செல்வி அம்ருதா
பாப்பா என விளிக்கப்படுவதை
ஆட்சேபிக்க வேண்டும்போல் கிளர்ந்தேன்
முழு வளர்ச்சியொன்றின் பூப்பையும் கனிவையும்
உள் உணர்ந்தவள்போல் பொங்கி நின்றேன்
அற்புதமொன்றின் வெளிவிளக்கமோ என் உடல்?
ரசித்து ரசித்து மாளவில்லை
உணர்ச்சிப் பெருக்கினால்
அழகான ஆடைகள் எண்ணற்றன உண்டாக்கிவிட்டேன்
ஆடைகளின் விதங்கள் கூடின எனினும்
எந்த ஒரு ஆடையும் என் அழகைக் குறைத்துவிட
அனுமதிக்கவில்லை என் கவனம்
சிக்கென உடையணிந்தேன்
இப் பெண்ணுடல் அழகு
ஆணுடலை ஈர்க்கும் பொறியோ தந்திரமோ அல்ல
தானே தனக்குள் நிறைந்த முழுமை
பேரெழில், உன்னதப் படைப்பு
கவனி:
பாலிலி இனப்பெருக்கம் செய்யும் ஓருயிரியாய்
மனிதன் படைக்கப்பட்டிருந்தால்
இன்றிருக்கும் ஒற்றை மானுட உடல் எதுவாயிருக்கும்? சொல்
’அள’ என்று நிமிர்ந்துநிற்கும் என் உடலை
நெருங்கி அளவெடுக்கக் கூசும் தையற்காரா...
வீதியில் போகும்போது
என்னை விநோதமாய் உறுத்துப் பார்க்கும் அசடே!
அச்சம் அசூயையினால் சிதைவுண்ட வேட்கையின்
கழிசல் பார்வைகளே!
எம் அழகையும் சிரிப்பையும்
விளம்பர சாதனமாக்கும் சாமர்த்தியங்களே!
இன்னும் கூர்ந்து பாருங்கள்:
உம்மை விலக்கி நடக்கிறது இவ்வுடல்
எத்தனை அழகுடன்! எத்தனை தீரத்துடன்!
எத்தனை கம்பீரத்துடன்! மற்றும்
எதனின் விளம்பரமாய்?