Wednesday, February 28, 2024

சைக்கிள் ஓட்டுதல்

எத்துணை பெரிய மகிழ்ச்சி அது!
”அவள் சைக்கிள் ஓட்டக்
கற்று விட்டாள்! கற்று விட்டாள்!” எனக்
கத்தினான் தெருவில்
கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சிறுவன்
நேற்று சைக்கிள் ஓட்டத்
திணறிக் கொண்டிருந்த தன் தோழி
இன்று வெற்றிகரமாய்ச்
சைக்கிள் ஓட்டிச் செல்வதைக் கண்டு!

அது எத்துணை பெரிய அதிசயம் என்பதும்
நம் ஒவ்வொரு செயலும்
நம் பேருலகத்தோடே இணைந்திருப்பதும்
அந்த பேரொலிக்கன்றி யாருக்குத் தெரியும்?

Monday, February 26, 2024

வனப் பூங்காவில்

வானம் வந்திறங்கி
மல்லாந்து மகிழ்ந்து கிடக்கிறது,
ஒளியும் நிழலும் பூக்களும் கொண்டு
புனைந்து நெய்ததொரு பொற்கம்பளத்தில்

Saturday, February 24, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –11: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு

‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்ற ஒரு குறளும் உண்டல்லவா? ஏன் இச்சொற்றொடர் பிறந்துள்ளது? சிந்தித்துப் பார்த்தால் போதும். அனைத்துத் தவறுகளுக்கான காரணத்தையும் நாம் கண்டுபிடித்துவிடலாம். இந்த அறிவு என்பதும் ஆராய்ச்சி என்பதும்கூட எளியதொரு செயல்தான். எது கடினமானதும், நடைபெறாது உலகைத் துயருக்குள்ளாக்கியிருப்பதும் அதை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும், ஏன் எப்போதும் செய்ய வேண்டிய ஒன்றை விலக்கிக்கொண்டே இருக்கிறோம் என்பதும்தானே நாம் இப்போது காண வேண்டிய உண்மை?

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Friday, February 23, 2024

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் உயர் அடுக்ககம்

ஆயிரம் பறவைகளின்
ஓற்றை அலகுபோல்
ஒரு மின்தூக்கி
கட்டிக் கொண்டிருக்கிறது காண்
ஆயிரம் பறவைகளுக்கான
ஓரு வீட்டினை!

Wednesday, February 21, 2024

ஒரு விசாரணையும் தெளிவும்

வசுதைவ குடும்பகம் என்பதையோ
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதையோ
கடவுளைத் தந்தை எனக் கொண்ட தேவகுமாரனையோ
என்றைக்கு நாம் அறிந்து கொண்டோம்?

உலகப் பயணம் வாய்த்த போது தெரிந்ததா?
அடுக்கக மாடிக் கட்டடங்கள் எழும்பிய போது தெரிந்ததா?
தொழில்நுட்ப வளர்ச்சியால்
உலகம் ஒரு குட்டி கிராமமாகி விட்டபோது தெரிந்ததா?

எத்தகைய மதங்களாலும் ஞானிகளாலும் மாமனிதர்களாலும்
கடவுள்களாலும் சொற்களாலும் தத்துவங்களாலும்
இயலவில்லை என்பது புரிந்ததா?

இனம் என்பதும் சாதி என்பதும் மதம் என்பதும்
நாடு என்பதும்தான்
மானிடத் துயரின் விஷவேர் என்பது புரிந்ததா?

அமைதியின் பேரின்பக் கஞ்சி குடிப்பதற்கிலார்
அதன் காரணங்கள் யாதெனும் அறியுமிலார்
அய்யகோ அய்யகோ என்று
அலறும் துடிப்பினையுமிழந்து நின்றார்
இந்த நிலை கெட்ட மனிதனை உயிர்ப்பிக்கத்தானே
நீங்காத நெஞ்சப் பொறுப்புடனே
பார்வையில் மட்டுமே பிறக்கும்
பாதையினைத் தெரிந்து கொண்டவர்களாய்
பார்க்கத் தொடங்கியிருக்கிறோம், நாம்?

Monday, February 19, 2024

அதிர்ச்சி

எத்தனை மேலான
பெயர்கள், காட்சிகள், சொற்கள் என
பார்த்தும் கேட்டும் படித்தும்
எத்தனை எத்தனை வியப்புகள்
அத்தோடே
மயக்கங்களும் ஏமாற்றங்களும்!

பெயர்கள் உருவங்கள் சொற்கள்
எல்லாம் கடந்து
காண்பதற்கு அழகாக இருப்பவையல்லவா
உண்மையும் நன்மையும் அன்பும் அழகும்?

Saturday, February 17, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்

குழந்தைகளின் களியாட்டங்ளைக் கவனியுங்கள். எல்லோரும் இவ்வாறே இன்புற்றிருக்க விழைவதுவே மானுட லட்சியம். ஆனால் துன்பம் நேர்கையில், அது தனது மானுடப் பொறுப்புணர்வை நோக்கித் திரும்புவதுதானே இயற்கையாக இருக்கவேண்டும்? தடைக்கல்லாக இருப்பது எது? நம் தன்மய்யம் ஒன்றே அல்லவா? இதை அறிந்திராதவரை நம் கலைகளாலும் இலக்கியங்களாலும் ஏது பயனும் இல்லை அல்லவா?
நான் என்னும் பிடியிலிருந்துதானே நமது அனைத்துக் கடவுள்களும் சாத்தான்களும் ஆட்டம்போடுகின்றன. மாறாக, ‘நான் இல்லை’ எனும் காலமற்றதும் இடமற்றதும் பொருளற்றதுமான ஓர் இன்மைநிலையில்தானே, அன்பும், அழகும், உண்மையும், மெய்யான வாழ்வும் ஒளிர்கின்றன? இயற்கையாக இது தோன்றும் போதெல்லாம்தானே அதனை ஒரு கருணை என்று கண்டுகளிக்கிறோம்? எவ்வளவோ உயர்தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் கண்டடைந்துவிட்ட நாம் இதனையும் கண்டடைந்துவிடமுடியாதா என்ன?

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Friday, February 16, 2024

உண்மை நன்மை அழகு

“கடவுள்தான் உன்னை அனுப்பியமாதிரி இருக்குப்பா”,
என்று உள்ளம் நெகிழ்ந்து உருகிய கண்ணீர்
நெஞ்சம் வந்து முட்ட- எல்லோர்க்கும் தான்
நிகழ்ந்த அனுபவங்களையெல்லாம் யோசித்துப் பாருங்கள்.
கடவுள் இருக்கிறார், எங்கே இருக்கிறார்,
என்பதையெல்லாம் தெரிந்து கொள்வீர்கள்.

ஆனால் இந்தத் தருணங்களால்
நிறைந்திருக்க வில்லையே நம் வாழ்க்கை?
நாம் சமைத்திருக்கும் வாழ்வை
நாம் தெரிந்து கொண்டோமா?

இளைப்பாற்றும் இடங்கள் என்றும்
காக்கும் அரண்கள் என்றும் – நம்மை
மக்கு மடையர்களாக்கும்
தடைகளையெல்லாம் அழித்தாலல்லவா
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை நாம் படைக்க இயலும்?

Wednesday, February 14, 2024

இந்த மனிதனைப் பார்த்திருக்கிறீர்களா?

ரொம்ப ரொம்பத்
தீவிரமான ஒரு மனிதனைச்
சந்திக்க நேர்ந்தது.
நாம் படைத்த பெரும் பெரும்
இலக்கியங்களைக்கூட
பொழுது போக்குகளாகத்தானே
ஆகிக் கிடக்கின்றன என்கிறான்.

இவன் கோளாறுதான் என்ன

உனக்கு என்னதான் வேண்டும்
எனக் கேட்டால்
அதை நீங்கள்தானே
கண்டுபிடிக்க வேண்டும் என்கிறான்.
(அதாவது ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க வேண்டுமாம்)

நீங்கள் இந்த மனிதனைப்
பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லையா?
அவனை நான் பார்த்துவிட்டேன்
அவன் இடத்தையும் அறிவேன்.
(நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் தானே
இருக்க வேண்டும் அவன்?)
மெதுவிஷமும் பற்ற இயலா
அந்தப் புது மனிதன்!

மாற்றப் படாத வீடு என்று
குழப்பங்களையும் போர்களையும்
துயர்களையும் சுட்டுகிறான்
என்ன செய்ய எனத் துவள்கையில்
தோள் தொட்டு
மின்னற் பொழுதே தூரம் என்கிறான்

அய்யோ அய்யோ
நாம் கொளுத்தி வளர்த்துவிட்ட தீயை
நாம் தானே அணைக்க வேண்டும்
அவசர அவசரமான பணிகள்
எத்தனை எத்தனை எனத் தவித்தால்
தீயைத் தீயென
நாம் கண்டு கொண்டால் போதும்
தயாராய்க் காத்து நிற்கின்றது
பூட்டிக் கிடக்கும் பொன்னுலகைத் திறந்துவிட
அருட்பெருஞ்சோதியின்
தனிப்பெரும் கருணை என்கிறான்

குளித்துக் கரையேறாத கோபியர்கள் எனச் செல்லமாய்
மானுட சமுத்திரக் குழந்தைகளை
தன் மாயக் கண்ணாடியில் காட்டுகிறான்

Monday, February 12, 2024

வசந்த ராணி

மரமே ஒரு பூவாக
வனமும் வானமும் பூமியும்
வாழ்வுமே ஒரு பூவாக!

”நான் ஒரு மலர்தான் என்பதுதானே
முதன்மையும்
மறைந்து கிடக்கும் பேருண்மையுமாம்”
என்றபடி வெளிப்பட்டுவிட்டார் காண்
வசந்த ராணி!


Saturday, February 10, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –9: கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்

‘கடவுளைக் கண்டமாதிரி இருக்கிறது.’ ‘கடவுளாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.’ ‘கடவுளே வந்தாலும் முடியாது.’ ‘கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நன்றாக இருக்கும்!’ ‘பார்த்தீர்களா, கடவுள் இருக்கிறார்.’ – இது முதல்வரியைப் போன்றதேதான். இப்படி இப்படி கடவுள் என்ற சொல்லைத்தான் நாம் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம். அறிவுக்கு அப்பால் நின்றபடிதான் ஒரு கவிஞனும் கடவுள் என்று தனக்குப் பெயர் சூட்டிக்கொள்கிறான்.

ஊட்டி நாராயணகுருகுலத்திலிருந்து வந்த துண்டுபிரசுரம் மூலம் நித்ய சைதன்ய யதியின் தன் வரலாற்று நூல் வெளிவந்துவிட்டது என அறிவிக்கப்பட்டிருந்தது. சற்றும் தாமதிக்காமல், உடனேயே தொகை அனுப்பி – அப்போதே அது எனக்கு மிகப் பெரியதொகை – உடனே வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும் வழி அஞ்சல்நிலையத்திலேயே அதைப் பெற்றுக்கொண்டு பள்ளியின் ஓய்வுநேரத்திலேயே அதைப் படிக்கத்தொடங்கி ஒரே மூச்சில் அதை முடித்தேன். வாசிப்பில் அணுக்கமான நண்பரிடம் நான் அதைச் சொல்ல அவர் அதை ஊர்ந்து வாசிக்கத் தொடங்கி, நானே திரும்பவும் மற்றொரு நூலை வாங்கிக் கொள்ளும்படிச் செய்துவிட்டார். அந்த நூலில் இரண்டு இடங்களில் நான் அடிக்கோடிட்டிருந்தேன். ஒன்று மிகப் பிரபலமான அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய வருத்தத்திற்குரிய உண்மை. மற்றொன்றுதான் கடவுளைப் பற்றி அவர் என்னைப்போலவே எழுதியுள்ள வரிகள்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Friday, February 9, 2024

உன் துயரங்களையெல்லாம்

உன் துயரங்களையெல்லாம்
எங்காவது இறக்கிவைக்கப் பார்க்காதே
இறக்கி வைத்து வைத்த இடத்தையே
கைகூப்பித் தொழுகிறவனாய் ஆகாதே.

துக்கம் ஒரு மணிமுடியாய்
இரத்தம் வடிக்கும் முள்முடியாய்
உன் சிரசிலேயே இருக்கட்டும்
துக்கம் அறிந்தவன்தானே
துக்கம் நீக்கும் வழிசுட்ட முடியும்?

துக்கம் நீங்கி
துக்கம் போலுமே பெருநிறை ஒளிரும்
பேரின்மை வெளியில்தானே
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தைக்
காட்ட முடியும்?

Wednesday, February 7, 2024

நல்லிணக்கமும் நற்செயல்களும்

எந்த நற்செயல்களும்
அடையாளங்களுக்குள்ளிருந்து வரவில்லை!

அடையாளங்களுக்குள்தானே
இரகசியமாய் ஒளிந்திருக்கிறான் சாத்தான்?
அவன்தானே நல்லிணக்கம் பேசுகிறான்?

நல்லிணக்கம் செய்வதெல்லாம் கடவுள்
நம் அடையாளங்களையெல்லாம்
நம்மிலிருந்து கழற்றி எறிந்திருக்கும்
வேளைகளில் மட்டுமே அல்லவா?

Monday, February 5, 2024

வெள்ளிமலை...

வெள்ளிமலை உச்சியிலிருந்து
குட்டிச் சிறுமியாய்
குதித்திறங்கி ஓடிக்கொண்டிருந்த வண்டியில்
நாட்டிய சுந்தரி கிருபா லட்சுமி.

வழியெங்கும் கொஞ்சம் கொஞ்சம்
இலைகளுதிர்ந்து கிளைகளுடன் நிற்கும்
மரங்களெல்லாம்
“என் சதங்கைக்குப் பதில் சொல்லடி” என்றபடி
அப்பப்பா,
எத்தனை எத்தனை அபிநயங்களுடன்!

என் செல்லமே, இனி நமக்கு இந்த
இயற்கையுடன்தான் போட்டி
பாவப்பட்ட இந்த மனிதர்களுடன் அல்ல.

Saturday, February 3, 2024

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் –8: காதலும் எண்ணங்களும்

முதல் எண்பதுகளில் ஓர் ஆண்டு அது. அடையாறு வசந்தவிஹாரில் பத்துநாட்கள்(ஏழு நாட்கள்?) ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவினைக் கேட்கச் சென்றிருந்தேன். அந்தப் பத்துநாட்களின் பிற பொழுதுகளெல்லாம் பிரமிளுடன் கழிந்தன. ஊர் திரும்புகையில் பிரமிள் போகிறது போகிறீர்கள் திருவண்ணாமலை சென்று யோகி ராம்சுரத்குமாரைச் சந்திந்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியிருந்தார். சென்றேன்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Friday, February 2, 2024

அப்போது

எல்லோரும் இப்படி ஆகமுடியும்
எல்லாவற்றையும்
களைந்து நின்ற
காலமற்றபோதே
கடவுளானேன்
இதைச் சொல்லும்
இப்போது தவிர.

கடவுளின்போது
நானில்லை
நீயுமில்லை
ஒரு சொல்லுமில்லை
காதலும்
செயலும் மட்டுமே
இருந்தன அப்போது.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP