சாத்தானின் சுவடுகள்
நல்ல மனிதர்களுக்கு
நிறுவனம் இரண்டாம் தேவை
மற்ற மனிதர்களுக்கோ
அது முதல் தேவை
அலைகடல், பெருமழை மற்றும்
கவியுளத்திற்கோ இவ் விசாரமேயில்லை
முகிழ்க்கும் என் எண்ணங்களை அவதானித்தபடி
இதந்தர அசையும் மரச்செறிவையும் மனசை
அமைதியிழக்கச் செய்யும் குயில் கூவல்களையும் கேட்டபடி
பெரிய மனிதர் ஒருவரின் வரவேற்பறையில் காத்திருந்தேன்
புகழும் செல்வாக்கும் அதிகாரமும் உள்ள ஒருவரிடம்
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
அவர் உண்மையின் பாதையைச் சுட்டும் மொழிகளை
சுய மையமற்ற தகிப்போடுதான் சொல்கிறாரா?
இல்லை, சும்மா அறிந்து வைத்துக்கொண்டு
உலகை ஏமாற்றுகிறாரா? எனில் ஏன் அப்படி?
நல்ல மனிதர்களின் ஞான மொழிகள்
மற்ற மனிதர்களின் பேராசைக் கைகளில்
சாத்தான் ஓதும் வேதங்களாகின்றன
மனம் நொந்த அச்சொற்களோ நன்றியுடன்
அசல் மனிதர்களை நோக்கித் திரும்பி
அக்கறையுடன் போதிக்கின்றன
”நீ பேசும் சொற்களை எவனும் பேசிடுவான்,
நீ பேசாத சொற்களைப் பேசு!” என்று
சாத்தான்களின் வேலை எப்போதுமே
காலத்தை அபகரித்துத் தன்னாட்சி செய்வதுதான்.
காலச்சுவடோ, சாத்தான்களின் காமச் சுவடோ...
காலத்தின் வெற்றிக் கள்ளச் சிரிப்பே தொடர்ந்து ஒலிக்கிறது
அலைகடலோ பெருமழையோ கவி உளமோதான்
அழிக்கிறது காலச்சுவடுகளை!
ஏமாற்றமும் தெளிந்த நல்லறிவும் கனக்க
அந்த வரவேற்பறையை விட்டு எழுந்து சென்றேன்.
கடவுளுக்குச் சற்றும் குறையாத விழிப்புடன்
சாத்தான் ஒன்றின் காட்சி–ஒலிப்-பதிவுக் கருவியும் எழுந்து
என்னைக் கண்காணித்தபடியே தொடர்கிறது,
ஏதாவது ஒரு மல உணவு தனக்குக் கிடைக்காதா என்று
அதுவும்தான் எத்தனை அழகு!
எவ்வாறு நாம் அவனை வெறுக்க முடியும்?
நன்மையை நோக்கியே மிக அழுத்தமாய்
நம்மை விழிப்புடன் நடக்க நிர்ப்பந்திக்கும்
அவனும் நம்முடனேதானே வாழ்கிறான்!