அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு
அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு
ஆர்வத்துடன் பிதற்றும் கவிதை இது:
எல்லாம் எத்துனை சுலபமாகவும்
வேடிக்கையாவும் விளையாட்டாகவும்
இருக்கின்றன!
ஆறுக்கு ஆறு அடியுள்ள இரட்டைக் கட்டிலில்
குறுக்கே ஒரு திரை.
பத்தடி தூரத்தில்
எதிர் எதிரே உரையாடிக் கொண்டிருக்கும்
இரண்டு சன்னல்களையும் பற்றி
இணைத்தபடி நீண்ட கொடிக்கம்பியில்
நன்றாய்த் தொங்கும் அது.
இந்தப் பக்கம்,
அவன் வாசிப்புக்கும், கவிதையாக்கலுக்குமான
மின்விளக்கின் பேரொளி
அந்த பக்கம்,
அவன் துணைவியார் நல்லுறக்கத்துக்குகந்த
நயமான இருள்.
உறக்கமற்ற இரவில் அவன் துணைவியார்
உடல் அலுங்காமல் திரைவிலக்கி
எட்டிப் பார்த்துக் கொள்கிறார்…
கவிதைக் களம் என்ற இணைய இதழில் வெளிவந்தது.