மேடை
காரில் சென்றனன் பேச்சாளன்
எழுந்து நின்று பின்புறம் தட்டிக்
கலைந்து சென்றது பொதுஜனம்
உடன் கிளம்பத் தோது என்று
ஓரமாய் அமர்ந்தவரும்,
மிதிவண்டியை நிறுத்திவிட்டு
புழுதி அப்பிக் கொள்ளுமென்று
ஒதுக்கமாய்
இடுப்பில் கையூன்றி, பின்
சிந்தனையாய் முகம் வருடி
மிகக் கவனம் – கைகட்டி,
’பார்க்கலாம்!’ என்றாற்போல்
கால் மாற்றி மாற்றி, இவர்தான்
அனுமதிக்கிறவர் போன்று
இடையிடையே கைக்
கடிகாரம் பார்த்து
நின்றுகொண்டே கேட்ட
ஒயிட்காலர்களும்
வேகமாய்ப் போய்விட்டார்கள்
பால்கனிகள் மேல் அமர்ந்து
கீழ் நோக்கி... செவி சாய்த்தவரும்
மாயமாய்ப் போனார்கள்
வீட்டினுள் இருந்துகொண்டே
எட்டிக் கேட்டவர்கள்
ஜன்னலை அடைத்துக்கொண்டு
பத்திரமாய்ப் படுத்துக்கொண்டார்
காடா விளக்கேற்றி
கடலை விற்றவனும்
கூடை தூக்கித் தேனீயாய்
அலைந்து விற்றவனும்
அப்போதே போய்விட்டார்கள்
ஒலிபெருக்கிக்காரனும் விளக்கணைத்துக்
கழட்டிக் கொண்டுபோய்விட...
அப்பாடா...! எனப்
பொட்டலக் காகிதங்கள் மட்டுமே
உருண்டு உருண்டு
சிரிக்கும் மைதானம் பார்த்து
நெடுமூச்செறிந்து
நிமிர்ந்தது மேடை நிம்மதியாய்!
வீட்டுத் துயரங்கள் தாளாத ஓர் ஏழை
’இன்றைக்கு இங்கேயா?’ என்ற சலிப்புடன்
முண்டாசுச் சுருள் அவிழ்த்து
மேடைப் பலகைமேல்
தூசு தட்டி விரித்துப் படுத்தான்
மேடை மீண்டும் சஞ்சலமாக