நான் யாரா? -2
மனித சமூகத்தினிடையே
சுயாதீனமாய் நடமாடமுடியாதபடிக்கு
மிதித்துச் சவட்டித் தாழ்த்தப்பட்டோன்
ஆற்றாமைகளின் சிதறல்களாயிருந்தவன்
ஊமையாயிருந்தவன்
எனினும் அச்சத்தின் அளவுகோல் காட்டுவதுபோல்
ஒருநாளும் கோழையாகிவிட முடியாதவன்
இன்று தன் துயர்அளவு காரணமாய்
பெருந்தனியன் ஆனவன்
எல்லா நம்பிக்கைகளையும் துறந்தவன்
எல்லாவற்றையும் சந்தேகிப்பவன்
கேள்வி கேட்பவன்
ஜாக்ரதையானவன்
துணிந்துவிட்டவன்
தன்னைத் தானே கடைத்தேற்றிக்கொள்ளும்
மீமிகைப் பெருங்கனலால்
கடவுளானவன்
முழுமையானவன்
மெய்ம்மையுணர்ந்தோன்
புனிதமானவன்
பேரருளாளன்
புத்தன்
தலித்