Tuesday, November 27, 2012

மாற்றப்படாத உலகம்

தாமதத்தின் காரணங்களைச் சிந்தித்தபடிக்
கனன்று கொண்டிருந்தது அந்த மாலை,
கல்யாணமாகி வருடங்கள் சில கழிந்தும்
குழந்தை உருவாகாத்தெண்ணிக் குமைந்த துயர் நடுவே

குற்றவுணர்ச்சியால்
கனன்று கொண்டிருந்தது அந்த மாலை,
இந்த உலகைச் சரி செய்வதற்குள்
காத்திருக்கப் பொறுமையின்றி
குழந்தைகளைப் பெற்றுப்
பரிதவிக்க விட்டுவிட்டோமே என்று

துயரம் அகன்று
இன்மை கனன்றுகொண்டிருந்தது அந்த மாலை,
’உங்களுக்காக
இவ்வுலகைச் சரி செய்வதற்காகவே
நான் பிறந்துள்ளேன்’ என்பதுபோல் சிரித்த
ஒரு குழந்தை உதித்ததைப் பார்க்கச்சென்ற இடத்தில்

மீண்டும்
தாமதத்தின் காரணங்களைச் சிந்தித்தபடிக்
கனன்று கொண்டிருந்தது அந்த மாலை,
கண் முன்னே குழந்தைகள் வளர்ந்து
தங்கள் பெற்றோர்களைப் போலவே
உருமாறிக்கொண்டிருந்த நிதர்சனத்தைக்
கண்ணீர்மல்கக் கண்ணுற்றபடி

Read more...

Monday, November 26, 2012

அம்மாவின் விளக்கும் அகற்றப்படாத இருளும்

இருள் மெல்லக் கவியத் தொடங்குகையிலும்
அம்மா, உங்களிடம்தான் எத்தனை நிதானம்!
பதற்றமேயில்லாப் பேரமைதியுடன் எழுந்து சென்று
சிம்னி விளக்கையும்
மண்ணெண்ணெய் மணம் வீசும் துண்டுத் துணியையும்
விளக்கைக் குலுக்கிப் பார்த்துக் கொண்டபின்
மண்ணெண்ணெய்ப் புட்டியையும்
மெல்லசைவால் சோதித்தபடியே தீப்பெட்டியையும்
சாம்பல் பொடியையும் எடுத்துக்கொண்டு
அம்மா, நீங்கள் தார்சாவில் கால் மடித்து அமர்ந்தபோது
அந்த அதி உன்னதச் செயலால் ஈர்க்கப்பட்டவனாய்
நானும் உங்களோடு அமர்ந்தேன்

விளக்கைத் துடைத்து முடித்து
அதைத் திறந்து எண்ணெயிட்டு
திரியினைத் தொட்டுத்தடவிச் செம்மைப்படுத்தி
சாம்பல் பொடிகொண்டு சிம்னியைத் துலக்கியபின்
உங்கள் தீக்குச்சி உரசலில் நிகழ்ந்த உச்ச அனுபவத்தையும்
மாறாத நிதானத்துடனேயே
நீங்கள் கை கூப்பித் தொழுததையும்
நான் வியந்து போய்ப் பார்த்திருந்தேன்

அதைத் தூக்கிக்கொண்டு எழுந்து
காற்றில் அது நடுங்கி அணைந்து விடாதபடி
உள் வீட்டுக்குள் பக்குவமாய் எடுத்துச செல்ல
நீங்கள் முன் நடக்கையில்
அதே வேகத்துடன் இருள் உங்கள் பின்னாலேயே
பொல்லாத வக்கணைத் திமிருடன் தொடர்கிறது!
உங்கள் முன்னுள்ள இருளும் அதே வேகத்துடன்
அச்சமோ குற்றவுணர்வோ இரக்கமோ
கிஞ்சித்தும் இல்லாத எதிரியின் எகத்தாளத்துடன்
உங்களையும் உங்கள் நடையையும் நையாண்டி செய்தபடியே
கால்களைப் பின்னே பின்னே வைத்து நடந்து
நீங்கள் நின்றதும் சற்றே தள்ளித்
தானும் நிற்கிறது

அம்மா,
அகற்றப்படாத இருளிடையேதான்
நீங்கள் இயற்றிய எளிய விளக்கு அற்புதம்
உங்களைப் போலவே அமைதியுடனும்
அடக்கத்துடனும் தன்னியல்பான பீடுடனும்
எவ்விதத் துக்கமுமின்றி
தன் செயலே தானாகச்
சுடர்ந்து கொண்டிருக்கிறதம்மா இன்றும்
என் இதயத்தில்

Read more...

