Friday, September 27, 2024

ஒளியென்றானவன் - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”ஈரத்தளமெங்கும் வானம்” கவிதைத் தொகுப்பிற்கு ஜி.எஸ்.எஸ்.வி. நவின் முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரைக் கட்டுரை ”கவிதைகள்” இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.

”தேவதேவன் பற்றிய ஒரு புகார் தமிழ் எழுத்தாளர்களிடம் உண்டு. குறிப்பாக அவர் தலைமுறை, தொட்டு அடுத்த தலைமுறை கவிகளிடத்தில். தேவதேவன் எங்கேயும், எப்போதும் அவரது கவிதைகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்பது. ஆனால் உண்மையில் தேவதேவன் அவரது கவிதையில் சொல்லப்படாத விஷயங்கள் வேறு உலகில் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர். அதனை எழுதியும் காட்டியவர். எழுபத்தைந்து வயது கடந்த தேவதேவன் இந்த ஆண்டு (செப்டம்பர், 2024) எழுதிய கவிதை தொகுப்புகள் மட்டும் பன்னிரெண்டு. இன்னும் ஐந்து தொகுப்புகள் கூட ஆண்டிறுதிக்குள் எழுதக்கூடும். மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்...

Wednesday, September 25, 2024

சுட்டும் விரல் சுட்டும் எழில் - கமலதேவி

சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”மேஜைத் தடாகத்தில் ஓர் ஒற்றை மலர்” கவிதைத் தொகுப்பிற்கு கமலதேவி முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரைக் கட்டுரை ”கவிதைகள்” இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.

”அமைதியான உச்சிவேளையில் பறவைகளின் குரல்களுக்கிடையில் ஒலிக்கும் சிட்டுக்களின் கிச்கிச் ஒலிகள் அந்த நேரத்து உக்கிரத்திற்கு எங்கிருந்தோ வரக்கூடிய மாற்று. அடர்ந்த வெயிலை இந்த மெல்லிய குரல் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் அது ஏதோ செய்கிறது. மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்...

Monday, September 23, 2024

கவிமனம் - மதார்

சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”இனி அசையலாம் எல்லாம்” கவிதைத் தொகுப்பிற்கு மதார் முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரைக் கட்டுரை ”கவிதைகள்” இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.

”கவிஞர் தேவதேவன் வீட்டில் ஓர் ஆம்பல் குளம் உண்டு. வீட்டின் அருகிலுள்ள குழந்தைகளை ஆம்பல் குளத்திற்குள் கையை நனைக்கச் சொல்லி அதன் குளிர்ச்சியை உணரச் சொல்வார். உடனே நான்கைந்து மீன்கள் ஓடிவந்து குழந்தைகளின் கையில் அழுக்கு எடுக்கும். 'கூச்சமா இருக்கு' என்று சிரிக்கும் குழந்தைகளைச் சுட்டிக்காட்டி சொல்வார் "இவ்வளவுதான். இந்த chillness யை உணரவைத்தால் அதுதான் poetry". மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்...

Friday, September 20, 2024

முழுநிலவைக் கொண்ட

முழுநிலவைக் கொண்ட
கவியின் துயரோ

விழிகளாய் நிறைந்த
பறவையின் தோகையோ

என் செல்லமே,
நின் நீள்நெடுங் கருங்கூந்தல்?

Wednesday, September 18, 2024

எத்தனை கோடி…

நெய்யிட்டு சீப்பால் வாரிமுடித்து
பாதிக்குப் பாதி கருப்பும் வெள்ளையுமாய்
மின்னிய தன் கூந்தலை பின் கழுத்தில்
சிறகுகளாய் உயர்ந்த தன் கைவிரல்களால்
ரப்பர்பிடிவட்டம் கொண்டு
இணைத்துக் கொண்டிருக்கும் அழகை
இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான் அவன்

நிமிர்ந்தவர் ‘என்ன’ என
முகம் அசைத்து பார்த்தார் அவனை.

‘ஒன்றுமில்லை’ என்றான் அவனும் அதுபோல்

ஒன்றுமில்லாமல் இந்த உலகில்தான்
எத்தனை எத்தனை கோடி அழகுகள்!

Monday, September 16, 2024

கடவுள் – 3

இன்னும் இன்னுமாய் பெரிய பெரிய
வீணாற்றல்கள் நிறைந்த நம் உலகில்

அழிவற்ற பேராற்றலொன்றால்
ஆட்கொள்ளப்பட்டவர் போல்
அவர் காணப்பட்டார்!

எந்த இடங்களிலும் இல்லாமல்
அவர் எப்படி எல்லா இடங்களிலும்
இருக்கிறார்?

எந்தக் காலத்திலும் இல்லாமல்
அவர் எப்படி எல்லாக் காலங்களிலும்
நம் உடன் வருகிறார்?

உலகை உருப்படவே விடாத
வீணாற்றல்களையெல்லாம்
விழி கலங்க எட்ட நின்றே பார்த்தபடி…
கேட்கிறதா அவர் கூறுவது?

நான் என்ன செய்ய முடியும்
சுட்டிக் காட்டத்தானே முடியும்
நீங்கள் படைத்த இந்த உலகை
நீங்கள்தானே சரி செய்ய முடியும்

கண்டுகொள்வது ஒன்றுதானே தேவை
பார்வையினின்று பிறக்கும் பாதை வளர்வதற்கும்
களத்தை அடைவதற்கும்?

Friday, September 13, 2024

கடவுள் – 2

அவன் கடவுள் எனும் பெயரைக்
கையிலெடுக்கவும் ஏன்
மறைந்துபோகிறார் கடவுள்?
அவரால் கிளம்பும்
கொலைபாதகச் செயல்களையெல்லாம்
அவரால் அன்றி வேறு யாரால்
அத்துணை தெளிவாக அறிந்திருக்கமுடியும்?

பெயரில்லாதவரும் உருவமில்லாதவருமான
அவரின் நோக்கை அறிந்துகொண்டபோதும்
அவர் இங்கே உயிர்த்தபடிதானே இருந்தார்?
பெயரில்லாமையும் உருவில்லாமையும்கொண்டு
ஒளிரும் ஒவ்வொரு செயலிலும்
உலவிக்கொண்டுதானே இருக்கிறார் எப்போதும்?

Wednesday, September 11, 2024

கடவுள் – 1

இந்த மலைகளும் அருவிகளும்
பசும்வெளிப் பள்ளத்தாக்குகளும்
எப்போதும் மேகங்களைத் தூக்கிக்கொண்டு
பொழியத் தயாராயிருக்கும் வானமும்
கதிரவனும் வான்மதியும் சுடர்களும்
கடவுளாகத்தானே இருந்தனர்
அவன்
கடவுள் எனும் பெயரைக்
கையிலெடுக்கும்வரை?

Monday, September 9, 2024

மெய்மதம்

பயங்கரத் தீமைகளை விளைக்கும்
மத அடிப்படைவாதிகளும்
மதப் பழமைவாதிகளும்
மதச் சார்புடைய மனிதர்களும்தான்
எங்கிருந்து வருகிறார்கள்?

வழிபடப்படும் மதங்கள் எதுவானாலும்
மடமைகளின் போர்களின் துயர்களின்
பிறப்பிடமும் வளர்ப்பிடமும்
காப்பிடமுமே ஆவது எப்படி?

மனிதர்கள் கட்டத் தேவையில்லாத
கட்டமுடியாத
பெயர் எதையுமே ஏற்காத
எவ்வளவு சிதைக்க முயன்றாலும்
சிதைக்கவே முடியாத
கண்டுகொள்வதொன்றே
உறுதியானதான
மெய்யான மதமொன்றுள்ளதை
நாம் கண்டுகொள்ளவே இல்லையே ஏன்?

Friday, September 6, 2024

பவளமல்லி


அதிகமும் செயல் வேகம் கொண்ட
ஆளுமை நான்தான் என்றபடி
சிவந்த காம்புடன்
ஒரு வெண்ணிறச்
சுழல்வட்டமாக
நிறுத்தாச் சுழலுடன்
சுழன்று கொண்டிருந்தது
ஒரு பவளமல்லி!

தூண்டியது அவன் இதயத்தை!
சுழற்றி வீசியது!

பேரியற்கைப் பெருவெளியில்
இருப்பதற்கு ஓர் இடம் தேடி
இடம் காணாது
கண்டுகொண்டது காண்
நிறுத்தாச் சுழலுடன்
சுழலுவதே தனது இடம் என்று!

Wednesday, September 4, 2024

வானம்

ஒரு பறவையையோ விண்மீனையோ
நிலவையோ மரத்தையோ வரைந்துதான்
வானத்தைக் காட்டவேண்டுமென்பதில்லை

காணக் கண்ணிருந்தாலே போதும் என்றபடி
எங்குமிருக்கிறது வானம்!

Monday, September 2, 2024

வரைபடங்கள்

வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண
வரைபடம் எதற்கு?

வானமோ
இரு மண்துகள்களுக்கிடையிலும் இருக்கிறது.


- மாற்றப்படாத வீடு(1984) தொகுப்பிலிருந்து

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP