Wednesday, August 13, 2025

காலத்தின் ஒரு விதையாகத்தானே…

காலத்தின் ஒரு விதையாகத்தானே
கருப்பைக்குள் ஊன்றப்பட்டது
ஒரு மனித உயிர்?

அது இயல்பாக அறிந்துள்ளது
காலத்தைத்தானே?
மரணத்தை அறிந்திருந்தால் அல்லவா
வாழ்வை அறிந்திருக்கும்?

மரணம் எங்கே?
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்
வீட்டையும் வெளியையும்
பிரித்துக் கொண்டு நிற்கும்
நிலைவாசல் போலல்லவா அது நிற்கிறது?

மரணத்தை அறிந்திராதவனும்
விலகி நிற்பவனுமான
மனிதனுக்கும் மனிதவாழ்வுக்கும்தான்
உய்வு ஏது?
நம் துயரங்களின் விளைநிலம்
காலம்தான் என்பதையும்
காலத்தையும்
காலத்தைக் கழுவித் தூய்மையாக்கும்
மரணத்தையும்
நாம் அறியாதவரை
நமக்கு விடுதலை ஏது?

நம்மால் உச்சிமுகரப்படும்
உயிர்ப் பிறப்பிற்காக
மானுடப் புதுவாழ்விற்காக
எப்போதும் தூய்மையின் உச்சத்திலிருக்கும்
நம் கருப்பையும் பிறப்புறுப்புமே
கழிவு உறுப்பாகவும் செயல்படுவது
இடையறாத தூய்மையினைச்
சுட்டுவதற்காக அல்லவா?
மரணத்தைச் சுட்டுவதற்காக அல்லவா?

மிகமிகச் சிக்கலாகிக் கிடக்கும் இந்த விடுதலை
மிகமிக எளிமையானதும்தானே?
முயன்றால்
மின்னற் பொழுதுதானே தூரம்?

Read more...

Tuesday, August 12, 2025

தேவதேவன், கவிதையின் மதம் - க சரத்குமார்

கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாதுகவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும்வேறு எதற்கும் கவிதையை மதிப்பிட அதிகாரம் கொடுக்கப்படவில்லை.



கவிதை என்பதை ரத்தினமாக பிரமிள் சொல்வதை குறிப்பிட்டுரத்தினம் ஒரே சமயத்தில் இயற்கையின் அற்புதத்தின் குறியீடாகவும்பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிக்கொள்ள செய்வதே கவிதை என்று குறிப்பிடுகிறார்.



 

முழுவதும் படிக்க...


Read more...

Friday, August 8, 2025

நத்தை

அடைய வேண்டிய இடத்தையும்
தன்னுடைய வீட்டையும்
பேரமைதி மிளிரும்
நிதானமான நடையையும்
கண்டு கொண்ட பேருயிர் !

தான் கண்டுகொண்டதிலேயே
மாட்டிக் கொண்ட சிற்றுயிர் !

Read more...

Wednesday, August 6, 2025

ஒன்றுதான் அது

ஒன்றுதான் அது
உள்ளதுதான் அது

ஆனால் அது
செயலாக வெளிப்படும்போது மட்டும்தானே
கடவுளாக இருக்கிறது?

தன்னை மய்யம் கொண்ட
எந்தச் செயலிலும் இல்லாதது

ஒன்றிலிருந்தும்
உள்ளதிலிருந்தும்
ஊற்றெடுத்து வருகிறது.

Read more...

Tuesday, August 5, 2025

அருகிருத்தல், தேவதேவன் – பிரீத்தி கருணா

நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்துஎதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார்தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ்வாறு பேச முடியும் என்றது கவிஞரின்கவிதையின் தீவிரத்தை உணர்த்தியதுநான் உணர்ந்த வரை அவர் நாள் முழுதும் திகழ்ந்ததுஉணர்த்த முனைந்தது– பேரன்புகருணைகளங்கமின்மைஉறுதிகாதல்காலமும் இடமும் இலாத நிகழ்தல்இன்னும் சொற்களால் என்னால் முழுமையாய் விளக்க முடியாத நிலை.


முழுவதும் படிக்க...




Read more...

Monday, August 4, 2025

நாம்தான் அது

அடைய வேண்டிய இடம்
என்று ஒன்றுண்டா?

இங்கே வந்துவிடுங்கள்
இங்கே வந்துவிடுங்கள்
என்று சொல்வதற்கு என்று
ஓர் இடம் கிடையாது
ஆனால்
இதை விட்டுவிடுங்கள்
இதை விட்டுவிடுங்கள்
என்று சொல்வதற்கோ
ஒவ்வொரு நொடியும்
ஒரு முந்தைய நொடி உள்ளது.

நாம் விட்டு விடுதலையாகி
நிற்கும் போதெல்லாம்
அடைய வேண்டிய இடத்திற்குத்தான்
வந்து சேர்ந்துவிடுகிறோம்.

அது ஒரு இடம்கூட அல்ல
நாம் தான் அது
இந்த பேரண்டம் !
எந்த ஒரு சொல்லிலும்
சிக்கிக் கொள்ளாது
ஒளிரும் பேருண்மை!
அல்லது
ஒளி மற்றும் பேருண்மை!

எதுவானாலும் சரி
அது சொல்லப்படுமபோது அல்ல
விட்டு விடுதலையாகி
ஒரு பொருளாகவோ செயலாகவோ
இருக்கும்போதுதான் அது உண்மை.

இப்போது "நாம்தான் அது" என்ற சொல்லை
எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறோம்?

Read more...

Friday, August 1, 2025

ஒரு பறவை?

மானுடத் துயர் கலக்காத
எத்தகைய அமைதிப் பெருவெள்ளத்தைப்
பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கிறது
வானளாவிய பெருமரத்தின்
உச்சாணிக் கிளையில்
வந்தமர்ந்து கொண்டிருந்தது?

பெயரும் உருவமுமில்லாத ஒன்றின்
சிறியதொரு பெயரும் உருவமும்?

மோனப் பெருவெளியின் ஒரு பிஞ்சுக்
குரல் சொல் உரு.

ஒரு சொல்லால் அனைத்தையும்
உபதேசித்து விட முடியுமா?

அங்கிருந்து- அசையாமல்
அது நின்று கொண்டிருந்தது-
நகர்ந்தது. அபூர்வமாய்!

வானில் சிறகடிக்கும் ஒரு பறத்தல்
உபதேசமும் உபதேசப் பெருக்கமுமான
வியர்த்தம்தானா?
தானே இல்லாதபோது தான் எப்படி
அதை உபதேசித்திருக்க முடியும்?
ஒரு சொல்தானே பறந்து கொண்டிருந்தது
அதில் எங்கே இருக்கிறது உபதேசம்?
ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க முடியும் உண்மைக்கு
பிறருடைய இடம் எங்கிருக்கிறது ?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP