அங்கே நிகழ்ந்தது
மேப்பில் உதிர் இலை நுனியில்
ஏதோ ஒரு காரணம் தீண்டி
முறிந்து மூளியாகிப்போன இடத்தில்
இழந்த உறுப்பை
வண்ணம் கொண்டு வரைந்துவிட்டான்.
இழந்துபோன ஒன்றை
மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி
அந்த மேப்பில் இலைகளுக்கு!
மலைமுடியில் எரிந்த ஒரு விளக்குபோலும்
சருகிலேயே ஒரு புதுச்சுடர்
பூத்ததுபோலுமல்லவா இருந்தது அது!
தன்னைப் பகிர்ந்துகொண்ட மனிதர்களாலும்
தன்னை முடிவின்மையில் வாழவைத்து
இரசித்துக் கொண்டிருக்கும் மனிதனாலுமல்லவா
அங்கே நிகழ்ந்தது ஒரு நிறைவாழ்வுப் பேரொளி!