காலத்தின் ஒரு விதையாகத்தானே…
காலத்தின் ஒரு விதையாகத்தானே
கருப்பைக்குள் ஊன்றப்பட்டது
ஒரு மனித உயிர்?
அது இயல்பாக அறிந்துள்ளது
காலத்தைத்தானே?
மரணத்தை அறிந்திருந்தால் அல்லவா
வாழ்வை அறிந்திருக்கும்?
மரணம் எங்கே?
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்
வீட்டையும் வெளியையும்
பிரித்துக் கொண்டு நிற்கும்
நிலைவாசல் போலல்லவா அது நிற்கிறது?
மரணத்தை அறிந்திராதவனும்
விலகி நிற்பவனுமான
மனிதனுக்கும் மனிதவாழ்வுக்கும்தான்
உய்வு ஏது?
நம் துயரங்களின் விளைநிலம்
காலம்தான் என்பதையும்
காலத்தையும்
காலத்தைக் கழுவித் தூய்மையாக்கும்
மரணத்தையும்
நாம் அறியாதவரை
நமக்கு விடுதலை ஏது?
நம்மால் உச்சிமுகரப்படும்
உயிர்ப் பிறப்பிற்காக
மானுடப் புதுவாழ்விற்காக
எப்போதும் தூய்மையின் உச்சத்திலிருக்கும்
நம் கருப்பையும் பிறப்புறுப்புமே
கழிவு உறுப்பாகவும் செயல்படுவது
இடையறாத தூய்மையினைச்
சுட்டுவதற்காக அல்லவா?
மரணத்தைச் சுட்டுவதற்காக அல்லவா?
மிகமிகச் சிக்கலாகிக் கிடக்கும் இந்த விடுதலை
மிகமிக எளிமையானதும்தானே?
முயன்றால்
மின்னற் பொழுதுதானே தூரம்?