Wednesday, January 31, 2024

கணநூல்

கற்றது கைம்மண் அளவு
கல்லாதது கணநூல் அளவு
கவிதை அளவு
முடிவிலாது
உருளும் இவ்வுலக அளவு
இல்லையா, என் கண்மணி?

Monday, January 29, 2024

பள்ளியில் குடியரசு தினவிழா

காட்சி மேடைக்குக் கீழே
சுட்டெரிக்கும் வறுமையினைப்போல்
உரத்த வெயில் படலம்

மேடை நிழலுக்குள்ளிருந்து கொண்ட
வி அய் பிக்கள் முகம் நோக்கி
வெயிலில் நடம்புரிகின்றனர் குழந்தைகள்

சுவர் நிழலில் ஏழைப் பெற்றோர்கள்

ஏங்கி ஏங்கி அலமறுகின்றன
தூர நிறுத்தி வைக்கப் பட்ட மரங்கள்!

Saturday, January 27, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –7: வாழ்வின் நடனமும் பரலோக ராஜ்ஜியமும்

ஒரு காட்சி ஊடகத்தின் கருத்தரங்க மேடையில் பார்வையாள விருந்தினராகக் கருத்துரைக்க அழைக்கப்பட்டிருந்தேன். அதை இயக்குபவர்கள் அன்றைய அந்தப் பொருளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்துள்ளமை பெரும் வியப்பூட்டுவதாயிருந்தது. ஒரு பக்கம் தங்கள் தொழிலில் மிகக் குறைந்ததும் சரியானதும் நேர்மையானதுமான கட்டணத்தையே போதுமெனச் செயல்படுபவர்கள், பொருள் சேர்த்தே தங்கள் வளத்தையும் தொழிலையும் பெருக்க விரும்பாதவர்கள். மறுபக்கம், இல்லை, நாம் சற்று வளம் தேடிக்கொள்வதுதான் சரி என்று அதற்கான தங்கள் காரணங்களோடு சாதிப்பவர்கள். ஒரு மருத்துவர், ஒரு ஆட்டோக்கார இளைஞன், ஒரு உணவு விடுதிக்காரர் இவர்கள் நோயாளிகள், ஏழைகளிடமிருந்து மிகமிகக் குறைந்த கட்டணமும் அதுகொண்டே நிறைந்த உழைப்பின்மூலம் போதிய வருமானமும் மிகப் பெரிய மனநிறைவையும் அடைவதாகச் சொன்னார்கள். இவர்களை நான் அங்கே காணநேர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் வாழ்வின் ஓர் அற்புத நிகழ்வு அது.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Friday, January 26, 2024

கவிஞர் தேவதேவன் மற்றும் அவரது கவிதைகள் பற்றி - பாலாஜி ராஜு

இந்தக் காணொளியில் ரசிகர் பாலாஜி ராஜு, கவிஞர் தேவதேவனைச் சந்தித்த அனுபவம், அவரது கவிதைகளின் வழியாக விரிந்த கவிதை உலகிற்கு சென்றது மற்றும் அவருக்கு மிக நெருக்கமான கவிதைகளான ”அமைதி என்பது”, ”எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்க” மற்றும் ”தோள் பை” பற்றி உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.


ரசிகர் பாலாஜி ராஜுவின் காணொளி

அமைதி என்பது” கவிதை இங்கே .....

”எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்கு” கவிதை இங்கே.....

"தோள் பை” கவிதை இங்கே.....

Wednesday, January 24, 2024

அப்போது இரண்டு பாதைகள் இருப்பதே…

அப்போது இரண்டு பாதைகள் இருப்பதே
எனக்குத் தெரியாது
நான் உன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேனா,
அல்ல, நீதான் என் முன்னே நடந்து கொண்டிருந்தாயா,
நான் தனியானவன் தானா,
_ எதையும் நான் அறியேன்.

ஒரு நாள் அந்த இரண்டு பாதைகள் முன்னே இருக்க
நீ சென்று கொண்டிருந்த பாதையை
நான் தேர்ந்தேன். தன்னந்தனியாகவேதான்
நான் உன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்ததையும்
பிரிய முடியாததையும்
வாழ்வின் எல்லா அழகுகளையும் ரகசியங்களையும்
நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதையும்
நான் கண்டேன்.

Monday, January 22, 2024

பெருஞ்சுடர் வடிவம்

தேவதைகளின்
பின்னழகாய்
விரிந்த கருங்கூந்தல்
சென்று கொண்டிருந்தது
அவன் முன் - னழகாய்!

அறியாமையின்
ஒளியும் இருளுமான
பெருஞ்சுடர் வடிவம்!

Saturday, January 20, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –6: இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்

அடுப்பங்கரையிலிருந்தபடியே மனைவி தன் குட்டிக்குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பா, எங்கே… என்ன செய்துகொண்டிருக்கிறார்?” ஓடிப்போய் அடுக்களைக்கும் கூடத்திற்குமிடையேயுள்ள வாயில்நிலையைப் பற்றி நின்று ஆடியபடி எட்டிப் பார்த்த குழந்தை, கூடத்தின் ஒரு மூலையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தபடி அம்மாவிடம் “க வி தை…” என ராகம் போட்டது. இங்கேதான் அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது அதன் பொருள். ஆனால் குழந்தையின் அந்தக் குரலில் திடுக்கிட்டவனாய் அவன் அசந்துவிட்டான். ஒரு கவிதைக்கணம் அது அவனுக்கு. வாழ்வின் இதுபோன்ற ஓர் அனுபவத்தை நாம் சொல்லி மாளாது அல்லது சொல்ல முடியாது.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Friday, January 19, 2024

காரணம் யாருமில்லை

பிழைப்புக்கான
அலுவல் நேரமாய்
வாழ்க்கை கழிகிறது

வாழ்வுக்கான
வாழ்வு நேரமாய்
வாழ்வு எங்கும்
நிலைத்திருக்கிறது

அவன் பற்றிக் கொண்ட
வாழ்க்கைதானே
அவனைப் பற்றிக்
கொண்டிருக்கிறது?

Wednesday, January 17, 2024

ஒரு காதல் கதை

பூஜாக்குடலை ஏந்தியபடி
பூப் பறித்துக் கொண்டிருந்தது
ஒரு பெரிய பூக்குவியல் ஒன்று

அவைகள் பூஜித்துக் கொண்டுதானே
இருக்கின்றன
அவைகளை ஏன் பறிக்க வேண்டும்
கடவுள் கேட்டாராக்கும்
எனும் பழைய கேள்விகளையெல்லாம் மறந்தவனாய்
ஒன்றும் பேச முடியாதவனாய்
அவன் அவளைப் பார்த்தான்.

என்ன? என தன் முகத்தில்
ஒரு கேள்வியை வரைந்து காட்டினாள் அவள்.

இல்ல, இதைவிட
நல்லதாய் ஒன்று செய்யலாமே என்றான்

பளாரென்று அவன் முகத்திலறைந்ததுபோல்
காதல் பண்ணலாம் என்கிறாயா? என்றது
அழுத்தமான அவள் பார்வைதான்

சற்றே அதிர்ந்தாலும்
ஆமாம் அதேதான் என்பதை
உறுதியாகவே சொல்லின
அவன் இதழ்கள்

அன்று முதல் அவள்
எல்லாப் பூக்களையும் போலவே
இவ்வுலகைப் பூஜிக்கும் ஒரு
பூக்குவியலாக மட்டுமே
ஆகிவிட்டாள்.

Monday, January 15, 2024

தோள் பை

ஓடும் ரயிலில்
அவன் மடியில் தலைவைத்து
அமர்ந்திருந்தது
ஒரு தோள் பை.
அடக்கமான
அய்ந்து திறப்புவாய்கள் அதற்கு.
அவனுடையன
எல்லாவற்றையும் சுமந்துகொண்டு
தன்னையே அவனைச் சுமக்கச் செய்யும்
பேரறிவன்!

குழந்தையாய் வந்த பேரன்னை!

மடியில் அவன் கையடங்கலுக்குள்
அது சாய்ந்து படுத்திருப்பதைப் பாருங்கள்!
என்ன ஒரு உறவு அது!
தீண்டும், வருடும்,
அவன் விரல்களில் பூக்கும் மகரந்தங்களும்
விழிகளில் ததும்பும் கண்ணீருமாய்!
இத்துணை அமைதியும் அன்பும்
ஒழுக்கமும் உடைய உயிர்கள் இருக்கத்தானே செய்கின்றன இவ்வுலகில்.

அருகில் வந்து அமர்ந்தவன் இடித்து
இடைஞ்சலிக்காமல் இருக்கும்படி
அதனை மேலும் நெருக்கமாய்த் தனக்குள்
இழுத்து அணைத்துக்கொண்டான் அவன்.
தனக்குப் பாதுகாப்புத் தரும் உயிரைத்
தான் பாதுகாக்கும் முறையோ அது, அல்லது
அருகிலமர்ந்த அந்த மனிதனுக்காகவோ?
விளக்கிச் சொல்லத்தான்,
பிரித்துச் சொல்லத்தான்,
சொற்களாலே சொல்லிவிடத்தான்
முடியுமோ இந்த அன்பை!


- மகாநதியில் மிதக்கும் தோணி - 2022 தொகுப்பிலிருந்து

Saturday, January 13, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –5: திக்குத் தெரியாத காட்டில்…

ஒரு கவிதையின் நம்பகத்தன்மை அதை எழுதியவன் தன் எழுத்துகள் மூலம் சம்பாதித்து வைத்திருக்கும் புற ஆளுமையிலிருந்து அல்ல. அவனது மற்ற கவிதைகளிலெல்லாம் கனன்றபடி விரிந்துகிடக்கும் அந்த ஆளுமையிலிருந்தே ஏற்படக்கூடியது. இதுவே மனிதனைவிட அவனது கவிதை முக்கியமானது என்பதை நாம் காணும் இடம்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Friday, January 12, 2024

இதுவே என் சேதி

இயேசுவே
மதமாகிய சிலுவையிலிருந்தும்
உம்மை நான் மீட்பேன்
இதுவே என் சேதி என் தந்தையே.

உமது ஆசைகளையும் தோல்விகளையும்
கண்ணீரையும் இரத்தத்தையும்
நான் அறிவேன்.

துயர் நீக்க அறிந்த
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தில்
உம்மை நான்
இளைப்பாற்றுவேன் என் தந்தையே.

Wednesday, January 10, 2024

எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்கு

எங்கோ விழுந்து
தொலைந்துவிட்டது
பசைப் பாட்டிலின்
நுண்துளை மூடி.

தன் பணி முடிவதற்குள்
பயனற்றுப் போக விரும்பாத பசை
நுண்துளையருகே இருந்த
தன் உடல் மரித்துக் காத்துக் கொண்டது.

Monday, January 8, 2024

கவிதை

எண்ணங்களால் உருவாக்கப்பட்ட
தத்துவங்களல்ல இது.
எந்த மனிதனும்
கண்டேயாக வேண்டிய
உண்மை.
உயிரின் குரல்.
அமைதியின் மொத்தம்.
அழகின் கொண்டாட்டம்.
அன்பின் ஈரம்.
அறத்தின் தகிப்பு.
புத்த புன்னகை.
நித்தியத்தின் கரங்களிலிருந்து
சுழலும் வாள்.
ஒளிமட்டுமேயான
ஓவியநிலா.
நாம் அறியாதவற்றின்மீது
தோன்றித் தவழ்ந்து ஓடும்
அமுதநதி.

உண்மையைச் சொல்வதானால்
அது நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய
ஞாபகம் அல்ல!

முழுவாழ்வின் மலர்ப் புன்னகை.
முழுமையின் புனிதத் தொடுகை.

சிதைவும் உயிரின்மையுமல்ல.
உடைந்த ஒரு பகுதி அல்ல.
உடைந்த ஒரு பகுதியின்
கண்ணீரோ கூக்குரலோ
கதறலோ அல்ல.
எனினும்
முழுமையின் முழுவாழ்வின்
கண்ணீர் என்றொன்றும்
காதல் என்றொன்றும்
இருக்கவே இருக்கிறது
ஆற்றல்களெல்லாம் அடக்கப்படாமலேயே
கொந்தளித்துக் குழைந்துகொண்டு கிடக்கும்
அமைதி என்பதும் அதுதான்.
கவிதை என்பதும் அதுதான்.


இந்தக் கவிதை “கவிதையின் மதம்” கட்டுரைத் தொகுப்பில் முதல் கட்டுரையின் இறுதியாய் உள்ளது.

Saturday, January 6, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்

எனது பதிப்பாள நண்பர் ஒருவர் எனது கட்டுரைத்தொகுப்பு ஒன்று கொண்டுவரும் முயற்சியில் அனைத்துவகைக் கட்டுரைகளையும் திரட்டி அனுப்பிவைக்கச் சொன்னார். அனுப்பிவைத்தேன். அந்தக் காலத்தில் ஒரு நிழற்பட நகல்கூட எடுத்துவைத்துக்கொள்ளாத நிலையில் பதிப்பாளரிடமும் கிடந்து அவைகள் தொலைந்து போயின. இருவருக்குமே எதிர்பாராதது அது. தொகுப்பாக ஒரு ஐநூறு பக்க அளவு வந்திருக்கக்கூடிய அந்த எழுத்துகளின் இழப்பு எதுவாக இருக்கும் என யோசிக்கிறேன். அன்று என்னிடமிருந்த ஊக்கமும் உணர்ச்சிகளும் எண்ணங்களோடும் கருத்துக்களோடும் ஊடாடிய வகையில் நிகழ்ந்த ஒரு நாட்டியத்தைத்தான் நாம் அதில் பார்த்திருக்க முடியும். அந்த எழுத்திற்காக நான் இப்போது வருத்தப்படவே இல்லை.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Friday, January 5, 2024

இந்த வண்ணத்துப் பூச்சிகள்

உதிர் இலைகளின் நடனத்தைக்
கற்றுக் கொண்டனவாய்
இந்த வண்ணத்துப் பூச்சிகள்!

இந்தச் சருகுகள்

ஒரு பெரிய மரத்திலிருந்து பிரிந்த துயரமே இல்லை.
எத்துணை அமைதியாகக் கிடக்கின்றன இந்தச் சருகுகள்!

காற்றை உணரவும்
நடந்து செல்வோர் பாதம் தொடுகையில்
தான் சொல்ல வேண்டியதைச் சொல்லவும்
தன் காதலை ஒலிக்கவும் இசைக்கவும்..

பெரும்பாலான பொழுதுகளில் அனைத்தையும் மறந்தபடிதான் நடைவழிக்
காற்றில் உயிரின் சிலிர்ப்புடன் மட்டுமே
எத்துணை அமைதியாகக் கிடக்கின்றன!

Wednesday, January 3, 2024

அடுக்கு மாடி உயரத்திலிருந்து பார்க்கும்போது

இந்த தென்னை மர சிரசுகள்!
காய்களுடனும் கனிகளுடனும்
அத்துணை பெரிய காதலுடனும்
பூமியிலிருந்து பீரிட்டுக் கொட்டும்
நூறு நூறு நீருற்றுக்கள்!

Tuesday, January 2, 2024

கவிதைத் தொகுப்புகள் 74 - 78 வாங்க


















கவிதைத் தொகுப்பு - 78 - காண்பதும் காணாததும்
கவிதைத் தொகுப்பு - 77 - நடைமண்டலம்
கவிதைத் தொகுப்பு - 76 - மெதுவிஷமும் பற்ற இயலாப் புதுமனிதன்
கவிதைத் தொகுப்பு - 75 - வேணுவனம்
கவிதைத் தொகுப்பு - 74 - விண்மாடம்

இந்தக் கவிதைத் தொகுப்புகளை ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கவிதைத் தொகுப்புகளை வாங்க இங்கு சொடுக்கவும் .....

Monday, January 1, 2024

சிறிய தென்னந்தோப்பு

அங்கே எந்த ஒரு தென்னை மரமும்
கூட்டத்தோடு இல்லை.
கூட்டத்தோடு இல்லாமலும் இல்லை.
தன்னந்தனியாக இல்லை.
தன்னந்தனியாக இல்லாமலும் இல்லை.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP