நவராத்திர கொலு
இந்த வருஷக் கொலுவில் – அசத்துவதற்காக
வாங்க வேண்டிய புது பொம்மை குறித்து
யோசித்துக்கொண்டிருந்தாள் வசுந்தரா
அவன் அஞ்சினான் அவனையும் ஒரு பொம்மையாக
அதில் அமர்த்திவிடுவாளோ என்று
கொலு அவளுக்கு அழகு
அதைக் காண்பதும் காண்பிப்பதுமான மகிழ்ச்சியே
அவளது கொண்டாட்டம்
அப்பொம்மைகளை வணங்கி
பாடி துதித்து உண்டு உபசரித்து களிப்பதே
புண்ணியம் தரும் நற்செயல், வழிபாடு
புத்தாடை உடுத்து நல்லநாள் வழக்கமென்று
அவள் அவன் காலில் விழுந்து அவனை வணங்குகையில்
அவன் அச்சம் கூடிற்று
அந்த நவராத்திரி இரவுகளில்
கொலுவும் பூஜையும்
விருந்தினர்களும் குழந்தைகளுமாய்
விழாக்கோலத்தில்
வீடு கலகலவென்றிருப்பது யாருக்காவது கசக்குமோ?
இதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ
நீங்கள் ஒரு பக்கத்தில் பேசாமல் அமைதியாய்
உட்கார்ந்திருந்தால் போதும் என்றாள் அவள்
அவன் அவளிடம் தோற்று
மடிந்துவிட்டவனே போலானான்
உதட்டில் புத்தரின் புன்னகையையும்
உள்ளே கிறிஸ்துவினது போன்ற துக்கத்தையும்
வைத்துக்கொண்டோ அவன் அமர்ந்திருந்தான்
பொம்மையாகிவிட முடியாக் கனவினால்?