தன்னந் தனியே வெகுநேரமாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது...
இந்த நிராதரவையும் அச்சத்தையும்
தோற்றுவித்தது யார்? ஏன்?
போ போ என்று விரட்டுகிறாய் யாசகனை
அல்லது முகம் திருப்பிக் கொள்கிறாய் அவன் ஊனத்திற்கு
அல்லது ஒரு சில்லறை எடுத்து ஈகிறாய்
அல்லது எந்த ஒன்றினாலும் திருப்தியடையாது
மிகப் பெரியதோர் குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டதுபோல்
அமைதியின்றிக் காணப்படுகிறாய்
காலங்காலமான
அநீதிகளின் சவுக்கடிகளால் விளைந்த
வறுமையின் மனச்சிதைவும் வக்கிரங்களுமான
மனிதமுகக் கோரத்தின் கைநீளம் கண்டு
உன் படைப்புச் சக்தி
மருண்டு மவுனமாகியதென்ன பரிதாபம்!
தனித்திருந்து உணர்ந்து
தன் புனைவுகளால் வனைந்து வனைந்து
வெளிப்படுத்தியது-தன் எழிலே ஆகிவிட
தானே முகர்ந்து முகர்ந்து களித்ததிலேயும்
பெருகியிருக்க வேண்டாமா அந்தத் தணல்?
புனைவுகளின் திரைமறைவிற்குள் முகம் மூடி
ஒளிந்து மக்கி மடிந்து
அணைந்து போக வேண்டுமோ அந்த நெருப்பு?
முழுக்கக் குழந்தைகளாய் நிறைந்திருக்கும்
பேருந்தொன்று
உன்னைக் கண்டும் நிற்காமல்
கையசைத்துச் செல்கிறதுதான்
எத்தனை பெரிய அவலம்!