மலர்களும் உயிரற்ற பிரதிமைகளும்
புரிபடாத பிணியொன்றால்
நலிந்து துவண்டிருந்த என் குழந்தையை
என் செல்லத்தை –
யாரோ உற்றறிந்து குணமாக்கவல்ல
மருத்துவன் மருத்துவன் எனச்
சளைக்காமல் தூக்கிக்கொண்டு நடந்தேன்
ஊர் ஊராய், தேசம் தேசமாய், காலம் காலமாய்
சற்றே இறக்கிவைத்து
மூச்சு வாங்கி நின்றதோர்
பூந்தோட்டத்தின் குளிர்நிழலில்...
சோர்வுற்ற என் துளிரின் கண்மலர்த் திறப்பு. ஆ!
வெடுக்கென்று துடித்து மடிந்துவிட்டவளே போன்று
அவளை மயங்கிவிழச் செய்த காட்சி என்னவோ? ஏன்?
கழுகின் கொதிக்கும் பாதநகங்களோ எனக்
கூடையுடன் மலர் கிள்ளும் ஒரு பூசாரியின் கைவிரல்கள்!