அலுவலகத்தில் அவசரமான வேலைகள்
தன் உச்சபட்ச வேகத்தில்
விரையும் குதிரைக் குளம்பொலிக்க
இருக்கை புகைய, ஈரமெலாம் ஆவியாக,
தூசுப்படலத்தால் அறை மறைய,
அவள் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள்
எழுத்துக்கள் ஒவ்வொன்றும்
இனம் கண்டு – பிடித்து- அறைந்து நிறுத்தப்பட்ட
எதிரியின் முகத்தில் – குத்துச் சண்டை வீரன்
ஆத்திரத்துடன் மொத்தும் குத்துக்களாய் விழுந்தன
முடிந்ததும் கைக்குட்டையால் முகம் ஒற்றுகையில்
உடம்பெங்கும் பொங்கி விரலெங்கும் வழியும் கருணையுடன்-
இரத்தம் வழியும் எதிரியின் முகத்தை அவள் துடைத்தாள்
உடனடியாகக் குருதியில் கலக்கக்கூடிய மருந்தை
ஊசியின்றி உடலுக்குச் செலுத்த முடியாது
சற்று நேரம் இவனைக் கொன்று கிடத்தாமல்
அறுவை மருத்துவம் பண்ண முடியாது...
விரல் நுனிகளில் குத்திக் கொள்ளாமல்
ஒரு குண்டூசியை எடுக்க அவளுக்குத் தெரிகிறது
கூர்மைக்கு மறு நுனியிலிருக்கும் மழுங்கை
கூர்மைக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தவும் தெரிகிறது
இரு புறமும் கூரான வாளையும் தெரியும் என்கிறாள்
நறுக் நறுக்கென்று
அதைப் பயன்படுத்தும் கருவியையும்
தன் மேஜைமேல் வைத்திருக்கிறாள்