சொற்களும் நம் பசிகளும்

இறந்து கிடக்கும் பெண்ணின் மார்பில்
எவ்வளவு நேரம் பால் சுரக்கும்?
மடிந்து போன பிணத்தின் மவுனம்
எவ்வளவு காலம் வழிகாட்டிக்கொண்டிருக்கும்?

பிணங்களைத் தூக்கிப் புதைப்பதற்கு
யார் சொல்லித் தர வேண்டும்?
பிணத்தைப் பிணமென்று காண்பதற்கு
தேவைப்படுவதுதான் என்ன?

தெரிய வேண்டியவை தெரிகையில்தான்
நடக்க வேண்டியவை நடக்கின்றன.
நடக்க வேண்டியவை நடக்கும் போதுதான்
நம் பசிகள் தணிகின்றன

பசியுள்ள நமக்கு வேண்டியது உணவு.
சொற்களல்ல; சொற்களெனில்
வெற்றாரவார முழக்கங்களாக அன்றி
இருக்க வேண்டும் அவை:
மரணத்தையும் உயிர்ப்பிக்கக்கூடிய
குழந்தைமை வேகம் மற்றும்
நுண்பெருக்கிக் கருவிகளாய்!
அல்லது தரிசனங்களாய்!

Read more...

Sunday, November 25, 2012

தன்னந் தனியே வெகுநேரமாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது...

இந்த நிராதரவையும் அச்சத்தையும்
தோற்றுவித்தது யார்? ஏன்?

போ போ என்று விரட்டுகிறாய் யாசகனை
அல்லது முகம் திருப்பிக் கொள்கிறாய் அவன் ஊனத்திற்கு
அல்லது ஒரு சில்லறை எடுத்து ஈகிறாய்
அல்லது எந்த ஒன்றினாலும் திருப்தியடையாது
மிகப் பெரியதோர் குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டதுபோல்
அமைதியின்றிக் காணப்படுகிறாய்

காலங்காலமான
அநீதிகளின் சவுக்கடிகளால் விளைந்த
வறுமையின் மனச்சிதைவும் வக்கிரங்களுமான
மனிதமுகக் கோரத்தின் கைநீளம் கண்டு
உன் படைப்புச் சக்தி
மருண்டு மவுனமாகியதென்ன பரிதாபம்!

தனித்திருந்து உணர்ந்து
தன் புனைவுகளால் வனைந்து வனைந்து
வெளிப்படுத்தியது-தன் எழிலே ஆகிவிட
தானே முகர்ந்து முகர்ந்து களித்ததிலேயும்
பெருகியிருக்க வேண்டாமா அந்தத் தணல்?
புனைவுகளின் திரைமறைவிற்குள் முகம் மூடி
ஒளிந்து மக்கி மடிந்து
அணைந்து போக வேண்டுமோ அந்த நெருப்பு?

முழுக்கக் குழந்தைகளாய் நிறைந்திருக்கும்
பேருந்தொன்று
உன்னைக் கண்டும் நிற்காமல்
கையசைத்துச் செல்கிறதுதான்
எத்தனை பெரிய அவலம்!

Read more...

இதோ இந்த அரிய பழம்

எந்தாயும் வாயடைத்து நிற்க
எந்தை எனக்குக் கொடுத்தது
அதாவது
எப்போதும் என் கையிலிருக்கும் கனிதான்

இது, கைப் பிடியளவு கடல்;
சமுத்திரத்தின் ஒரு துளி;
ஓடும் நதியில்
நக்கும் நாய்க்குக் கிடைத்த
ஒரே பேறு;
கானலெங்கும் மூச்சிரைக்க ஓடி
வேர்த்துக் கசகசக்கும்
உன் உள்ளங் கையிலும்-
கருணை கொண்டு
பிசுபிசுத்து நெளியும் ஓர் ஈரம்;
மின்னற்பொழுதே தூரத்தின்
சிருஷ்டிக் கனல்

நமக்குக் கிட்டாத இக் கனியன்றோ மயில்வாகனனே,
நம்மிடமுள்ள விஷமனைத்திற்கும் காரணம்!
நம்மிடமுள்ள விஷமன்றோ, என் செல்லத் தம்பீ,
இக் கனி நமக்குக் கிட்டாமைக்குக் காரணமும்!

Read more...

Saturday, November 24, 2012

இந்த அழகான பூமியை…

நன்றாக நிறைத்தவாறு
கட்டிவிட்டோம் நாம்
மிகப்பெரியதொரு விபச்சார விடுதியை
அல்லும் பகலும் ஓய்வின்றி
ஆடல் பாடல் சரசம் சல்லாபம் கொண்டாட்டம்
கேளிக்கைகளின் நீச்சல் குளக் கும்மாளம்
ஓர் எளிய மனிதனுக்கும்
அதுவும் வாழ்வின் ஒரு பகுதியானதால்
அதனுள் நிகழும் விழாக்களனைத்துமே
சவச் சடங்குகளாகி விட்டன வெனினும்
அன்பும் ஆனந்தமும் அங்கே
அறவே அகற்றப்பட்டு விட்டனவெனினும்
அவன் அதனுள்ளே நுழைய இயலாத துயரம்

அடிக்கடி அவனுக்குக்
கதவு அடைக்கப்படுவதை எண்ணியோ
அடிக்கடி அவனும்
அக்கதவருகே வந்து நிற்பதை எண்ணியோ
கவலைப்படுவாரில்லை

அப்பெரும் விடுதியின் ஆரோக்யமின்மை குறித்தும்
அது ஏற்படுத்தும் அழிவுகள் குறித்தும்
அதற்குள் நுழையவே விழையாத மனிதனைக் குறித்தும்
சிந்திப்பவரே இல்லை

எனினும்
சூரியனும் நிலவும் பூமியும் காற்றும்
அவ்விடுதியை வெறுத்து ஒதுக்குவதில்லை
எனினும்
அதி சுரணைமிக்க அவற்றின்
பேரொழுங்கு நடவடிக்கை என்று
ஒன்றுண்டெனவே அஞ்சுகிறேன்

Read more...

வரிசை மாறாமல் ஊர்ந்து செல்லும் எறும்புகள்

1.
’ஓ, கடவுளே! எத்தனை பிரகாசம் இந்த உலகம்!’
கனகாலம் மருத்துவமனைப் படுக்கையிலிருந்துவிட்டு
வெளியே வந்து
விக்கித்து நின்ற வேளை நான் சொன்னது அது
நண்பர்கள் புன்னகைத்தார்கள்
வீதியில் போவோர் வருவோர் மற்றும்
இப் பூமியெங்கும் உறைவோர்
எவரிடமும் அந்த மகிழ்ச்சியைக் காணமுடியாது
வருந்தினேன்

2.
அப்பா,
எதற்கெடுத்தாலும்
’பெரிய இவன் மாதிரி’ பேசுகிறாய் என்று
நீங்கள் காதைத் திருகி வலிக்கும்போதெல்லாம்,
பெரிய இவன் மாதிரியானவர்கள் தவிர
உங்கள் அனுபவத்தில்
பெரிய இவன் மாதிரியானவர்கள் தவிர
உங்கள் அனுபவத்தில்
’பெரிய இவன்’ ஒருவரையும் நீங்கள்
பார்த்திருக்கவில்லை என்ற உண்மைதான்
என்னை அழவைத்தது

3.
கோயிலைச் சுற்றி உலகமே கூடியிருந்த
ஒரு கொண்டாட்ட தினத்தில்
இரத்தம் சொட்ட வானிலிருந்து
விழுந்தது ஒரு பறவை.
நீதி வெறிகொண்டு ஓடிவந்தவன்
வலி தாங்கியபடி முட்டி நின்றான்
கருவறையில் ஒரு வெற்று நாற்காலியைக் கண்டு
பின்னும் தணியாத-வேக வெறியில்
அவன் அங்குபோய் அமர்ந்தான்
வேறு ஒரு வழியும் காணாததால்
நான் ஒருவனே வழி, ஒரே வழி என்றபடி
எவர் ஒருவராலும் நிரம்பாதபடி
வெறுமை தாங்கி
ஒவ்வொருவருக்குமாய்க் காத்திருந்தது
அந்த நாற்காலி

4.
எந்த ஒரு தீவிரம்
விளையாட மனமற்றவனாய்
அவனை அடித்து நிறுத்தியது?
இன்னதென்றறியாத வியாகூலத்தால்
தனித்துப் போய்
பாய் விரிக்காத வெறுந்தரையில்
கண்ணிமைக்காது படுத்திருந்தான்,
(அன்று பள்ளிக்கூடம் இல்லையோ,
அவன்தான் போகவில்லையோ)
வரிசை மாறாமல் ஊர்ந்துசெல்லும்
எறும்புகளைப் பார்த்தபடி
தன் கண்ணீரை வெளிக்காட்டாது
சிறு உணவுத் துண்டுகளையும் இனிப்பையும்
அவற்றிற்கு வழங்கி
அவை மொய்த்துத் தின்பதையும் இழுத்தபடி செல்வதையும்
பார்த்தபடி இருந்தான்
மகிழ்ச்சியோ துக்கமோ அற்ற
ஒரு விளையாட்டாகத்தானிருந்தது அதுவும்
பல காலம் உடன் வாழ்ந்து
அவர்களை நன்கறிந்தவன்போல்
பெருமூச்செறிந்தான்
ஒரு பிரமாண்ட உருவத்தோடு அங்கிருந்தபடி
அவர்களோடு அவன் விளையாடியதையும்
இமைக்காமல் அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருந்ததையும்
அவர்கள் அறியாதவரோ?
காலம்காலமாய் ஒரு மாற்றமுமில்லாமல்
ஒருவர் பின்புறத்தை ஒருவர் முகர்ந்தபடி
வரிசை குலையாமல்
அவர்கள் சென்றுகொண்டிருப்பதைக் காணக்
கண்ணீர் பொங்கிக் கொண்டுவந்தது அவனுக்கு

Read more...

Friday, November 23, 2012

அறிமுகம்

விழிகள் விரிய இப் புவியைக் கண்ட
அந்தக் குழந்தைக்கு
ஓர் அய்யம் தோன்றியது:
தன் கண்வழி தான் காணும் காட்சிகள்தாம்
பிற மனிதர்களாலும் காணப்படுகிறதா?
இத் தேடல்தானோ வாசிப்புலகிற்குள்
ஒரு நீண்டபயணம் போகத் தூண்டியது?
அங்கே அது கண்ட ஓர் அருமைதானோ
அதனைத் தற்கொலையினின்றும் காத்தது?
நிகழ்வொன்றைக் கண்ட இருவர் கண்கள்
ஒருவரையொருவர் பார்த்தும் புன்னகைத்தும் கொண்டதில்
அதன் தேடல் நின்றது

கலைகளால் அது ஆகர்ஸிக்கப்பட்டது
முடிவற்ற ஒரு கடற்கரை நடையில் ஒரு நாள்
கடல் தன் அழகுப் பொருள்கள் சிலவற்றை மாதிரியாய்
அதன் கால்களில் இடறும்படியும்
கண்களில் படும்படியும் அதனிடம் வீசியது
தான் ஒருக்காலும் புனைவுகளில் ஈடுபடும்
கலைஞனாகப் போவதில்லை எனும் ஒரு தீர்மானம்
தலைதாழ்த்தி மண்டியிட்டு அங்கே நிறைவேறியது

உன்னதக் கலைஞர்களை அது இனம் கண்டது
ஞானிகளுக்கு அடுத்தபடியாக
அவர்கள்மீதே அது ஆர்வம் கொண்டது
அவர்களது அருமை அதன் துக்கமாயிற்று
அன்னவர் நீங்கலான எண்ணற்ற கலைஞர்களின்
இரைச்சல்களுக்கு நடுவே அது வாழ்ந்தது

அது மனிதர்களோடு உரையாட விரும்பியது
உரையாடியது
கவிதை என்றும் கவிஞன் என்றும் அழைக்கப்பட்டது
கவிஞன் ஒரு நாளும் கலைஞன் அல்லன் என்பதை
அது உரத்துக் கூறியது. எச்சரித்தது.

குழந்தைமையும் மேதைமையும்
இணைபிரியா இரட்டையர்கள் எனக் கண்டது
மரணத்திடமிருந்து மவுனத்தையும்
வாழ்விடமிருந்து சிறு குரலையும் பெற்று
தன் சுரணையுணர்வையும் பரவசப் பாட்டையும்
மொழிவழி பொழிந்தது
பேரறிவையும் பெருங்கருணையையும்
ஒரு பார்வையாய் ஈந்தது
ஈடு இணையற்றதோர் தொழிலில்
ஈடுபடுவதுபோல் செயல்பட்டது
அதன் செயல் கவிதையாகவும்
செயலின்மையே
மாபெரும் கலையான வாழ்வாகவும்
சுடர்ந்தது

அது தன் இறுதியாகக் கூறியது:

கடவுளுக்கு எதிரான முயற்சியில்
ஒருகணமும் சோர்வுகொள்ளாது,
வரும் குழந்தைகளுக்கெல்லாம் பூணூலை
மாட்டிக்கொண்டேயிருக்கிற மனிதன்,
காடுகள் அழிந்துவிட்டன என்றும்
மனித உறவுகள் நசிந்துவிட்டன என்றும்
சூழல் மாசுபட்டு
போரும் வறுமையும் பெருகிவிட்டன என்றும்
கவலைப்படுவதில்லை உண்மையில்

Read more...

மேடை

திடீரென்று துண்டிக்கப்பட்டு
அமர்ந்துவிட்டது அவனது பேச்சு
(எத்தனை வருத்தத்திற்குரியது!)

அம்மேடை கவுரவத்தின் பீடமாய்க் கட்டப்பட்டிருக்கையில்
மேடை சுற்றிகளும்,
புகழையும் அதிகாரத்தையும்
நிராசையுடன் ஏறிட்டுப் பார்க்கும் வறிய முகங்களும்,
அந்தரங்கமான ஓர் உரையாடலுக்குச்
செவி பழகியிராத பரிதாப முகங்களும்,
எக்குழுவையும் அனுசரிக்காத உண்மைநிலையை
வெறுப்புடனும் பதற்றத்துடனும் பார்க்கும்
அம்மேடை மனிதர்களுமே குழுமி நிறைந்து...
அசவுகரியமான இரைச்சலாகி இருப்பதுதானே விதி
(பின்னர் பேசிய அம்மேடை மனிதர்களும்
அவன் பேச்சினைக் குதறியும்
அவன் மவுனத்தை நகையாடியும்
கெக்கலிப்பதுதானே விதி)

ஆழ்ந்த அக்கறை கவனமெனும் அன்பு
தேவைப்படுகிற
ஓர் உரையாடலை மட்டுமே விழையும் நாம்,
இசைவு தெரிவிக்குமுன்
அல்லது பேசத் தொடங்குமுன்னாவது
இம் மேடை பற்றி அறிந்திருக்க வேண்டியதுதானே
முக்கியமானது?

Read more...

Thursday, November 22, 2012

மேடை

காரில் சென்றனன் பேச்சாளன்
எழுந்து நின்று பின்புறம் தட்டிக்
கலைந்து சென்றது பொதுஜனம்
உடன் கிளம்பத் தோது என்று
ஓரமாய் அமர்ந்தவரும்,
மிதிவண்டியை நிறுத்திவிட்டு
புழுதி அப்பிக் கொள்ளுமென்று
ஒதுக்கமாய்
இடுப்பில் கையூன்றி, பின்
சிந்தனையாய் முகம் வருடி
மிகக் கவனம் – கைகட்டி,
’பார்க்கலாம்!’ என்றாற்போல்
கால் மாற்றி மாற்றி, இவர்தான்
அனுமதிக்கிறவர் போன்று
இடையிடையே கைக்
கடிகாரம் பார்த்து
நின்றுகொண்டே கேட்ட
ஒயிட்காலர்களும்
வேகமாய்ப் போய்விட்டார்கள்
பால்கனிகள் மேல் அமர்ந்து
கீழ் நோக்கி... செவி சாய்த்தவரும்
மாயமாய்ப் போனார்கள்
வீட்டினுள் இருந்துகொண்டே
எட்டிக் கேட்டவர்கள்
ஜன்னலை அடைத்துக்கொண்டு
பத்திரமாய்ப் படுத்துக்கொண்டார்
காடா விளக்கேற்றி
கடலை விற்றவனும்
கூடை தூக்கித் தேனீயாய்
அலைந்து விற்றவனும்
அப்போதே போய்விட்டார்கள்
ஒலிபெருக்கிக்காரனும் விளக்கணைத்துக்
கழட்டிக் கொண்டுபோய்விட...
அப்பாடா...! எனப்
பொட்டலக் காகிதங்கள் மட்டுமே
உருண்டு உருண்டு
சிரிக்கும் மைதானம் பார்த்து
நெடுமூச்செறிந்து
நிமிர்ந்தது மேடை நிம்மதியாய்!
வீட்டுத் துயரங்கள் தாளாத ஓர் ஏழை
’இன்றைக்கு இங்கேயா?’ என்ற சலிப்புடன்
முண்டாசுச் சுருள் அவிழ்த்து
மேடைப் பலகைமேல்
தூசு தட்டி விரித்துப் படுத்தான்
மேடை மீண்டும் சஞ்சலமாக

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP