மலர்களும் உயிரற்ற பிரதிமைகளும்
வழக்கமான மொட்டைமாடியில்
மாலை நான் வந்தமர்ந்தவுடனே
ஏறிட்ட என் கண்களில் – சில நாட்களாய்
அகலாது பட்டுக்கொண்டே இருந்தது
அந்தக் காட்சி:
மலர்ச்செண்டை நீட்டும் ஒரு காதல் கரம்போல்
வான் நோக்கி நீண்ட ஒரு தனிப் பூங்கிளை...
மனிதர்களிடமிருந்து நாம் கற்றறிந்ததைத்தானோ
இங்கே இப்பேரியற்கையிடமும் காண்கிறோம்?
இல்லை, இத் தரிசனத்திலிருந்துதான்
மனிதர்கள் கற்றுக்கொண்டனரோ
ஒரு காதல் வெளிப்பாட்டை?
பூ அலங்காரங்கள், பஷ்பாஞ்சலிகள்
பூ வைத்தல் பூ கொடுத்தல் என்று
பூக்களோடுதான் தொடர்கிறது நமது பண்பாடெனினும்
காதல்தான் கடுகளவும் இங்கே
காணமுடியாத்தென்ன? எப்படி?
ஆசையுடன் கொய்து
தன் தலையில் சூடும் ஓர் உயிரை
தமக்குள் பரிமாறிக்கொள்ளும் இரு உயிர்களை
தன் மேஜையை அலங்கரிக்கும் ஒரு குடும்பத்தை
பூக்கோலத் திருவிழாவாய்க் கொண்டாடும் ஒரு ஜனவெள்ளத்தை
நாம் புரிந்துகொள்கிறோம்
காலையில் மலரும் ஒவ்வொரு மலரும்
கூறுகின்றனவே கடவுளின் செய்தியை! காதலை!
எந்த எண்ணங்களால் மலர்ந்தது இம்மலர்?
எந்த நம்பிக்கைகளால்?
எந்தப் பண்பாடு உருவாக்கிற்று இம்மலரை?
பூத்த சிறுபொழுது நேரத்திற்குள்
இளம் விதவைகளைப் போலும்
ஏழைகளைப் போலும்
தாழ்த்தப்பட்டவர்களைப் போலும்
பொட்டுக் கட்டப்பட்ட தேவரடியார்களைப் போலும்
உயிரற்ற பிரதிமைகள் மீது
சாற்றப்படவும் வீசி எறியப்படவும் –
அஞ்ஞானத்தின் குரூரமும் குருட்டுத்தனமுமான விரல்கள்
அருவருக்கத்தக்க கூர்மையுடனும் வேகத்துடனும்
திருகித் திருகிக் கொய்து-
துவளத் துவளச் சேகரிக்கப்பட்ட காட்சி கண்டு
அந்த அதிகாலைச் சூரியனும் வானும்
அமைதியிழப்பதனைக் கண்டோமா நாமும்?