவறிற்றே அந்தக் காலை நடை!

இப்போது அம்மாமலையைச்
சூரியன் முழுக்காட்டும் அதீத வேளை!
மரநிழலில் ஒதுங்கி நின்று
நாம் அதனை அவதானிக்கும் வேளை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP