கருத்தரங்கம்: நவ.16, 2002
இந்த மேடை நாற்காலியில் வந்து
அமர்ந்திருக்கையில்
நான் ஒன்றை
மிக எளிதாகத் தெரிந்துகொண்டேன்;
யார் யார் எங்கெங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்பதே அது
நான் எழுந்து பேசத் தொடங்கும்போது
ஒவ்வொருவரையும் அழைத்துவந்து
இந்த நாற்காலியில் அமர்த்தவே விரும்பினேன்
பார்வையாளராய் வந்தமர்ந்திருக்கும் அன்ப!
அறியாது
என்னை உன் வியப்புகளால் அலங்கரிக்கவோ
கேள்விகளால் துளைத்தெடுக்கவோ எண்ணி
நீ எழுந்து நிற்குமுன்...
நீ அமர்ந்திருக்கும் இடத்தைக் கவனி
மேடையிலிருப்பவர்களை மட்டுமே உனக்குத் தெரிகிறது
முன் அமர்ந்திருப்பவர்களின்
முதுகுகள் மட்டுமே தெரிகின்றன
பின் அமர்ந்திருப்பவர்களையோ
நீ காண இயலாது
ஓரம்சாரம் நிற்பவர்களையும் நீ காண்பதில்லை
சில வேளை, சிறுசிறு இடைவேளைகளின்போது
இவர்களையும்
உன் அக்கம்பக்கம் அமர்ந்திருப்பவர்களையும்
தலை திருப்பிக்
காண்கிறாய் எனினும்
இதழ்களில் முகிழ்க்கும் புன்னகை சொல்லிவிடவில்லையா,
அவர்களும் உன்னதைப் போன்ற ஓரிடத்தில்தான்
அமர்ந்திருக்கிறார்கள் என்று?
(ஆகா! என்னே சகமனித நேச பாச சல்லாபங்கள்!)
நான் உன்னை இக்கூட்டத்தில் இனம் கண்டு
கைகூப்பி அழைப்பது உனக்குத் தெரியவில்லையா?
கிட்டுவதும் குட்டுவதும் மட்டும்தான் உனக்குத் தெரிகிறதா?