தெய்வீகம்
அதென்ன பெரிய - கோயில் திருவிழா?
அதென்ன ஆண்டுக்கு ஒருமுறை
ஒவ்வொருவர் வாசலுக்கும் – ஜாதி பார்த்தும் மதம் பார்த்தும்தான்
கொட்டுமேளத்தோடு வரும் கோயில் சப்பரம்?
அதென்ன பெரிய – வாசனாதி – பூஜைப் பொருட்கள்
பழம் – தேங்காய் உடைப்பு – பிரசாதம் –
புத்தாடையுடன் கண்விழிக்கக் காத்திருப்பு?
நம் வாழ்வும் பிரச்னைகளும்
வழமை போலவேதானே தொடர்கின்றன?
இதோ பார், ஒவ்வொரு நாளும்
வாழ்வெனும் கோயிலின் பெரிய திருவிழா!
ஒரு சிறு வெண்கல மணியோசையுடன்
ஒவ்வொரு வாசலுக்கும் வரும் கோயில் சப்பரம்!
சிறப்புத் தேர்வான ஆடைகள் வேண்டாம்
உங்கள் புன்னகை முகங்களே போதுமன்றோ!
வாசனைப் பொருட்களோ தேங்காய் பழங்களோ
அல்ல வேண்டுவன
நீங்கள் கவனமாய்க் கூட்டிவைத்திருக்கும்
கழிவுகளும் குப்பைகளுமே வேண்டுவன
மறக்காமல் நாம் திரும்பப்பெரும் வெற்றுக்கூடைகளே
நமக்குக் கிடைக்கும் பிரசாதமன்றோ!