சுத்தோதனம்
என் குற்றவுணர்வையும் கண்ணீரையும் ஒளித்துக்கொண்டு
இன்முகம் காட்டி நாளும் இன்பக் காட்சிகள் நடித்தேன்
பொல்லாத இவ்வுலகின் புன்முகங்கள் தெரிந்து விடாதபடி
பொத்திப் பொத்தித்தான் வளர்த்தேன் உன்னை
இயற்கையின் அற்புதங்கள் எல்லாமே உன்னை மகிழ்விக்க
யாரோ உனக்குக் காட்டும் கிலுகிலுப்பைதானோ என்றிருந்தது
கைக்குழந்தை உனக்குக் கிலுகிலுப்பை காட்டிக்கொண்டு
சுற்றமும் சூழலும் வந்து அழகழகாய் நடித்தார்கள்
எனது காபந்துகளெல்லாம்
எவ்வளவு நாளுக்குச் செல்லுபடியாகும்?
ஒவ்வொன்றுக்கும் தலையில் இடி விழுந்தாற்போல்
அதிரும் என் துயரும்தான் மடிந்தொழியாதா?
உனது அம்மா-அதுதான் எனது பங்குதாரிணி-இனிய பாதி-
ஒத்துழைக்காததால் நடந்துவிடுகிற
முதல் வாக்குவாதத்தின்போதே நான் அழுதேன் உனக்காக
பீதி உன் மனதில் உள்நுழைந்திருக்குமோ என்று அஞ்சி
உன் புத்துணர்வும் கூர்மையான விழிகளும்
என் கண்ணே, என் ஆருயிரே!
எத்தனை முறை அவை என்னைத் துவம்சித்திருக்கின்றன
என்பதற்குக் கணக்குண்டா?
அப்படி என்னைப் பார்க்காதே குழந்தாய்!
என்னை மன்னித்துவிடு! இப்போது
வேதனையுடன் உன்முன் தலைகவிழ்ந்து நிற்பதைத் தவிர
வேறொன்றும் செய்வதற்கில்லையே என் கடவுளே!