நடைபாதையிலும் திருமணமேடையிலும்…
நடைபாதையில் கோயில்வாசல்களில்
பிச்சைக்காரியாய் அமர்ந்துவிட்ட
அந்தப் பெண்ணுக்கு
அன்னை இல்லையா? காதலன் இல்லையா?
எப்போதாவது வந்து சிரிக்கவைக்கும்
கடவுள் போதுமா?
காமவெறியர்களையா தேடிக்கொண்டிருக்கிறாள்?
பிரச்னை உலகைக் கண்டுகொள்ளாமல்
புலனின்பங்களில் திளைத்துக்கொண்டிருக்கிறோம்!
எதையாவது யோசித்துக்கொண்டேயிருக்காமல்
நிகழ்காலத்துக்கு வா நிகழ்காலத்துக்கு வா என்று
அழைத்துச் செல்லப்பட்டுதான்
திவ்யா மேடம் திருமணவிழாவிற்கு அவன் வந்து நின்றான்.
நீங்கள் யாராயிருந்தாலும் சரி
எப்போதாவது - ஒரு கணம் –
நீங்கள் இதனைப் பார்க்கத்தானே செய்திருப்பீர்கள்
பற்றி சுடர் இயற்றத் தெரியாதவர்களாயினும்?
பழைய கவிதை புதிய கவிதை எனக் குழம்பாமல்
நித்ய சவுந்தர்யம் கொண்ட வாழ்வை
நித்யஸ்ரீயை
இயற்றுவதையே இலட்சியமாகக் கொண்டவர்கள்தாமே?
அன்னை தன் மகளையோ
ஆண்மகன் தன் காதலியையோ
அவள் தன்னைத் தானோ
இல்லை அழகின்மீதே அழகுதானோ
இப்படித்
தானற்ற வெளிதனிலே
தன்னை அழகுபடுத்திக் கொள்கிறது
பார்வையை அடிக்கோடிடுவதுபோல்
கண்களுக்கு மையிட்டுக்கொள்கிறார்கள்
புன்னகையை அடிக்கோடிடுவதுபோல்
இதழ்களுக்கு வண்ணம்…
தாவரங்களை நெருங்குபவர்களாய்
கூந்தலில் மலர்கள்…
தனித்ததொரு நட்சத்ரத்தைக் காட்டுவதும்
யாவும் ஒற்றை ஒற்றைத்
துளிகளால் மட்டுமே
என்பதைக் காட்டுவதுமாய் அமைந்த
மூக்குத்தி…
உதயசூரியனை நெற்றிப்பொட்டாகவும்
வண்ண மலர்களையெல்லாம்
ஒளிரும் நட்சத்திரங்கள் மின்னும் ஆடைகளாகவும்
சூட்டிக் கொள்கிறவர்கள் யார்?
அந்த நெற்றிச் சுட்டியும்
பார்வையும் ஒன்றே போதுமென்றாலும்
பூரண நிறைவடைந்துவிட்ட ஓருடலை
கைவளைகள் கால்கொலுசுகள் காதணிகள் என்று
எண்ணற்ற அணிகளால்
ஆராதிக்கும் வண்ணமாயும்
ஒரு செயல்முறைப் பாடமாயும்
சுட்டும் ஓர் அழகினைத்தானே
அலங்காரம் என்கிறோம்
மகாலட்சுமி என்கிறோம்
இன்று
மானுட இலட்சியம் என்கிறோம்
உள்ளதை அறிபவர்கள்தாமே நாம்?