வழி
வழி கண்டுகொண்டபிறகு
வழி எங்கே இருக்கிறது
நடை என்னும்
செயல் மட்டும்தானே இருக்கிறது?
Poet Devadevan
வழி கண்டுகொண்டபிறகு
வழி எங்கே இருக்கிறது
நடை என்னும்
செயல் மட்டும்தானே இருக்கிறது?
அவன், ஆடை களைகையிலும்
குளிக்கையிலும்
புத்தாடை அணிகையிலும்
யாருமில்லாதபடி அறையடைத்தபடி
தனியாகத்தான் செய்கிறான்
அழுக்கேறியவைகளைக்
களைந்து துவைத்துக் காயப்போட்டு
புத்தாடைகளாக்குகிறான்
புதிய ஆடைகளுக்கே அவன்
தன் தலையையும் கைகால்களையும்
அளிக்கிறான்!
அழுக்காடைகளுடன் அலைகையில்
அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது
அல்லது அவனுக்குப் பைத்தியம்பிடித்தே
அழுக்காடைகளுடன் அலைகிறான்
குளித்தல் என்பதன் முழுமுதற் பொருள்
தன்னைத் தூய்மை செய்து
தூய்மையில் திளைத்தல்தான் இல்லையா?
எத்துணை குளிரான பொழுதிலும்
குளித்து முடித்ததும்
நம்மை வந்து தழுவிநிற்கும்
ஒரு புதுக்குளிர்மையை
பாருங்கள், புரியும்!
நமது ஆன்மாவும் உடலும்
வேறு வேறில்லை என்பதும்!
விரிந்து கிடந்த சிமெண்டுத் தளத்தில்
கோடானு கோடி புள்ளித் துளிகள்!
பெருவெள்ளம் ஒன்றை
வரைந்து காட்டுகிறது மழை!
பெயரிடப்பட்டதால்தானே
அது இல்லாமலாச்சு
எல்லா நட்டங்களும் தீமைகளும்
உருவாச்சு?
பெயரிடாமல்
பார்த்துக் கொண்டிருக்க முடியாதா நமக்கு?
பாதை பிறக்குமிடமல்லவா பார்வை?
தவிர்க்க முடியாமல் அது பெயரிடப்படுகையில்
நிகழ வேண்டியதே நிகழ்வதற்காக
நாம் கண்டுகொள்ள வேண்டியது
தவிர்க்க முடியாமல் அது பெயரிடப்படுகிறது
என்பதுதானே?
கறுப்புக்கும் வெண்மைக்கும்
(சாம்பலுக்கும்தான்)
இடையேயுள்ள இடம் எது?
பெயரிட ஏன் இயலவில்லை அதற்கு?
எங்கிருக்கிறது அது?
எவ்விடத்திலும்தானே இருக்கிறது அது?
எப்படி இருக்கும் அதன் வண்ணம் என்பதை
அறிய முடியுமா?
எனினும் உணர முடியும்தானே?
சொற்கள் சோறு போடாது எனினும்
உரைக்க முடியும்தானே?
மூன்றாம் இடம் அது.
அதுதானே விடுதலை இருக்குமிடம்?
அன்பு நடம் புரியும் இடம்?
எப்போதும் புதுச் செயல்கள் பிறக்குமிடம்?
நூல்களும் அலமாரிகளும்
அணுமின் தகடுகளும் வந்தபிறகு
நாம் தைரியமாய் உதறவேண்டிய
அனைத்துச் சுமைகளையும்
உதறிவிடலாமல்லவா?
நம் சடங்குகள் சம்பிரதாயங்கள்
விக்கிரகங்கள் வழிபாடுகள் எதனையும்
இனி நாம் சுமந்துதிரியவேண்டியதில்லை அல்லவா?
வரலாற்றையும் புவியியலையும்
அறிவியலையும்
கற்றல்தானே கடவுளாயிருக்கிறது?
வழிநடத்தல்தானே வழிபாடாயிருக்கிறது?
அழுது அழுது அரற்றிய
அவன் கண்ணீரில் நனைந்திருந்தது பூமி
புயலாய் முளைத்தெழுந்தது
ஒரு புல்லின்
குரல்:
”கடவுளின் ராஜ்ஜியத்தை
அடையவே முடியாது
நாம் எல்லோரும்
தாய்/தந்தையாகவும் குழந்தைகளாகவும்
மாறாத வரை!”
பணியிடங்களிலெல்லாம்
இடைஞ்சல்களாகத்தானே ஆகின்றன
பிறிதொன்றான
உன் ஆன்மீகச் சிந்தனைகள்?
தனி இடங்களில்தான்
அதனால் ஒரு ஆபத்தோ, இடைஞ்சலோ
இல்லை எனினும்
இறங்கி அது செயல்படுகையில்தானே
அன்பு என்றும் உறவு என்றும்
அதற்கு மரியாதை?
அறிதலின் சாலையில்
அறிவுகளெல்லாம்
அழிந்த பிறகல்லவா
அன்பு வந்து நிற்கிறது?
மதத்தை ஒரு அமைப்பாக்கவோ
சடங்காக்கவோ முடியுமா?
அன்பை
பரப்புரை செய்வார்களா என்ன?
இப்போது நமக்கு தெரிந்துவிடவில்லையா
இந்த ஈனச் சிறு உலகின் -சாத்தானின்-
தந்திரமயமான செயல்பாடுகளெல்லாம்?
யாவருக்குமாய்த்
தோற்றுவிக்கப்பட்ட ஒரு மதம்
பிறிதொரு மதமாய்த் தோன்றி
மனிதர்களைப் பிரித்தது எப்படி?
யாவருக்குமானதாக இல்லாத ஒன்று
எப்படி மதமாக இருக்க முடியும்?
விவேகமான மனிதர்கள் இவ்வுலகில்
இன்னும் உருவாகவில்லையா?
தோற்றுவிக்கப்படுவதல்ல மதம்
உள்ளது அது அதனைக்
கண்டுகொள்வதன்றோ மதம் என்பதை
இன்னும் மனிதன் கண்டு கொள்ளவில்லையா
விவேகமான மனிதர்கள்
இன்னும் உருவாகவில்லையா?
ஒவ்வொன்றாய் திரைகளனைத்தையும் விலக்குதலோ
சுற்றிச் சுற்றிச் சேலை களைதல்?
திரைகளனைத்தும் நீங்கி
நிர்வாணம் காணவேண்டிய அரங்கில்
ஒரு பேண்டேஜ் கட்டாய் உன் பிரா!
தரிசனம் தந்த அதிர்ச்சியா?
ஏன் ஏன் என்னவாயிற்று உனக்கு என
என்னை உலுக்குகிறாய் நீ
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறேன்
இல்லை ஏதோ இருக்கிறது…
என்றாலும் நீ
எதுவும் கேட்டுக்கொண்டிருக்கவில்லை
அரவணைத்தன உன் கைகள் என்னை.
அரவணைப்பை துய்க்காது
விலகி ஓடி அழலாமோ இதயம்?
சற்று நேரம் அல்லது 2500 ஆண்டுகள் கழிந்து
மீண்டு திரும்பியவன் காண்கிறேன்;
என் மாம்ச உடம்பின்மீது உன் கரம்
ஒரு சிகிச்சைக் கட்டாய் தழுவியிருப்பதை.
அன்பு நிகழும் போது
நீ ஆணா? பெண்ணா?
அழகை கண்ணுறும்போது?
உண்மை காணும்போது?
உயர்வைத் தீண்டும்போதெல்லாம்?
துன்பம் நேர்கையில்?
பெருங்களி துள்ளும்போது?
எப்போது இருக்கிறாய் நீ
ஆணாய்? பெண்ணாய்?
ஆணாகவோ பெண்ணாகவோ
அப்படி நீ இருக்கும் போதெல்லாம்
சங்கடப்படுகிறாயா? சந்தோஷப்படுகிறாயா?
நீ கண்டுகொண்டதுதான் என்ன, அன்பா
நீ யார்?
தன்னுடைய காதலைத்தான்
தான் தேடி அலைகிறோம் என்பதை
தேவதாசும் அறிந்திலனோ?
உலகியல் இன்பத்திலில்லை ”அது” என்பதை
தேவதாசிடமிருந்துதான்
கண்டுகொண்டாளோ சந்திரமுகி?
குடித்துக் குடித்துத்
தன்னை அழிக்கப்பார்த்துக்கொண்டிருக்கிற
தேவதாசைக் காக்கும் தாசியாகிறாள்!
தான் கண்டதை
விண்டுரைக்க முடியவேயில்லையா
சந்திரமுகிக்கும் தேவதாசிடம்?
தொண்டுசெய்தலும் உறவாயிருத்தலும் தவிர
கண்டடைய ஒன்றுமில்லை என்பதைக்
கண்டுகொண்டாளோ சந்திரமுகி?
”நான்” ”எனது” என்று அலைவது
எப்படி காதலாகும்?
தேவதாசிடமிருந்தது காதலா?
பார்வதியிடமிருந்ததல்லவா காதல்?
சாகுந்தறுவாயில்
பார்வதியை நோக்கித்தானே
பாடுவிடாது வந்துகொண்டிருந்தான்
தேவதாஸ்?
தேவதாசின் பிணத்தைக் காண
ஆசைப்பட்டுத்தானே விரைந்தாள் பார்வதி?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP