Wednesday, October 18, 2023

கவிதையின் மதம் சொல்கிறது காண்!

மனிதர்கள் எளிமையானவர்களாக
மாறியாக வேண்டும்
கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய
இதுவே ஓரே வழி என்கிறது
கவிதையின் மதம்!

எந்த ஏழை பணக்காரர்களாலும்
இயலாது அது
செல்வந்தனாகவே துடித்துக்கொண்டு
செல்வந்தன்களிடமே
ஏக்கத்துடன் பல்லிளித்துக்கொண்டு
வாழும் எந்த ஏழையாலும் இயலாது
கடவுளின் ராஜ்ஜியம்!

குற்றவுணர்ச்சியும் தாழ்மையுமின்றி
சவுகரியமாக வாழ்ந்துகொண்டு
அறமென்றும் கொடையென்றும்
இப் பாழுலகையே கட்டிக் காத்துக்கொண்டிருக்கும்
எந்த அதிகாரத் தந்திரங்களாலும் இயலாது
கடவுளின் ராஜ்ஜியம்!

அந்தஸ்து, அதிகாரம், செல்வாக்கு, புகழ் இவைகள்
மானுட அருவருப்புகள் என்பதை
ஆழ்ந்துணர இயலாமற் போன தெப்படி?

தாழ்மை உணர்வொன்றே
மனிதம் எனும் மாண்புணராது
அடிமைகளாயும் ஆண்டான்களாயும்
ஆனவர்கள்…

கடவுளாகவும் கடவுளைக் காண்பவர்களாகவும் அன்றி
அடிமைகளாகவும் ஆண்டான்களாகவும்
ஆனவர்கள்…

எத்தகைய மூட மனிதர்கள் நாம்?
தன்னை அறியும் அறிவில்லாத மனிதன்
தான் தனது எனும் கொடுவிஷத்தினாலே
(பாழ்படுத்தும் இயற்கைதான் கொஞ்சமோ?)
தொடரும் பேராசைப் பேரழிவுகளாலும்
பெருங்குழப்பத் துயர்களாலுமே
அன்பும் அறமும் அழகுமற்ற
இப் பாழுலகு படைக்கப்பட்டிருக்கிறது
நம்மால்தான் என்பதை உணராதவர்கள்…

அறிவியல் தொழில்நுட்பங்களால்
தம் புலன்களையும்
இத் துயருலகச் செல்வங்களையும் மட்டுமே
பெருக்கிக் கொண்டு
தம் வறுமை நோய் நாடிச்
செயல்பட அறியாதவர்கள்…

காலமற்ற பெருவெளியில்
கவிதையின் மதம் உலாவும்.
அருட் பெருஞ்சோதியின்
தனிப் பெருங் கருணையினால் மட்டுமே
மாதிரிச் செயல்முறைப் பாடம் போல்
கொடுத்துக் கொடுத்துக் காட்டப்படும்
எதையுமே கண்டுகொள்ளத் தெரியாதவர்களால்…

மலருமோ கடவுளின் ராஜ்ஜியம்?





கவிதை  உருவாகியது: 18 அக்டோபர் 2023

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP