Monday, December 30, 2024

அம்மாவின் முகம்

புகைப்படம் இல்லாது போய்விட்டதால்
பார்க்கும் பெண்களிடமெல்லாம்
பெருகிவிட்டது அம்மாவின் முகம்!

தனியான ஒரு விண்மீனைப் பார்க்கையில்
அம்மாவின் மூக்குத்தி ஏன் ஞாபகம் வருகிறது
என்று தெரியவில்லை!

Friday, December 27, 2024

நடைப்பயிற்சி

எண்ணங்களை விலக்கியபடி
எண்ணங்களற்ற வெளிநோக்கி
அவன் நடந்துகொண்டிருந்தான்

இப்போது அவன்
எண்ணங்களற்ற வெளியில்
நடந்துகொண்டிருந்தான்

மரங்கள் நடுவே நடந்து செல்லும்
ஒரு மனிதனைப் போலவே!

Wednesday, December 25, 2024

காற்றில் நனைந்தபடி

காற்றில் நனைந்தபடி நடந்து செல்கையில்
காதலில் மிதந்து செல்வது போலில்லை?

எந்த ஒரு அன்பர்-அறிஞர்- எதிர்ப்பட்டாலும்
உங்கள் நடை தடைப்பட்டுவிடாதவரை
ஒரு பிழையும் நிகழ்வதில்லையல்லவா?

எல்லா அறிவுகளும்
விரல் தொடுகையில் எளிதாகவே
அடையக் கூடியதாகவே இருக்கிறது
அன்பு ஒன்றுதான் மிக அரிதாக
இருக்கிறதாய் உணர்கிறீர்கள்?
அதுவும் எத்துணை எளிதான ஒன்று
அனைத்து அறிவுகளையும்
ஒரு சுட்டுவிரல் விலக்கி நிற்கையில்!

அணைய வேண்டியதை அணைவதற்குத்தானே
விலக்க வேண்டியதெல்லாம் விலக்கப்படுகிறது
தொட்டுவிட்டாலே அன்பும் அறிவாகிவிடுகிறதெண்ணி
தொடுகையையும் விலகலையும் தொட்டுவிடாத, விட்டுவிடாத
அன்பின் இரகசியத்தை அறிந்ததுவாய்
தென்றலாய் விரல்கள் வருடிச் செல்கின்றன!
நடந்து செல்கிறான் அவனும்!
நடந்து செல்கிறீர்கள் நீங்களும்!

Friday, December 13, 2024

ஹிஜாப்

ஒளியிலிருந்து பிறந்த விழிகள்
இருளில் மாட்டிக்கொள்ளுமா என்ன?

ஒளியும் ஒளியின் நிழல் போலும்
நின்று கொண்டிருந்தார் அந்தப் பெண்!

பார்வை ஒன்றுதான் இந்த உலகைக்
காப்பற்ற வல்லது என்பதுபோல்
பார்த்தபடி நின்றிருந்தார்

பார்வையைக் கண்டுதானே
காதல் கொண்டுவிடுகிறார்கள் காதலர்கள்!

மெய்ச் செயல் இரகசியமாய்
பார்வையிலிருந்துதானே பிறக்கிறது பாதை?

அப்புறம்,
பார்வையைத் தக்கவைத்துக் கொள்ளாது
பற்றியதைப் பற்றிக்கொண்டு உழல்பவர்களால்தானே
பாழாய்ப் போய்க்கொண்டிருக்கிறது இந்த உலகம்?

Wednesday, December 11, 2024

நிலத்தில்

நிலத்தில்
குதித்துக் குதித்துப் பகட்டித் திரிந்த
ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு
மீண்டும் குழந்தையாய் தான் வாழ்ந்து களித்த
பெருங்களத்திற்கே வந்து
நீந்தத் தொடங்கியதுகாண் தவளை!

அப்போதுதான் உலகு மீண்டதுகாண்
போர்களும் துயர்களுமற்ற
ஆனந்தப் பெருவெளி அமைதிக்கு!

Monday, December 9, 2024

தவளைகள் – 2

அப்பா
திராவிடர் கழகத்தின்
கருஞ்சட்டைக்காரராயிருந்தார்
அத்துணை தீவிரமானவர்.

அப்புறம் எப்படியோ திமுகவினரானார்

அப்புறம் எப்படியோ முதுமையான வயதில்
திருநீறணிந்து கடவுள் படத்தின்முன்
தொழுது கொண்டு நிற்பவரானார்…

ரொம்ப கனிந்துவிட்டாரா
எல்லோரும் செல்வதுபோல்?
அல்லது மழுங்கிவிட்டாரா
தனை அறியும் அறிவிலாத மானுடர்போல்?

குதித்துக் குதித்துக் குதித்தே நிதம் சாகின்றன
தூரம் வந்துவிட்ட தவளைகள்!

Friday, December 6, 2024

தவளைகள் - 1

குதித்துக் குதித்துக் குதித்தே நிதம் சாகின்றன
தூரம் வந்துவிட்ட தவளைகள்!


- விண்ணளவு பூமி(2000) தொகுதியிலிருந்து

Monday, December 2, 2024

கடவுளர்களும் தேவபாஷைகளும்

எந்த மொழியானால் என்ன
அன்பில் தோய்ந்து ஒலிக்கையில்
தேவபாஷையாகத்தானே இருக்கிறது?

எந்த மனிதர்களானால் என்ன
அன்பில் வெளிப்படுகையில்
கடவுளாகத்தானே காணப்படுகிறார்கள்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP