நீள் நெடுங் கருங் கூந்தல்!
அதன் ஒரு நுனியோ
பாதாளக் கரண்டியின் கொக்கி
பாதாளத்துள் படிந்து கிடக்கும்
அந்தப் பொருள்? கடவுளே, நானா?
இதயம் துடிக்க அண்ணாந்து நோக்குகையில்
அங்கே ஒளிர்ந்தது ஒரு முழு நிலவு
மறுநுனிகளெல்லாம் சேர்ந்தாற்போல்
இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் அந்த முகம்!
என்ன ஆச்சரியம்! எத்தனை கருணை!
என்னைக் கண்டுகொள்வதற்காகவே
எத்தனை விசாலமான கண்களிருக்கின்றன அதற்கு!
என்னைச் செவிமடுக்கவே உண்டான செவிகள்!
இரு துளை நாசி, என்னைப் போலவே
இங்கொரு வாழ்க்கை வாழ
என்னோடு உரையாடுவதற்கென்றே மலர்ந்துள்ள இதழ்கள்!
காதல் என்பதே கண்டுகொள்ளல்தானோ?
உப்பரிகையிலிருக்கும் காதலியை நோக்கி
வீசித் தொங்கவிடப்பட்ட நூலேணியாய்,
பாதாளக் கரண்டியாய், கருநெடுங் கூந்தலாய்
மின்னி நெளிந்துகொண்டிருக்கிறது எப்போதும்
மனிதர்க்கு முன்னே அவர் துயர்