Monday, October 28, 2024

பதினெட்டாவது மாடி

ஊர்ந்து சென்றுகொண்டிருக்கும்
சின்னஞ் சிறு வண்டுகள் போன்ற
இந்த மனிதர்களுக்குத்தான் எத்துணை திமிர்!

உச்சியிலிருந்து சூரியன்
பார்த்துக்கொண்டிருந்தது!

Friday, October 25, 2024

இந்த அமைதியை

கொல்கத்தா பக்கம் கட்டிஹார் என்ற
சிறு நகரத்திலிருந்தது அவர்கள் இல்லம்.
சாலை ஒலிகளும் பள்ளிக்கூட ஓசைகளும்
ஒளிரும் அழகிய இடம்.
இந்த பெங்களூரு உபவனத்து
அடுக்ககக் கூட்டு வீடுகளின் அமைதியைத்
தாங்கமுடியவில்லை அவருக்கு.

அவன் சொன்னான்:
இந்த அமைதியைக்கொண்டு
என்னவெல்லாம் செய்யலாம் என
மேலும் அவன் விவரித்தான்.

அவர் சொன்னார்:
நான் என் ஓய்வுநேரம் ஒன்றில்
பஜனை பாட்டு வகுப்புக்கு
போகிறேன் என்றார்.

நல்லதுதான். எந்தப் பாட்டு என்றாலும்
இந்த அமைதியை விரட்டுவதற்காக அன்றி
இந்த அமைதியிலிருந்து
இந்த அமைதியை விளம்புவதற்காகவே
அது பிறந்திருந்தால்
அது எத்துணை நன்றாக இருக்கும்?

விடைபெறும்போது அவன் முகம்
அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்க
அவர் அதைக் கவனித்தாரா இல்லையா
என்று தெரியவில்லை…

Tuesday, October 22, 2024

இளைப்பாறுதலும் ஒளியும்

துயரப்படுவோரை நோக்கி
”என் அருகில் வாருங்கள்
நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருகிறேன்” என்றீரே
அய்யா, இவ்வுலகில் ஏராளம்பேர்
நீங்கள் சொல்லும் இளைப்பாறலை நாடாது
மூடத்தனங்களின் கீழ்
இளைப்பாறிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
அவர்களை வெளியே இழுத்து வந்து
முதலில் இந்த உலக துயர்களுக்குள்ளேயல்லவா
நாம் அவர்களை தள்ள வேண்டியிருக்கிறது?

அய்யா, இப்போதும் இவ்வுலகில் ஏராளம்பேர்
உங்கள் அருகில் வந்தமர்ந்து உங்களை துதித்தபடி
அதே மூடர்கள் போன்றுதானே
இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்?

இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
நீங்கள் அவர்களைத்
தங்களுக்கு உள்ளேயே இழுத்து வந்து
நீங்கள் இருக்கும் மெய்யான இடத்தையல்லவா
சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது?

தான் அழிந்த போது கற்றுக்கொண்ட
மெய்ம்மையை ஒவ்வொருவனும்
தான் இல்லாமல்தானே பரப்புகிறான்?

இருளை அழித்த ஒளி
அதைப்பற்றியா பேசிக்கொண்டிருக்கிறது?
பேசினாலும்
பெருமை சிறுமையுடனா பேச முடியும்?
இருள் என்றிருந்தது தான்தான் என்பதை
அறிந்துதானே ஒளியானது?

ஒளி என்பதும் தன்னை உணர்கையிலெல்லாம்
தன்னை அழித்துக்கொண்டே இருப்பதாலல்லவா
அது ஒளியாகவும் பேரொளியாகவும் உள்ளது?

Friday, October 18, 2024

இதுதான்

நீயும் கடவுளாக முடியாது
நானும் கடவுளாக முடியாது
ஆனால் கடவுளை எப்போதும்
நமக்குள்ளே உலவவிட முடியும்!

Wednesday, October 16, 2024

7

ஒன்று
ஏழாகியது
- ஆறு வந்து தன்னுடன்
சேர்ந்துகொண்டதால்தானே –
கெத்தாக
சற்றே சாய்ந்து நின்று
பார்க்கிறது உலகை?

Monday, October 14, 2024

உள்ளதுதான் மதம்

உள்ளதுதான் மதம்
நம்மால் உருவாக்கப்படுவதோ
உருவாக்கப்பட்டு
கடைபிடிக்கப்படுவதோ அல்ல

நல்லதுபொல்லதுகள் கொடுமைகள்
போட்டிகள் பொறாமைகள் மெதுவிஷங்கள்
பெருங்கொலைகள் பிரிவுகள் போர்கள் எல்லாம்
நம்மிலிருந்தும் நம்மால் கட்டப்பட்டும்
கடைபிடிக்கப்பட்டும் வருகிற
மதங்களிலிருந்தே பிறக்கின்றன
உள்ளதாம் மதத்திலிருந்து அல்ல

அன்பு என்பதும் அழகு என்பதும்
அறம் என்பதும்
உள்ளதாம் மதத்திலிருந்தே பிறக்கின்றன
நானிலிருந்தும் நம்மால் கட்டப்பட்டும்
கடைப்பிடிக்கப்பட்டும் வருகிற
மதத்திலிருந்தல்ல

அப்படியானால்
ஆலயங்கள் தரும் அமைதி நிம்மதி
ஆசுவாசம் அனைத்தும் பொய் என்கிறாயா?

அன்பா,
யாரும் இதற்குச் சொல்லும்
பதிலை நீ நம்ப வேண்டாம்
நம்புவதும் நம்பாமலிருப்பதும் ஒன்றேதான்
நீயேதான் கண்டுபிடி.

கவிஞன் என்று வந்துவிட்டதனால்
ஒன்று சொல்கிறேன்:
சாத்தான் தன்னைச் சாத்தான் என்றா
சொல்லிக்கொண்டு வருவான்?
கடவுள் என்றுதானே
சொல்லிக்கொண்டு வருவான்?

சாத்தான் வரும் வழிகளும் உலவும் வழிகளும்
சாத்தானுடையது போன்றா இருக்கும்?
கடவுளுடையது போன்றுதானே இருக்கும்?

துயர்களுக்கும் போர்களுக்கும் காரணமான
அன்பில்லாத, மதமில்லாத, ஓர் உலகை
சாத்தான்தானே படைத்திருக்க கூடும்?

நாம் எத்துணை எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
என்பதை அறிந்துகொள்ளும்வரை
உய்வில்லை, இல்லையா அன்பா?

Wednesday, October 9, 2024

கண்டுகொண்ட மயக்கத்தால்

கண்டுகொண்ட மயக்கத்தால்
காதலால்
பிறக்காத நடை ஒன்றால்
எடைகொண்டு சிதைந்ததுபோல்
அமர்ந்திருந்தான் அவன்.

ஒரு மரணமோ
துயிலோ
ஒரு நட்போ அல்லவா
வந்து அவனை
அணைத்துக்கொண்டால் தேவலை?

Monday, October 7, 2024

சடங்குவீடு

அவனது இளம்பருவத்தோழி
பெரியவளாகி அமர்ந்திருந்தாள்

இப்போதுதானா?

இத்தனை நாட்கள் பழக்கத்தில்
அவள் எத்தனைமுறைகள்
தன்முன் பெரியவளாகக் காட்சியளித்திருக்கிறாள்!
இன்றுதான் அவளுக்கு ஒரு
கவுரவவிழா நடப்பதுபோல்
பூரித்திருக்கிறது வீடு.

இனி அவளை நெருங்கவே
அவன் அஞ்ச வேண்டுமா? ஏன்?
அவனுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது
அவளோ ரொம்பவும் நிறைவும் களிப்பும்
கொண்டவளாயிருக்கிறாள்

பயப்படாதே
சிறுமியாகவும் இருக்கமுடியும்
என்று அவள் அவனுக்கு ஆறுதலளிப்பதுபோல்
கண்சிமிட்டிப் புன்னகைத்தபோதுதான்
அவனுக்கு உயிரே வந்தது காண்!

Friday, October 4, 2024

கணக்கும் கவிதையும் சேர்த்து

கணக்கும் கவிதையும் சேர்த்து
ஒரு பாடல் புனைந்திருந்தான் அவன்

கணக்கும் கவிதையும் அறிந்தவர்களெல்லாம்
கூடிவந்து பாடிப் பரவசமானார்கள்.

கணக்கு மேலோங்கி நிற்கும்போதெல்லாம்தான்
குழப்பங்களும் பிழைகளும் துயர்களும் போர்களும்
தோன்றித் தோன்றி வதைத்தன காண், உலகை!

Wednesday, October 2, 2024

என் கண்ணில் உதிரம் கொட்டியதென்ன?

எப்போதும்
குழந்தைமை மாறாச்
சொல்லுடையாள் – மருமகள் –
புதுவீட்டை அமைக்கும்
பணியிலிருந்த வேலையாட்களைவிட்டு
அவள் வெளியே செல்ல நேர்கையில்
என் கண்களில் உதிரம் கொட்டும்படியாய்
சொன்னாளே மறைந்துநின்றபடி
தன் கைச்சைகை கொண்டு
“அப்பா, keep an eye on them!”

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP