புத்த பூர்ணிமா
சித்தார்த்தா!
வீட்டின் நான்கு சுவர்களுக்குள் எரியும் விளக்கு
வெளியே இருளைத்தான் வீசும்.
ஓங்கி வளர்ந்ததோர் கம்பத்தின் தேசியக் கொடிக்கு
போர்க்குரல் ஒன்றே தெரியும்.
உன் இளவரச வாய்ப்பும் சுகபோகமும்-
விரிந்துகொண்டே போகும் வறுமை, கொடுமைகளை
நிறுத்த அறியாது
உன் ஆருயிரும் இன்பமுமே போன்ற
வீட்டினையும்
ஆன்மிகப் பெருமைகளும் பற்பல பவிஷுகளுமிக்க
உன் நாட்டினையும்
நாளை அதனை ஆளப் போகும்
இளவரசன் நான் எனும் வாய்ப்பினையும்
வெளியே யாருக்குமே தெரியாதபடி
இவ்விரவில் நடந்து முடிந்துவிடும் ஒரு காரியம் போல்
இதய ரகசியமாய்
நீ இப்போதே உணர்ந்து துறந்து
விட்ட பின்னே-
பார் மகனே!
இம் முழுநிலவொளியில்
சாந்தி மிளிரும் இப் பூமியின் பேரெழிலை!