வீழ்த்தப்பட்டு...
...வெட்டுண்டதுபோல்
கட்டிலில் கிடக்கும் நோயாளி
எழமுடியாமல் எழுந்து நடக்கமுடியாமல் நடந்து
அவனை நெருங்குவதற்குத்தான்
எத்தனை பாடு!
உயிர் தீண்டி உலுக்கும்
அவனது பலவீனமான குரலின் தீவிரமான
அந்தக் கேள்விகளைக் கேட்ட பின்னே,
இரண்டு இட்லிகளாக மாற முடியாததும்
மருந்தாக மாற முடியாததும்
அவன் நிமிர்ந்து நிற்க
ஊட்டமளிக்க முடியாததுமான ஓர் ஓவியத்தை
இனியும் ஒருவனால் எப்படி வரைந்துகொண்டிருக்க இயலும்?
சரி, இந்த நினைவு இருக்கும்வரை ஒருவன்
எப்படி தூரிகையைத்தான் தூக்க முடியும்?
மறதி மூடிய வாழ்விலிருந்து
ஆர்வத்தினாலும் தியானத்தினாலும் உந்துதல் பெற்ற மனம்
வரையும் ஓவியங்களின் உள்ளுறைவான குறிக்கோளும்
வேறென்னவாக இருக்க முடியம்?