தங்க லெட்சுமி
இச் சந்திப்பிற்காகத்தானோ
இந்தப் பணியிடைப் பயிற்சி?
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்
என் இளமையிலும் நான் உன்னைச் சந்தித்திருக்கிறேன்
இதே போலவே என்உள்ளங் கொள்ளை போகக்
கவரப்பட்டிருக்கிறேன்.
அதே மாறாத ஈறு-பல்-இதய முழுச்சிரிப்பு!
காலத்தால் சிதைக்கவே முடியாத ரகசியமாய்
நிலைபெற்றிருக்கும் உன் குழந்தைமையின்
இரகசியம் யாது தேவி?
நிகழும் உன் உடலின் ஒவ்வொரு அசைவிலும்
உயிரின் பரவசம் தரும் அதே மின்னல்!
பொங்கிப் பொங்கித் ததும்பும் ஓர் ஆனந்தம்
உன் உள்ளில் எப்போதும்
உயிரின் பாடலை
முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறதெப்படி?
படைப்பின் பூரண நிறைவை
உயிரின் அணையாத ஆனந்தச் சுடரை
போர்க்களத்தூடும் புயல் வெளியூடும்
நீ தொடர்ந்து பாதுகாத்து வந்து நிற்கும்
சாகசம் கண்டு விக்கித்து நிற்கிறேன் நான்!
உன் அண்மை அருவி பாய்கிறது என் மேல்.
பாறை விலக்கம் தண்ணொளி மாறா நதியாய்
விலகிச் செல்கிறது
பெருமழை பொழிவதற்கு
அரைக் கணம் முந்திய மேகம்போல்
மனம் விம்மிக் கண் ததும்ப வைத்துவிட்டது
உன் இறை வணக்கப் பாடல்.
உனக்குப் புலமை போதாத மொழியானதால்
வீட்டில் எழுதிக் கொடுத்த அறிக்கையை
நன்றியுரையை அவைக் கூச்சமற்ற
உன் மாறாத பொலிவின்
கம்பீர மின்னலொளிர வாசிக்கிறாய்!
பெண்கள் குழுவிலிலேயே புலமை மிக்கவளாய்த் தோன்றிய
பெண்மணி ஒருத்தியும் உனக்கருகேதானிருக்க
சிறுபான்மை ஆண்களிலொருவனாயிருக்கும் என்னிடம் வந்து
உன் சந்தேகத் – தெளிவை நீ தீர்க்க வந்து நிற்கையிலும்
என் மகிழ்ச்சியையும் மீறி, நான் அதைக் கேட்கையிலும்
உன் பதிலை நான் எதிர்பாராதவன் போலும்
நீயும் அதை அறிந்து வந்த காரியத்தை முடித்துச் செல்ல
கடந்து சென்ற அந்த நிமிஷ வெள்ளத்தில்
உன் மாறா இளமையினதும் அழகினதும்
இரகசியத்தை அறிந்தேன் தேவி
தங்கக் கழுத்தணி ஒன்று
இத்தனை காதலுடனும் அர்த்தத்துடனும்
ஒரு கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்ததை
இதுவரை நான் எங்கும் கண்டதில்லை, தாயே!