Saturday, April 30, 2011

சிற்றெறும்பு

வாசிக்க விரித்த பக்கத்தில்
ஒரு சிற்றெறும்பு விரைவது கண்டு
தாமதித்தேன்.
புதிது இல்லை அக்காட்சி,
ஒவ்வொரு முறையும் தவறாமல்
என் நெஞ்சை நெகிழச் செய்யும் அக்காட்சி

அதன் உடல் நோகாத மென்காற்றால்
ஊதி அகற்றிவிட்டு
வாசிப்பைத் தொடரும்
என் வழக்கத்திற்கு மாறாய்
இன்று வெகுநேரம்
அதனையே பார்த்திருந்தேன்

விளிம்பு தாண்டி மறைந்தும்
மீண்டும் சில வினாடிக்குள் தென்பட்டுமாய்
காகிதத்தின் விசித்திரமான கருப்புவெள்ளைப் பரப்பூடே
எத்தனை சுறுசுறுப்பாய் இயங்குகிறது அது

எதைத் தேடி
அது இந்தப் புத்தகப் பாலையூடே
வந்து அலைகிறது?
மூடத்தனமான என் கைகளின் இயக்கத்தால்
மடிந்துவிடாத பேறு பெற்றதுவாய்
இன்னும் உயிரோடிருக்கும் ஒரு பேரின்பமோ?
ஊன் பசிக்கு மேலாய்
நம்மை உந்திச் செல்லும்
பேருந்தலொன்றின் சிற்றுருவோ?

Friday, April 29, 2011

அது போகிறது போகிறது

ஆயிரம் மனிதர்களோடு நான் அமர்ந்திருக்கையில்
மொத்த உலகத் தீமையின்
ஆயிரத்திலொரு பங்கு என் தலையை அழுத்தியது

நான்கு பேராக நாங்களிருக்கையில்
நான்கிலொரு பங்கு என் தலையில்
மூன்று பேராக நாங்களிருக்கையில்
மூன்றிலொரு பங்கு என் தலையில்
இரண்டு பேராக நாங்களிருக்கையில்
இரண்டிலொரு பங்கு என் தலையில்

ஏகாந்த பூதமொன்று வதைத்த்து என்னை
மொத்த உலகத் தீமைக்கும்
மூலகாரணன் நான் என

இந்த்த் துயரமழை கோடானுகோடி வயதான
இந்தப் பாறைகளின் இதயநெருப்பைத் தேடுகிறது
அமைதி கொண்ட துயர்மேகங்களின் நடுவிலிருந்து
எட்டிப் பார்க்கும் சூரியனின் காயங்களுக்கு
மருந்தாகின்றன
இறுதிக் கண்ணீர்த் துளிகளை
அப்போதுதான் உதிர்த்து முடித்த
தாவரக் கடல்களின் பச்சை இலைக்கண்கள்

ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பில்
காற்று அலுப்பு நீங்குகிறது
பச்சைக்கடல் பொங்குகிறது
மலை தன் பாரம் இழந்து வெறும் புகைமண்டலமாகிறது
பாறையை ஊடுருவிக் கொண்டிருக்கும்
குருட்டு வண்ணத்துப் பூச்சிக்குக்
குறியாகிறது பாறையின் இதயநெருப்பு
ஒரு பக்கம் பாலாகவும்
ஒரு பக்கம் குருதியாகவும் வழிந்துகொண்டிருக்கும்
விசித்திர அருவிகளைத் தாண்டித்
தாண்டித் தாண்டி அது போகிறது
குகையிருள்களில் உறைந்து போன
கருப்புப் பெண்களை உசுப்பியபடி
தீமையின் வாள் எதிர்க்க
அது தன் உடல் பெருக்கி எழுகையில்
தாக்குண்டு உடல் சரிந்து
உறையாது ஓடும் தன் குருதியின் கரையோரமாய்
அது போகிறது போகிறது
உயிர் பற்றியபடி தன் உயிர் உறிஞ்சும் தாகத்திற்கு
உதவாத தன் குருதி நதியைக் கடந்தபடி
அது போகிறது போகிறது

Thursday, April 28, 2011

தென்னைகளும் பனைகளும்

எல்லாத் தாவரங்களும் நீர் விரும்பிகள்தாம்
நீர் நிலைகளினருகே இடம் கிடைத்ததால்
நெடுநெடுவென வளர்ந்தாள் இவள்
சற்றெ வளைந்து ஒயில்காட்டி நின்றாள்
எப்போதும் அப்போதுதான் குளித்து முடித்தவள்போல் விரித்த
நீள நீளமான தன் தலைமயிரை
காற்றால் கோதியபடியே வானில் பறந்தாள்
முலை முலையாய்க் காய்த்து நின்று
தன் காதலனை நோக்கிக் கண்ணடித்தாள்
மென்மையான தன் மேனி எழிலுடன்

எல்லாத் தாவரங்களும் நீர்விரும்பிகள்தாம்
நீர் நிலைகளினருகே வாழமுடியாது விரட்டப்பட்டதால்
பாலைகளில் வந்து நின்றாள் இவள்
கருகருவெனப் பிடிவாதமாய் வளர்ந்தாள்
உடலெங்கும் சிராய்களுடன்
கருத்த கல்தூணாய்
சிலிர்த்த குத்தீட்டித் தலைமயிர்களுடன்
கடுமை கொண்டவளாய் நிமிர்ந்தாள்;
இவளிடமும் காதல் இருந்தது,
அந்தக் காதல்...

Wednesday, April 27, 2011

நதிகளும் நம் பெருங்கோயில்களும்

முடிவற்ற பொறுமையும் நிகரற்ற ஆளுமையுமாய்
ஒளிரும் மலைகள்
முழுமை நோக்கி விரிந்த மலர்கள்
ஒளி விழைந்து நிற்கும் மரங்கள்
செல்லக் குழந்தைகளாய்த் திரியும் பறவைகள்
கவனிப்பாரற்று வீழ்ந்து கிடக்கும் நதியைத்
தூக்கி எடுத்து மடியில் கிடத்திப்
பாலூட்டிக்கொண்டிருக்கும் தாய்மை

தாகங் கொண்ட உயிர்கள் அனைத்தும்
வந்துதானாக வேண்டிய
தண்ணீர்க் கரைகளையே
தந்திரமாய்த் தேர்ந்துகொண்டு
மறைந்துநிற்கும் வேடர்களைப்போல்
கோயில்கள்

நதியினைக் காண்பதேயில்லை
தீர்த்தயாத்திரை செய்யும் பக்தன்!
மலையினைக் கண்டதுண்டோ
மலர்களைக் கண்டதுண்டோ
கோயில்களுக்குள்ளிருக்கும் குருக்கள்?
மரங்களைக் காண்பதேயில்லை
பறவைகளைக் காண்பதேயில்லை
கோயில் பரிபாலனம் செய்யும் அரசு.
மனிதனைக் கண்டதுண்டோ
மெய்மையைக் கண்டதுண்டோ
பக்தி மேற்கொண்டு அலையும் மனிதன்?

ஆற்றங்கரையின் மரமாமோ
தீர்த்தக்கரையின் கோயில்?

Tuesday, April 26, 2011

பனைகள்

பனைகளின் தலைகளெங்கும்

பறவைகளின் சிறகுகள்

பச்சைப்பனைகளின் நடுவே

ஒரு மொட்டைப் பனை

மொட்டைப்பனை உச்சியிலே

ஓர் பச்சைக்கிளி

அடங்கிவிட்டது

'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல்

மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது

இனி இங்கே நான்

செய்யவேண்டியதுதான் என்ன ?

'நானே தடைகல் 'ஆகும்வழியறிந்து

வழிவிடுவதை தவிர ?


பனைகளின் தலைகளெங்கும்

படபடக்கும் சிறகுகள்

பாவம் அவை பூமியில்

மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

எருது

அமர்ந்து அசைபோடும்
மரநிழலையும் மறந்து
வானமும் பூமியுமாய் விரிந்த
நிலக் காட்சியில் ஒன்றிவிட்டனை!

ஏது தீண்டிய அரவம்
உன் தோள்பட்டைச் சதையில்
திடீரென்று ஏற்பட்ட சிலிர்ப்பு?

நொய்மைக்குள் நுழைந்துவிடும்
அந்த வலுமைதான் யாதோ?

சொல்,
மெய்மையை அறிந்துகொண்டதனால்தானோ
ஊமையானாய்?

எங்களை மன்னித்துவிடு,
எங்கள் மொழியில்
உன்னை ஒரு வசைச் சொல்லாய் மட்டுமே
வைத்திருந்ததற்காக

இன்று பார்க்கத் தொடங்கிவிட்டோம் நாங்கள்,
கால்மடக்கி அமர்ந்திருக்கும் உன்பாறைமையை,
காட்டில்
சிங்கத்தினை எதிர்க்கும் உன் உயிர்மையினை
உன் நடையும் நிதானமும் வாலசைவும்
பறைபோல ஒலிக்கும் உன் குரலும்
அமைதியாக எமக்குப் போதித்துக் கொண்டிருக்கிறதை

Monday, April 25, 2011

தாழிட்ட கதவின் முன்

1
தாழிட்ட கதவின்முன் நிற்கும்
மனிதனிடம் ஓடிவந்து
“இந்தாங்க மாமா“ எனத்
தன் பிஞ்சுக் குரலுடன் நீட்டுகிறது
அண்டை வீட்டுக் குழந்தை
அனைத்துப் பிணிகளுக்குமான மாமருந்தை
விடுதலையின் பாதை சுட்டும் பேரொளியை
சொர்க்கத்தின் திறவுகோலை!

2
தாழிட்ட கதவின்முன்
பொருமி நிற்பதன்றி
களங்கமின்மை பற்றி
நாம் அறிந்துள்ளோமா?
அறிந்துள்ளோம் எனில்
களங்கங்கள் பற்றியும்
நாம் அறிவோமில்லையா?
அறிவோமெனில்
அவற்றை ஏன் இன்னும்
ஒழிக்காமற் பேணிக்கொண்டிருக்கிறோம்?
சாதி மதம் நாடு இனம் என்று
நம்மைக் களங்கப்படுத்தும் பிசாசுகளின்
இருப்பிடமும் பாதைகளுமாய் நாம் ஆனதெப்படி?
களங்கமின்மையின் இரகசியத்தை
நாம் ஏன் இன்னும் காண மறுக்கிறோம்?

பன்னீர் மரக் கன்று

நான் தேடிய நல்ல உயரமான
ஒரு பன்னீர்க் கன்றை
தான் வைத்திருப்பதாயும்
தரக்கூடியதாயும் சொன்ன
எனது மாணவச் சிறுவனின்
வீட்டையும் அந்தக் கன்றையும்
நேரில் சென்று பார்த்துவைத்தாயிற்று

அவனிடமிருந்து அதனைப் பக்குவமாய்ப் பெயர்த்துவர
இந்த வெங்கோடைப் புவிப்பரப்பில்
ஒரு விடிகாலை அல்லது அந்திதானே
உத்தமமான நேரம்?
தன் மலர்மரக் கன்றோடு
முடிவற்ற பொறுமையுடன்
எனக்காக அந்தச் சிறுவன் காத்திருக்க,
ஒவ்வொரு நாளும் மடிமிகுந்து விடிகாலையையும்
அலுப்புமிகுந்து அந்தியையும்
நெடிய மறதியினாலும் தூக்கத்தினாலும்
அநியாயமாய்த் தவறவிடுகிறேன்

காத்திருப்போ கவலைகளோ அற்ற பொன்னுலகில் இருந்தபடி
பூத்துச் சொரிந்துகொண்டு
நீ கொலுவீற்றிருக்கிறதைக் கண்ணுற்றவேளைதான்
உன் மர்மமான புன்னகை ஒன்று காட்டிக்கொடுத்துவிட்டது;
எங்களுக்கு மாயமான கட்டளைகளிட்டுக் கொண்டிருந்தது
யார் என்பதை

Sunday, April 24, 2011

மலை

மலை உருகி பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய் ?

அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல் ?

பைத்தியம்

உன் வாசலுக்கு நான் வந்தபோது
நீ வெளியே சென்றிருந்தாயோ?
சற்றுநேரம்
உன் இருக்கையில் அமர்ந்தேன்
உன் மெத்தையில் புரண்டேன்
உன் ஆடைகளை அணிந்தேன்
உன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து
அந்த ஆப்பிளோடு
ஏதேதோ சிலவற்றையும்
எடுத்துப் புசித்துவிட்டேன்
நீ வருவதற்குமுன்
வெட்கம் என்னைப் பிடுங்குவதற்குமுன்
எடுத்தவற்றையெல்லாம் விட்டுவிட்டு
ஓடிவந்துவிட்டேன்.
வெறுங்கையோடு
வீதிகளில் அலைந்துகொண்டு
ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் தட்டி
எவர் இதயத்தையும் கவர முடியாது
வெறுங்கையொடே திரும்பவும் திரும்பவும்
வீதிகளில் அலைகிறேன்
உன் வாசலுக்கு நான் வந்தபோதெல்லாம்
நீ வெளியே சென்றிருந்தாய்.
தன் வீட்டைவிட்டு வெளியேறி
அவ்வப்போது
யாருடையதையோ போல் வந்து பார்த்துவிட்டு
எப்போதும் யாசகனாய் வீதியில் அலையும்
ஒரு பிச்சைக்காரப் பைத்தியத்தைத் குறித்து
மக்கள் பேசிக் கொண்டனர்
நான் உன்னை நினைத்துக் கொண்டேன்
மக்களோ என்னைப் பார்த்துச் சிரித்தனர்

Saturday, April 23, 2011

ஓராயிரம் வாட்கள்!

நான் பார்க்கவில்லை என நினைத்து
இரண்டு குட்டிப் பையன்கள்
மூலையிலிருந்த பெருக்குமாற்றிலிருந்து
இரண்டு ஈக்கிகளை உருவி
வாள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்

என்னைப் பார்த்துத் திகைத்து நின்றார்கள்.
நான் கேட்டுக் கொண்டேன்;
‘ சண்டையிடுவதா நமது வேலை?‘

பணி, சாதனை, தீரச் செயல்
அனைத்தையும் குறிக்கும் ஒரு பெரும் சொல்லை
அப்பெருக்குமாற்றை வெறித்தபடி என் வாய் முணு முணுத்தது:
“துப்புரவு செய்தல்”

ஓராயிரம் வாட்களையும்
முஷ்டி கனல
ஓர் ஈக்கிப் பெருக்குமாறாக
ஒன்றுசேர்த்து இணைத்துக் கட்டி,
ஒரு தூரிகையைப் போலவோ
ஒரு பூங்கொத்தைப் போலவோ
ஒரு பெருவாளைப் போலவோ
எளிமையாய்க் கையிலேந்தல்

அலுவலகம் போகாமல் வீட்டில் தங்க நேர்ந்துவிட்ட ஒரு பகல் வேளை

அன்றுதான் வீட்டை
நான் முதன்முதலாய்க் கவனித்த்து போலிருந்த்து.
தன் இரகசியத்தை முணுமுணுக்கும் வீட்டின் குரலாய்
சமையலறையில் புழங்கும் ஒலிகள்.
வெளியே மரக்கிளைகளிலிருந்து புள்ளினங்களினதும்
சுவரோரமாய் நடந்துசென்ற பூனையினதும்
சாலையின் அவ்வப்போதைய வாகனங்களினதும்
தலைச்சுமை வியாபாரிகளினதுமான
ஸ்படிகக் குரல்கள்-
வீட்டிற்கும் வெளிக்கும் நடந்த
ஓர் உரையாடலை அன்று கேட்டேன்

திடீரென்று வெளி அனுப்பிவைத்த தூதாய்
எளிய ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தார்.
வியப்புமிக்க மரியாதையோடு
வீட்டுக்காரி தன்னையும் தன் பணிகளையும்
அந்த வேலைக்காரியோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்
அந்த சந்திப்பில்
மீண்டும் வீட்டிற்கும் வெளிக்கும் நடந்த
ஓர் உரையாடலைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்

Friday, April 22, 2011

அக்கரை இருள்

நதி என்னை அழைத்தபோது
நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடை விரிப்பாய் விரிந்திருந்தது
பாறையின்மேலிருந்த
என் அறையின் விளக்கொளி

இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்
என் நெஞ்சைச் சுண்டும் ஒரு குரல் கேட்டேன்
முளைத்த துயரொன்றை
கைநீட்டிப் போக்கிற்று
இக்கரை நின்றிருந்த தோணி

என் பாத ஸ்பரிசம் கண்ட நதி
அக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல

நதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறு
தோணியை அடைந்தேன்
நட்சத்திரங்கள் நிறைந்த நதியை
என் துடுப்பு கலக்கவும் திடுக்குற்றேன்

அதுசமயம்
நதிநோக்கி இறங்கிய படிக்கட்டுகளிலில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்த
என் அறையின் விளக்கொளி
கூப்பிடுவது கேட்டது .

நீயும் நானும்

ஒரு தேநீர்க் குவளையை
நீ கொண்டுவரும் பக்குவம் கண்டு
பெருவியப்பும் பேரானந்தமும் கொள்கிறது
இந்த வையகம்
நான் பருகுகிறேன்
எனது மொத்த வாழ்வும்
இப் பிரபஞ்ச முழுமையின் சாரமுமே
அதுவேதான் என்றுணர்ந்துவிட்டவனாய்

நிறைவெறுமையும் அலுங்காத
அதீத கவனத்துடன் அவ்வெற்றுக் குவளையை
நீ எடுத்துக்கொண்டு செல்லும் பாங்கு கண்டு
அரிதான அவ்வெறுமைதான் காதல் என்பதைக் கண்டு
நீ தான் அக் குவளையில்
மீண்டும் மீண்டும் பெய்யப்படும் என் நிறைவு
என்பதையும் கண்டு
நான் வெறுமையாகி நிற்கிறேன்

நான் உன் மடியிலிருக்கையில்
ஒரு கவலையுமில்லை எனக்கு
நீ என் மடியிலிருக்கையிலோ
என் நெஞ்சு வெடித்துவிடும் போன்ற
என் கவலைகளின் பாரத்தை என்னென்பேன்!

Thursday, April 21, 2011

மேகம் தவழும் வான்விழியே

மேகம் தவழும் வான்விழியே
உன் தனிப்பெரும் வியக்தியை
துக்கம் தீண்டியதெங்கனம் ?

எதற்காக இந்தப் பார்வை
வேறு எதற்காக இந்தச் சலனம் ?

அன்பான ஒரு வார்த்தைக்காகவா ?
ஆறுதலான ஒரு ஸ்பரிசத்திற்காகவா ?
மனம்குளிரும் ஒரு பாராட்டுக்காகவா ?

கவனி
உனக்கு கீழே
அவை
ஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன

எத்தனை அழுக்கான இவ்வுலகின்...

கொட்டகை நோக்கிச் செல்லும்
காலி குப்பை வண்டியின் உள்ளே
ஆறஅமர கால்மடித்து அமர்ந்து
வெற்றிலை போட்டுக்கொண்டு
வண்டியசைவுக்கு அசையும்
தன் ஒத்திசைவையும் அனுபவித்தபடி
ஆடி அசைந்து ஓர் அழகான தேவதைபோல்
சென்றுகொண்டிருக்கும் பெண்ணே,

முகஞ் சுளிக்கும் புத்தாடைகளுடன்
அலுவலகம் செல்லும் வேகத்தினால்
பரபரப்பாகிவிட்ட நகரச் சாலை நடுவே...
பணிநேரம் முடிந்த ஓய்வமைதியோ,
மாடு கற்பித்த ஆசுவாசமோ, இல்லை,
அபூர்வமாய் ஒளிரும் பேரமைதியேதானோ...

எத்தனை அழுக்கான இவ்வுலகின் நடுவிலும்
நீ ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு
வாழ்ந்தே விடுவது கண்டு
இன்பத்தாலோ துன்பத்தாலோ துடிக்கிறதேயம்மா
என் இதயம்

Wednesday, April 20, 2011

நான் அவன் மற்றும் ஒரு மலர்

புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்
வெளியில்
சின்னஞ்சிறியதும்
தன்னந்தனியனுமான ஓரு சுடராய்
நான் நிற்கையில்
ஒரு சிறு துடுப்போடு
கடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்

மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்
ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்பு
ஆ என்று துடித்து விழுந்த மான்
புல்வெளியில் ஒரு வடுவாகியது

அங்கே
பூமியில் கால் பரவாது நடக்கும்
அந்த மனிதன் கையில்
ஒரு மலரைப் பார்த்தேன்
மண் விரல்களில் பூத்து
குருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .

பனித்துளிகள்

1.
அந்திவரை வாழப் போகும்
பூவின் மடியில்
அந்தக் காலைப் பொழுதிலேயே
மடிந்துவிடப் போகும்
பனித் துளிதான்
எத்தனை அழகு!

2.
மலரின் நெடிய வாழ்க்கையில்
அவளுக்கு மரணத்தைச் சொல்லிக்கொடுக்க
இளமையிலேயே கிடைத்த தோழி

3.
ஒருவன் தனக்கெனப் பிடித்துப்
பதுக்கி வைத்துக்கொள்ள முடியாத
தனிப் பெரும் மதிப்புமிக்க
அதிசய முத்துக்கள்

4.
நீ அறிந்தவை துளிதான் துளிதான் என்கின்றன,
அவ்வதிகாலைப் போதில்-
மலர்கள் மீதும் வனத்தின் மீதும்
இலைகளின் மீதெல்லாம்
முறுவலிக்கும் துளிகள்

Tuesday, April 19, 2011

தேவதேவனின் பிரக்ஞை உலகம் - காலப்ரதீப் சுப்ரமணியன்

தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.

மேலோட்டமாக பார்த்தால் அன்றாட வாழ்வின் சாதாரண அனுபவங்களை மேலேற்றி 'பிரபஞ்ச போதத்துக்கு ' -- அல்லது அதீத தத்துவ தரிசனத்துக்கு--- குறியீடக்கைக் காட்ட்வதாக தேவதேவனின் கவித்துவம் விளங்கினாலும் இதற்கு எதிர்மறையாக பிரபஞ்ச போதத்தை அன்றாட அனுபவங்களுக்குள் தேடும் நிலையில் பிறக்கும் பின்னல் கோலங்களே கவிதையாவதைக் காணலாம். கவிதை பற்றி தேவதேவன் சொல்லியுள்ள பிரமிப்பு மயமான சொற்களும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.

தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்ட்டுத் தன்மையும் காரணமாகும். குறியீடுகளின் பன்முகத்துக்கு அவருடைய வீடு மரம் பற்றிய கவிதைகளை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

தேவதேவனின் கவிதைகளில் தொடர்ந்து படர்வது மரங்களைப்பற்றிய பிரக்ஞையோட்டம். இது ஆரம்பத்திலிருந்தே இடைவிடாமல் நிழலிடுகிறது .அதுவும் சமீப கால கவிதைகளில் அதிகமாகவே அடர்ந்து கிளைபரப்பியுள்ளது . ஆனால் ஒரு விஷயத்தை பலகோணங்களில் நின்று புதிது புதிதாய் காண்பதும் வார்த்தைசெறிவும் இதை தெவிட்டல் நிலைக்கு செல்லாமல் தவிர்க்கின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய நிதரிசனமும் அதீத பிரச்சாரமும் கலந்துள்ல இன்று மரங்களைப்பற்றி கவிதை எழுதுவது இன்றைய மோஸ்தர்களுள் ஒன்று. ஆனால் தேவதேவனிடம் காணப்படுவது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு ஆழ்ந்த தொனி. எதாத்த வாழ்க்கையில் தேவதேவனுக்கு மரங்களுடன் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு இங்கு கவனிக்கத்தக்கது . பீதி நிறைந்த குழந்தைப்பருவத்தின் மனமுறிவு வெளிப்பாடுகளோ, உணர்ச்சி கரமான மனப்போராட்டங்களோ ,வாழ்க்கையில் நிராதரவாய் நின்ற நிலைகளோ தற்காலிகமான கொள்கைகவர்ச்சிகளோ அவரது இதுப்போன்ற ஈடுபாடுகளை அசைக்கமுடியவில்லை என்பதும் , இவை ஆழ்ந்த மதிப்பீடுகளாக அவரது அகத்தில் மாற்றம் பெற்றுள்ளமையும்தான்

[நன்றி முன்னுரை 'பூமியை உதறி எழுந்தமேகங்கள் ' ]

பயணம்

அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற் பொழுதே தூரம்

அகண்டாகார விண்ணும்
தூணாய் எழுந்து நிற்கும்
தோணிக்காரன் புஜ வலிவும்
நரம்பு முறுக்க நெஞ்சைப்
பாய்மரமாய் விடைக்கும் காற்றும்
அலைக்கழிக்கும்
ஆழ்கடல் ரகசியங்களும்
எனக்கு, என்னை மறக்கடிக்கும்!

Monday, April 18, 2011

பட்டறை

என்னை அழைத்துவந்து
என் பெயரை ஏன் கேட்கிறாய் ?
என்னை நீ அழைப்பதற்கு
என் பெயர் உனக்கு தேவைப்படவில்லையே ?
எனக்கு நீ இட்ட பணி
எதுவென நான் அறிவேன்
எனக்குள் வலிக்கிறது
எதனாலென நான் அறியேன்
நெருப்பில் பழுத்த
இரும்புத்துண்டம்போல
என் நெஞ்சே எனக்குத்
துயர் தரும் சேதிகேட்டு
தோள்குலுக்கி ஊர் சிரிக்க
ஒப்புகிறதா உன் உள்ளம் ?
எந்த ஒரு பூவும் மலரவில்லை
இப்போதெல்லாம் என் வதனத்திலிருந்து
மந்திரக்கனி எதுவும் தோன்றவில்லை
ஓர் உள்ளங்கைக்கு நான் பரிமாற .
உன் பிரசன்னம் என்னை சுட்டுருக்குகிறது
உன் சம்மட்டி அடி என் தலைமீது.
அம்ருதக்கடலில் இருந்து
அலை ஓசை கேட்கிறது .
அக்கினிக்கடலில் இருந்து
அலறும் குரல்களும் கேட்கின்றன.
உன் கம்பீரப்பதில் குரலாய்
என் தலைமீது ஒலிக்கிறது
உன் சம்மட்டி அறை ஓசை.
காலிக்குடமாகவா
தங்கத்தோணியாகவா
ஓர் கூர்வாளாகவா
என்னவாக்கிக் கொண்டிருக்கிறாய்
என்னை நீ ?
ஒன்றும் புரியவில்லை.
உணர்வதெல்லாம்
குறைகூற முடியாத
ஓர் வேதனையை மட்டுமே.

வேலி

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்
என் பத்தினி இவள் காயப்போட்ட
சிவந்த ஈரச்சேலை பற்றி
எரிந்துகொண்டிருந்தது வேலி

Sunday, April 17, 2011

சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...

ஒரு பறவை நீந்துகிறது
சொற்களை வாரி இறைத்தபடி

சொற்களை வாரி இறைப்பதனாலேயே
அது நீந்துகிறது

காற்றின் துணையும் உண்டு

நீ இக்கவிதைஅயி வாசிக்கையில்
அமைதியான ஏரியில்
துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்
படகுப்பயணம் போல
கேட்கிறதா உனக்கு
அப்பறவையிந் சிறகசைவு தவிர
வேறு ஒலிகளற்ற பேரமைதி ?

சொற்பெருவெளியில்
சொல்லின் சொல்லாய் அப்பறவை
தன் பொருளை தேடுவதாய்
சொற்களை விலக்கி விலக்கி
முடிவற்று முன் செல்கிறது

அப்போது
உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?
பரவசமா ?
ஏகாந்தமா ?
குற்றவுணர்ச்சியின் கூசலா ?
தனிமையா ?
தாங்கொணாத துக்கமா ?

இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை
உன்னில் உண்டாக்கி விடலாம்
ஆனால் எந்தபொறுப்பையும்
அறிீந்திராதது அது .

ஒரு வெண்புறா

‘ஒரு சிறு புல்லும்
குளிர்ந்த காற்றலைகள் வீசிவரும் வெளியும்
போதுமே.
அத்தோடு உன் அன்பு...
கிடைத்தால் அது ஒரு
கூடுதல் ஆனந்தமே’

உன் நினைவுகளில்
சுகிக்கும் சோகிக்கும்
அந்த மரத்திலிருந்து நழுவுகிறது
ஒரு வெண்புறா
பறந்தோடி வந்து அது
அமர்கிறது உன் மென்தோளில்!
அதன் பயணம்
யாரும் காணாததோர் ரகசியம்!

Saturday, April 16, 2011

இறையியல்

'ஆண்டவர் முதலில் ஆதாமையும்
அப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. '
என்பது ஓர் ஆணாதிக்கப்பொய்
ஆண்கடவுள் ஆதாமையும்
பெண்கடவுள் ஏவாளையும் படைத்தனர்

தத்தமது ஏகாந்தநிலை சலிப்புற்று
ஆதாமும் ஏவாளும் காதலிக்கத் தொடங்கிய
மண்ணின் அழகுகண்டு உண்டான தாபம் உந்த
ஆண்கடவுளும் பெண்கடவுளும் காதலிக்கத்தொடங்கினர்

கடவுளர்கள் ஒரு குழந்தையை கருவுறுவதற்கு முன்
ஓராயிரம் கோடி மக்களை பெற்றிவிட்டனர் ஆதி தம்பதியினர்

துன்பச் சூழலில் இருந்து விடுபட ஆதாமும் ஏவாளும்
தத்தமது கடவுளை நோக்கி திரும்பியபோது
ஆட்சிபீடத்தை சாத்தானுக்கு விட்டுவிட்ட
கடவுள் தம்பதியினர்
கலவியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை

மீட்சிக்கு இனி எங்கேபோவது ?ஆதாமும் ஏவாளும்
தங்கள் காதலுக்கு முன்னாலுள்ள ஏகாந்த
வானிலிருக்க கூடும் தங்கள் கடவுளர்களின்
சொற்களை தேடிக் கொண்டிருந்தனர்.

வானத்திலிருந்து சொற்கள்
பறவைகளை ஏந்திக் கொண்டதை கண்டனர்
மேகங்களை உருவாக்கி
மழையை பொழிந்ததைக் கண்டனர்
உயிர்காக்கும் உணவாகி தங்கள் இரத்தத்தில்
காலங்காலமாய் துடித்துக் கொண்டிருப்பதையும்
இன்னும்.... அவர்கள் முடிவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்
வானத்துச் சொற்களின் முடிவற்ற வேலைகளை

முன்னுரை

இவை கவிதைகள்
ஏனெனில்
இவை உண்மையைப் பேசுகின்றன
நானல்லாத நான் சாட்சி
இவற்றை நீ உணரும் போது
நீயே சாட்சி
இவற்றை நீ பின்பற்றும்போதோ
வற்புறுத்தும் போதோ,
நீ ஒரு பொய்யன், துரோகி, கோழை!
ஏனெனில்
உண்மை, நீ உன் விருப்பத்திற்கும் வசதிக்குமாய்
காலத்தின் முளைகளில் கட்டிப்போடுவதற்குப்
பணிந்து விடும் பசுமாடு அல்ல;
நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்

அப்போது கவிதைகள்
தியாகத்தின் இரத்தத்தில் நனைந்த போர்வாள்கள்!

Friday, April 15, 2011

வெற்றுக்குவளை

வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறுவதற்குள்
என் ஆசைகளால் நிறைத்து விட்டேன் அதனை.
துக்கத்தால் நிறைந்துவிட்டது வாழ்க்கை
காணுமிடமெங்கும் மெளனமாய் நிறைந்திருந்தது
என் குவளையில் பரிமாறப்படாத பொருள்.
என் ஆசைகள் பருகி முடிக்கப்பட்டு
காலியாகி நின்ற குவளையில் பரிமாறப்பட்டு
ததும்பியது அது.
வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறியது அது
இப்போது நான் பருகிக் கொண்டிருப்பது .
பருகி முடித்ததும்
மீண்டும் பரிமாற வந்தவன் முகத்தில்
என் முகத்தில் தன் மரணத்தை
கண்டதன் கலக்கம்

எங்கே இருக்கிறேன் நான்?

நிலவைக் குறிவைத்து
காலமற்ற வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததும்
தவறிற்று, மனிதனைத் குறிவைத்து
உலகின் இன்ப துன்பங்களில் உழன்று கொண்டிருந்ததும்
தவறிற்று

எங்கே இருக்கிறேன் நான்?

குடிசைக்கு வெளியே
நிலவு நோக்கி மலர்ந்துகிடந்த கயிற்றுக்கட்டிலும்
வெறுமையோடி நிற்கிறது
இரகசியத்தின் மௌனத்துடன்
நிலவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது நதி;
அதில் ஒரு காகிதப்படகு போல் என் குடிசை

ஆனந்தத்தின் கரையை அடைந்திருந்தன
என் கால்கள்

Thursday, April 14, 2011

நிசி

இரை பொறுக்கவும்
முட்டை இடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
வானவெளிப்பறவை ஒன்று

இட்ட ஒரு பகல் முட்டையின்
உட்கரு நிசியுள்
பகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்
உறங்காது துடிக்கும் நான்
என் அவஸ்தைகள்
கர்வுவில் நடைபெறும் வளர்ச்சியா
பரிணாம கதியில்மனிதனை புதுக்கி
ஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா

பகலின் நினைவுகள் கொட்டி கொட்டி
இரவெல்லாம் தெறிக்கும்
என் சிந்தனைகள் வேதனைகள்

ஏன் இவ்வேதனை ?
எதற்கு இச்சிந்தனைகள் ?

நானே அறியாது
என்னில் கலக்கும் ஜீன்கள்
கருவே அறியாது
கருவில் கலக்கும் தாதுக்கள் எவை ?

இனி நான் எவ்வாறாய் பிறப்பேன்
என் கனவில் எழுந்த அந்த மனிதனாய்
நான் என்று பிறப்பேன் ?

அல்ல மீண்டும் மீண்டும்
முட்டை இடவும் இரை ப்றுக்கவும்
இரைக்காய் சக ஜீவிகளுடன்
போராடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
அதே வானவெளிபறவையாக

Wednesday, April 13, 2011

வண்ணத்துப்பூச்சி

அன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று
வீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்
இன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்
அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டதா இம்மண்ணில் ?

மண்ணின் வளமும் பெருமையும் மின்ன
மேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்
எத்தனை வண்ணங்களில் !

ஆனால்
தேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்
சிறகுகள் பரபரக்க
அங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது
என்னை அறுத்தது அழகா அருவருப்பா
எனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி

உறிஞ்சும் வேகத்தில்
கைகூப்பி இறைஞ்சுவதுபோல
மேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான
உடல் முழுக்க விர்ரென்று
நிரம்பிக் கொண்டிருந்தது தேன்

சிறகுகளின் மெலிதானதுடிப்பில்
ஆழமானதோர் நடுக்கம்
எந்தமொரு வைராக்கியத்தை
மூச்சை பிடித்துகாக்கிறது அது ?
அதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்
கீழ்நோக்கி சுருண்டு உன்னியது
கரு தாங்கும் அதன் கீழ்பகுதி

தேன் நிரம்பி கனத்து
பூமி நோக்கி தள்ளும்
சின்னஞ்சிறு பாரத்தை
வெகு எளிதாக
தேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன
மரணமற்ற ஆனந்த பெருவெளியில்!

ஒரு துளித் தசைமணம்

கருணையின் மஞ்சுப் பரவல்களூடே
உள்ளங்கால்கள் உணரும் சிகரம்
பார்வையின் கீழ்
ஒரு பள்ளத்தாக்குக் கிரகம்
நெஞ்சின் கீழ் ஒரு பேரமைதி
நினைவு என ஏதுமில்லா
ஆனந்தத்தின் நிர்விசாரம்
வந்துவிட்டோம் வந்துவிட்டோம் எனக்
குதூகலிக்கும் நெஞ்சம்
ஆசீர்வதிக்கிறது
ஒவ்வொருவர் விழிகளினுள்ளும் நிறைந்து
காணும் ஒவ்வொருவரையும்

Tuesday, April 12, 2011

மாண்புமிகு கடவுளைப்பற்றிய ஒரு கட்டுக்கதை

கடவுளையும் அனுமதிககதபடி
அந்த அறையை சுதந்தரித்திருந்தார்கள் அவனும் அவளும்
ஆனால் செளகரியமான ஒரு சூக்கும உருவுடன்
கடவுள் இருந்தார் அங்கே ஒரு படைப்பாளியின் ஆசையுடன்

ஒரு பெரும் கச்சடாவாக இருந்தது அவர்கள் பாஷை
அவருக்கு அது புரியவில்லை முழித்தார்
என்றாலும் மேதமை மிக்கவரானதனால்
அந்த நாடகத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொண்டார்

அவர்கள் ஆடைகளை களைந்தபோதுதான்
அவர் கண்களில் ஒளிர்ந்தது ஒரு தெளிவு
ஆனால் அவர்கள் விழிகளில் நின்றெரிந்தது
ஓயாத ஒரு புதிர்
அப்புறம் அவர்களைதழுவியது ஒரு வியப்பு
தத்தம் விழிகள் விரல்கள் இதழ்கள் மற்றும் சதையின்
ஒவ்வொரு மயிர்க்கால்களைக் கொண்டும்
துதியும் வியப்பும் பாராட்டும் சீராட்டும் பெற்றது
கடவுளின் படைப்பு

சந்தோஷமும் வெட்கமும் கிள்ள
முகம் திருப்பிக் கொண்டார் படைப்பாளி
அளவற்ற உற்சாகத்துடன் அங்கிருந்து கிளம்பி
தன் பட்டறைக்குள் நுழைந்தவர் திடுக்கிட்டார்
அங்கே அவரில்லாமலே
தானே இயங்கிக் கொண்டிருந்தது படைப்புத்தொழில்

அன்றுமுதல் கடவுளைக் காணோம்

இதுவே
புதிரான முறையில்
இப்பூமியை விட்டே காணாமல் போன
கடவுளைப் பற்றிய கதை

மரத்தின் உருவம்

மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து
தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்துகொண்டிருந்தது.
இதுவரை நான் அதன் காலடி என நினைத்திருந்த நிலத்தை
அது தன் கழுத்து என்று சொன்னதும்
கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்

Monday, April 11, 2011

இந்தத் தொழில்

கபடமற்றதோர் அன்புடனும்
அற்புதமானதோர் உடன்படிக்கையோடும்
கடவுளும் சாத்தானும்
கைகுலுக்கிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.
கடவுள் முதல்போட
சாத்தான் தொழில் செய்ய
கடவுள் கல்லாவில் இருக்க
சாத்தான் வினியோகத்திலிருக்க
அற்புதம் ஒன்றுகண்டேன்
கவிதை எழுதிக் கொண்டிருக்கையில்

அங்கே
என் சிந்தனை ஒன்றைக் கொடுத்து
படிமம் ஒன்று வாங்கிக் கொண்டிருந்தேனா ?
அல்லது
படிமம் ஒன்றைக் கொடுத்து
சிந்தனை ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தேனா ?

சேச்சே என்ன கேள்விகள் இவை ?
கடவுளும் சாத்தானும் கைகோத்த கோலத்தை
கண்டதற்கு சாட்சியாய் பாடும் என் இதயம்
அக்கறை கொள்ளாது இந்த தொழில்மீது.

அவனுக்குத் தெரியும்

துக்கமா?
இல்லை, வெறும் மௌனம் தானா?
எதையும் ஊடுறுவக் கூடியதும்
எதனாலும் தகர்க்க முடியாததுமான
அந்த வலிய மௌனத்தைச் சொல்கிறேன்.
இல்லை, இந்த மௌனம் ஒரு தூண்டில் முள்ளோ?
தொண்டையில் முள்சிக்கிய
ஒரு புழு உண்டோ அதன் அடியில்?

சிறு மீனுக்காகப் பசித்திருக்கிறாயோ?
வேதனைப்படுகிறாயோ?
சிறுமீனுக்காகப் பசித்திருக்கையில்
கடல் வந்து அகப்பட்டதெண்ணிக்
கைப்படைகிறாயோ?
அயராதே.
எழுப்பு உன்னுள் உறங்கும் மாவீரனை, தீரனை
அவனுக்குத் தெரியும்
கடலை தூண்டிற் பொறியாக்கிச்
சிறுமீன் பிடித்துப் பசியாற

Sunday, April 10, 2011

உருமாற்றம்

அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்

காட்சி -1

சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்
தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர்
முழுநிர்வாணத்தை நோக்கி
அரை நிர்வாணத்துடன்
ராட்டை சுற்றிக் கொண்டிருந்தார் காந்தி
ரத்தம் சொட்ட தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து கொண்டிருந்தான்
மரிக்கவும் உயிர்த்தெழவும் அறிந்த மேதை

வெளியே இருந்து ஓர் ஓலக்குரல்
உள்ளே புகுந்தது
அரைக்கணம் தாமதித்திருக்குமா ?
புகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்று
ஆனால் அந்த அரைக்கணத்தில்
அக்குரல் உருமாறியிருந்தது
சாந்தியும் துக்கமும் நிறைந்த ஒரு குரலாய்

காட்சி 2

நான் உள்ளே புகுந்தபோது
ஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்
தனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்
குலுக்கினார் யேசு
பட்டினிக்குழந்தைகளுடன்
கைவிடப்பட்ட பெண்ணின்
சீரழிந்த புன்னகையைப்போல
ஒரு புன்னகையை வீசிவிட்டு
ராட்டை சுற்றினார் காந்தி

அதீத துக்கத்தால் என் இதயம் வலித்து எழுந்த குரல்
வேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியே
வெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்து
நாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது

மகாகாரியம் மகாகாவியம்

மழை பெய்து
நீலம் கனிந்த
விண்ணின் கீழ்
மழை பெய்து
பச்சை விரிந்த
மணிணின் மேல்
புள்ளி புள்ளி
இரத்தத் துளிகளாய்
விரைகின்றன விரைகின்றன
பட்டுப் பூச்சிகள்
எங்கோ ஏதோ
ஓர் அழகியல் பிரச்னையை
அவசரமாய்த் தீர்க்க

Saturday, April 9, 2011

ஒரு பரிசோதனையும் கவலையும்

கவனத்தை ஈர்க்கும் ஒரே நோக்குடன்
குறுக்கும் மறுக்குமாய் அலைந்துகொண்டிருந்தனர்
தேவதைகள்

பூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள்
ஒரு மழையை பெய்துவிட்டு
பின்னாலேயே தேவதைகளை அனுப்பிவைத்தார்

தட்டான்களின் வாலில் கல்லைக்கட்டியும்
நீண்ட நூல்களை கட்டியும் கல்சுமக்க வைத்தும்
சிறகுகளை துண்டித்து பறக்கவிட்டும்
இரண்டு தட்டான்களை ஒரு நூலால் இணைத்தும்
அவை திண்டாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர்
மனிதக்குழந்தைகள்

கடவுளும் தேவதைகளின் தலைவனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
ஆழ்ந்தகவலையுடன்

உறுத்தல்

அது செய்த பாவம் என்ன?
தான் அதுநாள் வரை படு உற்சாகமாய்ப்
பற்றிச் சென்றுகொண்டிருந்த நூல்பிரிஏணி
ஓர் இருள் வட்டம்தான் என உணர்ந்தவுடன்
விட்டு விலகி நடந்ததா?
அக் கணமே அச் சிற்றெறும்பு
மனிதனாக மாறிவிடும் என்ற
அச்சம் தன் உடம்பில் ஊறவும்
இரத்தக் கறை படிய அதைத் தேய்த்து எறிவோனே,
மனமிரங்கி
அதனை நோகாமல் தொட்டு விலக்கலாகாதா,
நம் பூணூலும் ஒரு நாள் உறுத்தும் வேளை
அதை எப்படி நீக்குவோமோ, அப்படி?

Friday, April 8, 2011

கடவுளே

ஒரு புதுக்காற்று ஒன்று
அறைக்குள் சுழன்றடித்திருக்கிறது

ஊதுபத்தி பூமாலைகள் திகைக்க
தன் முதுகின் வெட்டவெளியை காட்டியபடி
திரும்பியிருக்கிறார் காலண்டர் தாளிலுள்ள கடவுள்

கோபமா
சுய மறுப்பா ?
காட்டும் புதிய தரிசனமா ?

வரண்டு இருண்டு விறைத்த முகம் ஒன்று
வந்தது நான்கு ஆணிகள்
மற்றும் சுற்றியலுடன்

பொன் இருள் தீபம்

அறியாமையின் பொன் இருள் உன் கண்களில்;
உன் மடியில் பால் கறந்துகொண்டிருக்கும்
அந்த மனிதனின் கண்களிலோ
அனுபவத்தின் ரணம்படிந்த இயலாமைகள்;
வறண்ட தாவரம்போல் நிற்கும்
அவன் மனைவியின் கண்களிலோ
துயரங்களின் ஆறாத காயங்கள்;
கைக்குழந்தையின் வட்டமுகம் முழுக்க
அச்சத்தின் திக்பிரமைக் கறை;
முற்றத்தில் துள்ளி பாண்டி ஆடிக்கொண்டிருக்கும்
சிறுமியிடம் சற்றே எட்டிப் பார்க்கிறது
வாழ்வின் துளி இன்பம்,
பொன் இருளில் ஒளிரும் தீபம்

Thursday, April 7, 2011

பக்த கோடிகள்

பக்த கோடிகள் புடைசூழ
கால்மேல் கால்போட்டு
கடவுள் நான் என்று
டிக் டிக்கிறது
முக்காலிமேல் ஒரு கடிகாரம்

பக்தகோடிகளுக்கு
ஓவர் டைமும் உபரிவருமானமும்
உயர்குடி வாழ்வும்
அருளுகிறார் கடவுள்

கடவுள் மரிப்பதில்லை
ரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம்
கடவுள் பழுதானால்
காலநோய்கள் பெருத்துவிடுமாகையால்
கடவுள் பழுது நீங்க
நிரந்தர மடங்களும் ம்டாதிபதிகளும்
அவ்வபோது தோன்றும் மகான்களும்
காலநோய் தீர்க்க கல்விமான்களும்
சதா கடவுள் நாமம் மறவாது பாடிக்கொண்டிருக்க
பக்த கோடி மகாஜனங்களும் உண்டே

இந்தக் கூட்டத்தில் போய்
கவிஞனை தேடுவதென்ன மடமை
அதோபார் உழைத்து ஓடாகி
மரணம் பார்த்து நின்றுகொண்டிருக்கும்
ஒரு மாட்டின்மேல்
மெளன அஞ்சலி செய்துகொண்டிருக்கிறது
ஒரு காகம்
நித்யத்துவத்தை நோக்கி அதன் முகம்

கடற்கரை

கடலோரம் வெளிக்கிருந்து
கால் கழுவி எழுந்தபின் தான்
கடலும் வானமும் தன் ஆகிருதி காட்டிற்று
மூச்சுவிட மறந்து என் மிதிவண்டியும்
அதை உற்றுப்பார்த்தபடி நின்றிருந்தது

இனி எங்கள் பயணம்
புதியதாய் இருக்கும்போல் உணர்ந்தோம்
அப்போது
பின்னிருந்து ஒரு குரல் கேட்டுத்
துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்தோம்;
வான் இடையில் கடல் குழந்தை
கைகள் அலைத்து விடைகொடுத்தது

அப்புறம் வந்து சேர்ந்தோம்
வால் நக்ஷத்ரம் ஒன்றால் அழைத்து வரப்பட்ட
சக்கரவர்த்திகள் போல்;
காதலரும் குழந்தைகளும்
காற்றில் வாழும் இன்னொரு கரைக்கு

Wednesday, April 6, 2011

உனது வீடு

நீ இளைப்பாற தேர்ந்தெடுத்த
மரத்தடியா,
ஓயாத வேதனையில் அரற்றும் ஜீவன்
ஓய்வு கொள்ள விரித்த படுக்கையா,
பல்லிகளும் பாச்சான்களும் பாம்புகளும் அண்டும்
பாழ்மண்டபமா,
எது உன்வீடு ?
இவை எல்லாமுமேவா ?


உனது வீட்டில்
உனது பிணத்தை நாடியே
உன்னோடு குடியேறியதுதான்
அந்தபிசாசு என நீ அறிவாயா ?


உனது வீட்டின் இருளை துடைப்பது
சூரியன் இல்லையா ?
சந்திரனும் நட்சத்திர கோடிகளூம் இல்லையா ?
உன் வீட்டை கடந்துசெல்லும்
மேகங்களின் நிழல் உன்னை தீண்டியதில்லையா ?


நீ எப்போது உன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாய் ?
சூரியன் வந்து உன் தலையை தீண்டும்போதா ?
பறவைகள் குரல்கொடுக்க துவங்கும்போதா ?


புறப்பட்டுவிட்டாயா
உனது மக்களை விட்டுவிட்டா ?
அவர்கள் விழிக்கும் முன்
ஒருபுதிய பொக்கிஷத்துடன்
வந்து சேர்ந்துவிடும் எண்ணத்துடனா
அல்லது இந்த துறவேதானா
அந்த அரிய பொக்கிஷம் ?


