நான் என்பது பற்றி
மனிதனின் முதல் பிரக்ஞையைக்
குறிக்கும் சொல்
ஆதி முதல் வார்த்தை
சொல்லில் விளக்கப்படமுடியாத
ஓர் அனுபவ நிலை. அதாவது
தன் பொருளை மறைக்கத்
தானே திரையாகி நிற்கும் விசித்திரச் சொல்
இந்த விசித்திரச் சொல்லின் வேறுவேறு பெயர்களே
அனைத்துச் சொற்களும்!
இக் கவிதையை எழுதுகிறவன் நான் அல்ல
எழுதுவிப்பவனே நான்
அது தனிமையை உணரும் ஒரு சொல் அல்ல;
தனக்கு வெளியே என்று ஒன்றுமில்லாத
முழுமையைக் குறிக்கும் ஒரு சொல்
எளிதில் துன்புறுத்தப்பட்டுவிடக் கூடிய
ஆளுமை அல்ல; ஆளுமையின்மையெனும்
பேராளுமையின் நற்பெயர். இவ்வாறு
இருப்பும் இன்மையுமான அனைத்தையும் குறித்துவிடும்
உன்னதமானதோர் ஒற்றைச் சொல்
நானே கடவுள்; ஆம்
மாபெரும் பொறுப்பிற்கு
நாம் சூட்டியுள்ள பெயர்
சுயநலப் பொருமலோ சகமனிதப் போராயுதமோ
மடியோ மந்தமோ அறிவீனமோ அல்ல;
நான் என்பது பேரன்பு, எழுச்சி, நுண்ணறிவு
சுரணை மற்றும்
அச்சமறியாத அறச் சீற்றமேயாம்
நானே சத்தியமும் ஜீவனும்
நானே வழியும் ஒளியும்
ஆகவேதான்
நானெனும் தன்னைப் பற்றிய அறிவே
ஒருவனுக்கு வேண்டப்படுவனவற்றிலெல்லாம்
மிகப் பெரியதாய் இருக்கிறது
இச் சொல்லை அதன் பொருள்பட
உச்சரிக்கத் தெரிந்தவனே கவிஞனாகி விடுகிறான்