ஒரு பறவை?
மானுடத் துயர் கலக்காத
எத்தகைய அமைதிப் பெருவெள்ளத்தைப்
பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கிறது
வானளாவிய பெருமரத்தின்
உச்சாணிக் கிளையில்
வந்தமர்ந்து கொண்டிருந்தது?
பெயரும் உருவமுமில்லாத ஒன்றின்
சிறியதொரு பெயரும் உருவமும்?
மோனப் பெருவெளியின் ஒரு பிஞ்சுக்
குரல் சொல் உரு.
ஒரு சொல்லால் அனைத்தையும்
உபதேசித்து விட முடியுமா?
அங்கிருந்து- அசையாமல்
அது நின்று கொண்டிருந்தது-
நகர்ந்தது. அபூர்வமாய்!
வானில் சிறகடிக்கும் ஒரு பறத்தல்
உபதேசமும் உபதேசப் பெருக்கமுமான
வியர்த்தம்தானா?
தானே இல்லாதபோது தான் எப்படி
அதை உபதேசித்திருக்க முடியும்?
ஒரு சொல்தானே பறந்து கொண்டிருந்தது
அதில் எங்கே இருக்கிறது உபதேசம்?
ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க முடியும் உண்மைக்கு
பிறருடைய இடம் எங்கிருக்கிறது ?