போய்க் கொண்டிருக்கிறாயா ?
சரி
ஆனால்
எச்சரிக்கையாக இரு
நீ சோர்வுறும் இடமும்
வீழும் இடமுமே
வீடுகள் தோன்றும் இடம்


வீடுகள் வீதிகள் நகரங்கள்
நாடுகள் மற்றும் பூமி

Tuesday, April 5, 2011

மரத்தின் வடிவம்

சிவந்த பூக்களுடன்
ஜன்னலை உரசும் மரக்கிளை
உன் முத்தம்

கூரைமீதுகுனிந்து
உச்சிமுகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம்

வாயிலை நோக்கி தாழ்ந்த
கிளை அசைவு உன் அழைப்பு

இமையாத விழிப்புடன்
இடம் பெயராஅத இருப்புநிலையில்
காணுகிறது உன் நித்தியத்துவம்

உன் ஒருபகுதியை வெட்டி வீழ்த்தியே
அக்கூரைமீது
ஒரு மாடிக்கட்டிடத்தை எழுப்பி
முன்னேறினேன்
வெட்டப்பட்டு
இரத்தம் கொட்டும்
உன் மொட்டைவிரல்
மாடிக்கட்டிடத்தை சுட்டியபடி

திடுக்கிட்டு
இனி நான் என்ன செய்வது
என துடித்துக் மொண்டிருக்கையில்
அம்மொட்டை விரலை சுற்றிலும்
வீரிட்டு முளைத்திருந்தன
புதுத்தளிர்கள் .

தலைவலி

யாரோ ஒருவன் சொன்னான் என்று
(அது நல்ல யோசனையாகவும் பட்டதால்)
என் மண்டையோட்டைக் கழற்றி வைத்துவிட்டு
அருவியில் போய் நின்றேன்
திடுக்கிட்டு
'பளார்’ என்று எகிறி வெளியே குதித்தது
மூளைத் தவளை

அதற்கு உகந்த இடம்;
நீர் கசியும் பாறையடி அல்லது குட்டை

உண்மையைச் சொல்வதானால்
அது பற்றிய சிந்தனையோ பார்வையோ
எதுவுமே அப்போது எனக்கில்லை

வெறுமையின் ஆனந்தத்தில்
திளைத்துக்கொண்டிருந்தேன் நான்

Monday, April 4, 2011

குருவிக்கூடு

நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டைமாடியை தந்தது வீடு

இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்

அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி

அன்று எரிந்த அந்தச் சூர்ய ஒளியில்

என் சிறிய பூமியின்
பாறை இறுக்கம் நெகிழ்ந்து உருகி
குளிர்ந்த நீர்த் தடாகமாகிவிட்டதும்
வேரோடு மிதக்கத் தொடங்கியது எனது வீடும்.
வீட்டின் சுவர்கள்
பறக்கவோ சமன்நிலை காக்கவோ,
இல்லை, மிக நன்றாய் மிதக்கத்தானோ
மலரிதழ்களாய் விரியத் தொடங்கின?

அவ்வேளைதானோ
கூரை இடிந்து நொறுங்கி விழும்
அந்த உற்பவம் நிகழும் வேளையும்?

Sunday, April 3, 2011

மொட்டைமாடிக்களம்

நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்குத்தானே கட்டிக் கொண்டது
வானம் வந்து இறங்க விரித்த
தன் மொட்டைமாடிக்களத்தை

அந்த இசை

மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்
ஒவ்வொரு பொருளையும் தொட்டு
அதனதன் இடத்தில் வைத்தேன்
தூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை

புனித நீரில் குளித்து
வியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்து
மாலை உலா கிளம்பியபோது
கேட்கத்தொடங்கிய அந்த இசை
நீடிக்கவில்லை

வழிப்பறிக்கு ஆளானவன் போல திரும்பினேன்
விடியும்வரை
இரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்

Saturday, April 2, 2011

இரண்டுவீடுகள்

மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது

ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.

மற்றொன்றை
சிட்டுக்குருவியிடமிருந்து.

காலவெளி

என் கண்ணுக்கெட்டிய தூரத்தில்
சுமார் பதினான்கு வயதுப்
பேரழகியாய்த் தோன்றியவள்
ஓரோர் வயது முதிர்ந்தவளாய்
கிட்ட வந்தடைகையில்
சுமார் அறுபது வயதுப் பேரழகு

சுமார் மூன்று நிமிடத்தில்
நான் கண்டது; அவளுடைய
நாற்பத்தாறு வருடங்கள்.
அல்ல, நாற்பத்தாறு ஆண்டுகள்தாம்
மூன்று நிமிடமாய் மயங்குகிறதோ?

நிச்சயிக்க முடியவில்லை; ஆனால்

என் கண்முன்னால் அந்தப் பேரழகு
எதுவும் பேசாமல்
என்னைக் கடந்து மறைந்தது மட்டும்
நிச்சயமான உண்மை

Friday, April 1, 2011

வீடுகள்

வீதிவலைக் கண்ணிகளோ
இந்த வீடுகள் ?

கல்முகங்கள் சில வீடுகளுக்கு
சினேகத்தை பின் ஒதுக்கி
நாய்க்குரலில் வரவேற்கின்றன அவை
வீதியில் நடந்து செல்லும் மனிதனை
சந்தேகத்தோடும் அச்சத்தோடும்
நோக்குபவை

வீதியில் நடந்து செல்லும்
ஒவ்வொரு முகத்திலும் தன் அன்பனைத் தேடும்
எளிய வீடுகளும் உண்டு

யாத்ரீகனோ தன் வீட்டை
எப்போதும் தன் தோள்மேலே வைத்திருக்கிறான்

மலயுச்சி மீதிருக்கையிலோ
பறவைப்பார்வையில் பிடிக்கப்பட்ட
புகைப்படமொன்றிலோ
இந்த வீடுகள் எல்லாம் கல்லறைகளாய்த்
தோன்றுகின்றன

சிலவேளை எதை நோக்கியும் பயணம் செய்யாததும்
தம் குறிக்கோளை அடைந்ததுமான
சாஸ்வதப் பேரமைதியில் மிதக்கும்
படகுகள் போலவும் தோன்றுகின்றன

புல்லின் குரல்

அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலை நடுவே முளைத்து நின்றது ஒரு புல்

புல்லின் குரல் கேளாது அதை மேயவந்த ஆடு,
என் கூப்பாடு கேட்டும் விலகாத அந்த ஆடு,
பதறி விலகியது வாகனம் ஒன்றின் உறுமல் கேட்டு

அழிந்தும் அழியாது
மண்ணுக்குள் பதுங்கிக்கொண்டது புல்
மழைக்கரங்கள்
மண்ணின் கதவுகளைத் தட்டுகையில்
ஆயத்தமாயின புல்லின் படைகள்

சாலையின் மேல் மழையின் திராவகப் பொழிவு
சாலைக் கற்களை அரித்த
சிறுசிறு ஓடைகள்
இணைந்து இணைந்து
நதியாயின
பாய்ந்து பாய்ந்து
(இடம் விழுங்கிப் பெருத்து)
வெள்ளமாயின
போக்குவரத்து துண்டிக்கப்பட்டுத்
திகைத்து நின்றன வாகனங்கள்

வெள்ளம் வடிந்து
ஆயத்தமாகிவிட்ட வாகனங்கள்முன்
புற்படைகளின் மறியல் கோஷங்கள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP