Friday, February 28, 2025

மிக மெதுவான

மிக மெதுவான
அவன் காலடி ஓசையையும்
மிக அண்மையான
மவுன வெளிகள் எதிரொலிக்கின்றன!
இல்லை, இல்லை
ஏற்று பரப்புகின்றன

மவுன வெளிகள் ஏற்றுப் பரப்புவதையோ
அண்ட வெளியெங்குமுள்ள
வெளிகள் ஏற்று பரவசிக்கின்றன!

காலடி ஓசை என்பது
பூமியுடன் பூமி மைந்தன்
ஆடிய உரையாடலின்
அன்பும் உச்சரிப்பும் அல்லவா?

Monday, February 17, 2025

எத்தனைத்துளி அமிழ்துகளாலும்…

எத்தனைத்துளி அமிழ்துகளாலும்
முடிவதில்லை
வேர்பிடித்து பரவிவிடும்
துளிவிஷத்தையும் முறித்துவிட!

கவனமும் அக்கறையுமில்லாத
நம் நீர்வெளி உலகில்
தோன்றித் தோன்றி
முழுமை நோக்கியே
விரிந்து கொண்டிருக்கின்றன
நம்முள்ளிருந்து குதித்து
வேர்பிடித்துப் பரவும்
துளி விஷமும் துளி அமுதும்!

திகைத்துப்போய் நிற்கிறோம்
மனிதர்களில்லா நீர்வெளியில்தான்
மனிதர்களாகிய நாம்

பேருலகைப் பார்த்தபடி செயலற்று

நம் குழந்தைப் பொழுதுகள் மட்டுமே
தேவதை மீன்களாய் நீந்திக் களிப்பதை!

Friday, February 14, 2025

பரிசுப் பொட்டலம்

கண்டங்கள், கடல்கள், நாடுகள் என
கட்டு இழைகள் பிரிக்கப்பட்டிராத
பரிசுப் பொட்டலம் போலிருக்கிறது பூமி!

இந்த நூலகங்கள் தோன்றியபிறகும்
மனிதர்கள் வெகுவாகக் கூடிவிட்டபிறகும்
பழம் பெருந் தடங்கள் எல்லாம்
பார் சுற்றுலாத் தலங்களாகிவிட்டபிறகும்
மதங்களும் கோயில்களும்
கொள்கைகளும் கோட்பாடுகளும்தான் எதற்கு?

Wednesday, February 12, 2025

மேப்பில்(Maple) வண்ண உதிர் இலைகள்





















பறவைகளின் பாதம் போன்றும்
பாதத்தடங்கள் போன்றும்
பிஞ்சுக் குழந்தைகளின்
பூவிரல் படம்போலும் தொடுகைபோலும்
விழிகளைப் பறிக்கின்றன
இந்த மேப்பில் வண்ண உதிர் இலைகள்

கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும்
உயிர்த்தபடி
அறைவாசற் கதவோரம்
காலண்டரின் வெண்முதுகுப் பரப்பில்
ஓவியமாய் ஒட்டப்பட்டு
சுவரில் தொங்குகின்றனர்
தூர தேசத்திலிருந்து
அஞ்சலில் வந்து சேர்ந்த இந்தத் தூதுவர்கள்!

தங்கள் நாட்டை அறியாது
காலங்களை அறியாது
தூரங்களை அறியாது
மானுடத் துயர்கள்
எதையுமே அறியாது
பொங்குமாங் காதல்
உள்ளங்களை மட்டுமே அறிந்து களிப்பவர்கள்.
பேருணர்வுகளாற் சிவந்த உதிரங்களேயானவர்கள்!

Monday, February 10, 2025

வண்ண உதிர் இலைகள்

தூர தேசத்திலிருந்து வந்து
காகிதத்தில் ஒட்டப்பட்டு
சுவரில் தொங்கும் ஓவியமாகிவிட்ட
இந்த வண்ண மேப்பில் உதிர் இலைகளுக்கு
மரணமுண்டோ?

பெற்றுக்கொண்டதன் பார்வைக்காய்
அனுப்பப்பட்ட பேசித்திரைப் புகைப்படத்தில்
பாருங்கள் எத்துணைப் பேரோளியைக் கண்டதாய்
ஜ்வலிக்கின்றன அவை
நெஞ்சின் நிறை ஒளியைப் போலவே?

கருணைக் கொடையான அறிவியல் வளர்ச்சிக்கும்
மீண்டும் மீண்டும் இயற்றிக் கொண்டே
பூமியெங்கும் உலவி நிற்கும் இயற்கைக்கும்தானே
நாம் நன்றி சொல்ல வேண்டும்?



குறிப்பு – மேப்பில் இலைகள் – Maple leaves

Friday, February 7, 2025

ஒரே வழி!

நீ ஆணாயிருந்தால் என்ன
பெண்ணாயிருந்தால் என்ன
தனை அறியும் பார்வையும்
தனைத் துறக்கும் பாதையும் அல்லவா
ஒரே வழியாய் இருக்கிறது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP