வருகையாளர்கள்
வாயில் கதவின் தாழ்ப்பாள் திறக்கும் ஒலியும்
ஆளை விசாரித்து
”மேலேதான் – போங்கள்” என்னும்
பதில் பெற்றுக்கொண்டு
மாடிப் படிக்கட்டுகளில்
நடந்துவரும் ஒலியும் கேட்டன
வரும் அந்த நபர்
ஏற்கனவே நம்மைச் சந்தித்தவர்தான் எனில்
இன்று மீண்டும்
அவர் நம்மைக் காண வருவதன் நோக்கமென்ன?
பக்கபலத் துணை தேடியா?
தன்னறிவிலாத் தப்பித்தலின் வடிகாலாகவா?
ஓர் உயர்தரமான பொழுதுபோக்கா?
ஆறுதல் வேண்டியோ?
சிறு இளைப்பாறலுக்கா? எதையாவது
பெற்றுக்கொள்ளலாமெனும் ஆசையினாலா?
தன்னிடமுள்ளதையெல்லாம் அள்ளி அள்ளி வழங்கி
மற்றவர்முன் தானே தன்னை வியந்து
வீங்கிக் கொள்வதற்கா?
அது-
நோக்கமற்ற ஓர் அளவளாவலாய்
பகிர்தலாய்
தீவிரமானதோர் விசாரணையாய்
ஒரு புன்னகையாயிருக்கலாகாதா?
நேசமெனும் போர்வைக்குள்தான்
எத்தனை எத்தனை இரங்கத்தகு பாத்திரங்கள்!