செவ்வாய்க் கிரகத்தில்
நீர்ச்சுவடு கண்டால்
போய்க் குடியேறிவிடலாமே எனத்
துடிதுடிக்கும் அரைகுறை ஞானத்
திமிர்கனலும் விஞ்ஞானிகளே,
தாகத்துடன் இங்கே
ஒரு குவளைத் தண்ணீரைப் பருகும்போது
இந்த பூமியினது
அருமையினை நீவிர் உணர்ந்ததுண்டா?
மழையை
வான்தரும் கொடை, பேரருள்
எனப் பொங்கிப் பரவசிக்கிறவர்களும்
மழை பொய்க்கும்போதும்
வெள்ளம் நிலநடுக்கம் என்று
இயற்கை சீறும்போதும்
அன்பில் நாம் தவறியதுதான் காரணமோ
என்று பதறுபவர்களுமான
எளிய மனங்கள் குறித்து
உங்கள் விஞ்ஞானம் உரைப்பதென்ன?
அதாவது,
கவிதை குறித்தும்
இப்பூமியினைப் பேணத் தவிக்கும்
தாய்மை குறித்தும்?