புத்த பூர்ணிமா
கண்முன்னே
இருட்பெருங்கருங் கடலின் ஓயாத பேரொலி,
எங்கும் தன் இருள் பூசி விட்டபின்
அமைதியான வேளை...
வானத்து ஒளியும்
தூரத்து மின்விளக்குகளும் மட்டுமே
ஒளிவீசிக்கொண்டிருந்தன. ஆனால்
ஒளி பற்றிய அக்கறையோ
இருள் பற்றிய கவலையோ சிறிதுமின்றி
அக்கடற்கரைப் பூங்காவின் ஒதுங்கிய ஒரு மூலையில்
அசையாத ஒரு கற்சிலைபோல் அமர்ந்திருந்தான் அவன்
அவன் இதயத்திலிருந்துதான் இப்பிரபஞ்சமே தோன்றி
அவன் கண்ணெதிரே
இத் துயர் உருக்கொண்டு இறைஞ்சுகிறதோ?
அவன்தான் கடவுளா?
அல்லது
இப்பொழுதும், இப்பொழுதின்
சாந்நித்தியமுமா?
திடீரென்று
கண்ணெதிரே தோன்றி நிற்கும்
இவ்வகண்ட பொருள்தான் என்ன?
உதிக்கும் இப் பூர்ணிமை நிலவின்
விந்தை?
அட!
இருள் தன் சுவடற்றுப்
போனவிடம்தான் எங்கே?
போனவிதம்தான் என்ன?